கடல் கடந்து தமிழ் வளர்க்கும் ஈரோடு மங்கை
|நமது தமிழ்நாட்டின் மஞ்சள் மாநகரான ஈரோட்டின் மங்கை ஸ்ரீரோகிணி, தமிழை கடல் கடந்து வளர்த்து வருகிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செட்டிலாகினாலும், அங்கு தமிழ் மொழியை வளர்க்கும் பல்வேறு முயற்சிகளில் களமிறங்கி இருக்கிறார்.
கற்றல் கல்வி மையம் ஒன்றை நிறுவி, அதன் மூலம் அங்கு வசிக்கும் தமிழ் குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் தமிழை கற்றுத்தருகிறார். ஐக்கிய அமீரகத்தில் அஜ்மானில் பிரதான அலுவலகமும், துபாய், சார்ஜா, அபுதாபியில் கிளைகளாகவும் செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் தாராபுரத்தில் அரசு பணியில் இருந்து கொண்டே கிடைக்கும் நேரத்தில் அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் திருக்குறளை கற்றுக்கொடுத்தார். திருமணத்துக்கு பிறகு அமீரகம் சென்ற அவர் அங்கேயும் தன்னுடைய தமிழ் பணியை தொடர்கிறார். இது குறித்து ஸ்ரீரோகிணி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
''எனது தந்தை ராஜசேகரன் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ரேவதி ஆடை வடிவமைப்பாளர். தம்பி மதன்ராஜ் கணினி பொறியாளராக இருக்கிறார். கணவர் சே.தியாகு, துபாயில் உள்ள தனியார் அலுவலகத்தில் தொழில்நுட்ப முன்னணியாளராக பணியாற்றுகிறார். எங்களுக்கு ரிதனி காதம்பரி என்ற மகள் இருக்கிறார்.
எனது தமிழ் ஆர்வத்துக்கு முதல் காரணம் எனது தந்தை தான். அவருக்கு தமிழ் மீதும், திருக்குறள் மீதும் அலாதி பற்று. அதை உணவு வடிவில் எனக்குள் பாய்ச்சினார். அந்த காலத்தில், காலையில் டிபன் உணவு மிகவும் அரிதானது. பண்டிகை தினங்களில்தான் இட்லி கிடைக்கும். ஆனால் எனக்கு தினமும் இட்லி சாப்பிட ஆசை. அதை தந்தையிடம் கூறவே, ஒரு திருக்குறளை படித்து மனப்பாடம் செய்து ஒப்புவித்து, ஒரு இட்லி வாங்கிக்கொள் என்றார். அதிலிருந்து திருக்குறளை ஒப்புவித்து தினமும் காலையில் இட்லி சாப்பிட ஆரம்பித்தேன். அன்று என் தந்தை உணவோடு சேர்த்து ஊட்டிய திருக்குறள், இன்று உலகத்தமிழ் ஆராய்ச்சியாளராகவும், திருக்குறள் பரப்புரை ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றும் அளவுக்கு என்னை மாற்றி இருக்கிறது'' என்பவர், திருக்குறளை மையப்படுத்தி பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
''5-ம் வகுப்பு படிக்கும் போது 1,330 குறட்பாக்களையும் விளக்கத்துடன் ஒப்புவித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றேன். தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறையில் தொழில்நுட்ப முன்னணியாளராக பணியாற்றினேன். ஓய்வு நேரத்தில் அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.
திருமணத்துக்கு பிறகு துபாயில் செட்டினாகினாலும், அங்குள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இங்கு குறிப்பிட்ட 5 அல்லது 6 பள்ளிக்கூடங்களில் தான் தமிழ்மொழி 2-வது மொழிப்பாடமாக உள்ளது. இதைத்தொடர்ந்து இங்கு வசிக்கும் தமிழ் மக்களை சந்தித்து, அவர்களது உதவியுடன் வீட்டில் தமிழ் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்கு, தமிழ் என்பது பேச்சு மொழியாக தெரிந்திருக்கும். ஆனால் தமிழ் மொழியை எழுத்து வடிவிலும், தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும் அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அதை வளர்த்தெடுக்கவே ஆசைப்பட்டேன்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியின் சிறப்புகள், அதன் தொன்மை, இலக்கியங்களின் சிறப்புகளை... சொல்லிக்கொடுத்து, தமிழை வளர்த்து வருகிறேன்'' என்பவர், தமிழக அரசின் துணையுடன், அமீரகத்தில் தமிழ் வளர்ப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஆம்..! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ் இணைய கல்வி கழகத்தை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் கற்றல் கல்வி மையத்தை அமைத்திருக்கிறார்.
''தற்போது 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். நிறைய பேர் பதிவு செய்திருக்கிறார்கள். 6 ஆசிரியர்கள், 4 துணை ஆசிரியர்கள் உள்ளனர். நான் தலைமையாக இருந்து வழிநடத்தி செல்கிறேன்.
இங்கு சேரும் மாணவர்களுக்கு முதலில் நெல்லில் 'அ' என்று எழுத வைத்து, பின்னர் கற்றல் கல்வி மையத்தில் சேர அனுமதிக்கிறோம். மேலும் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கையின்போது தலையை சுற்றி காதை தொட வேண்டும் என்ற பழக்கம் இருந்தது. இதை பின்பற்றியும் நாங்கள் மாணவர்களை சேர்த்து வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள பாட நூல்கள் அடிப்படையில் பாடம் கற்பிக்கப்படுவதால், மீண்டும் ஊர் திரும்பும்போது அவர்களது கல்விக்கும் இது வழிகாட்டுகிறது. பெற்றோர்களின் ஏக்கத்தையும் பூர்த்தி செய்கிறது'' என்பவர், தமிழ்-ஐ ஐக்கிய அரபு அமீரகத்தில் வளர்த்தெடுக்க பலவாறு உழைக்கிறார்.
''கற்றல் கல்வி மையம் ஐக்கிய அமீரக அரசு, தமிழ்நாடு அரசு அனுமதி பெற்று இயங்குகிறது. சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் இங்கு தமிழ் கற்று கொடுத்து வருகிறது. தமிழ் எழுத்து வரைபடம், தொல்லியல் வரைபடம், கல்வெட்டு புகைப்படங்களை என் குழுவில் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் காட்சிப்படுத்துகிறார்கள். முழுக்க, முழுக்க தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறேன். வருமான நோக்கமாக இல்லாமல் குழந்தைகளுக்கு கற்பிக்கவே பார்க்கிறோம்.
தமிழக அரசு சார்பில் புத்தகங்கள், தேர்வு தாள்கள், சான்றிதழ்கள் கொடுக்கிறார்கள். அதை கொண்டு வருவதற்கு மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது. பாடம் கற்பிக்கவோ, வேறு எதற்குமோ கட்டணம் வசூலிப்பது இல்லை'' என்றவர் தமிழ் கற்றல் முறை பற்றி விளக்குகிறார்.
''வார இறுதி நாட்களில் ஒரு மணிநேரம் தமிழ் வகுப்பு நடத்தப்படுகிறது. நேரடியாகவும், இணையவழி வாயிலாகவும் நடத்துகிறோம். தமிழ்நாடு அரசின் இணைய கழகத்தின் பாட நிலைகளான மழலையர் கல்வி, சான்றிதழ் கல்வி, அடிப்படை கல்வி, இடைநிலை கல்வி, மேற்சான்றிதழ் கல்வி மற்றும் இளநிலை பட்டக்கல்வியுடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டயம், மேற்பட்டயம், பட்டம் என்ற 3 நிலைகளாக கற்றுத்தருகிறோம். அதையும் தாண்டி எழுத்து, வாசிப்பு, பட்டறைக்களம், கதைக்களம், திருக்குறள், இலக்கியம், ஆய்வு, தொல்லியல் என தமிழை பல்வேறு வழிகளில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கற்றுத்தருகிறோம்.
தமிழ் வளர்க்கும் எனது முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். குடும்பத்தில் தந்தையின் பங்கு மிகப்பெரியது. தற்போது எனது குடும்பமும், புலம் பெயர்ந்த இடத்தில் உள்ள சமூகமும் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். தமிழ் என்று சொன்னாலே அனைவரும் ஒன்றிணைந்து விடுகிறார்கள்'' என்பவர், ''தமிழால் இணைவோம், தமிழை வளர்ப்போம்'' என்று மகிழ்ச்சியுடன் கூறி விடைபெற்றார்.
ஸ்ரீரோகிணி எழுதிய நூல்கள் : மகிழ்ந்திரு, குறளும் மொழியும், வெண் கதம்பம், தமிழ் உலகம் தீட்டிய வானவில், ஈர்ப்பு விதி-2, தமிழே எங்கள் தலைமை, சொல் பாரதி சொல், வல்லினச்சிறகுகள் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.
பெற்ற விருதுகள் : கம்போடியா அரசால் வழங்கப்பட்ட உலகத் திருவள்ளுவர் விருது, அமீரக மந்திரியிடம் இருந்து பெறப்பட்ட ஆராய்ச்சியாளர் விருது, சிறந்த எழுத்தாளர், திருக்குறள் ஆய்வாளர், குறள் நெறிக்கோதை, குறள்மாமணி, திருக்குறள் திருமகள், தமிழ்பணிச்செம்மல், பெரியார் கண்ட தமிழச்சி உள்பட 100-க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளில் இருந்து பெற்றுள்ளார்.
''துபாயில் முதல் முறையாக தமிழ் நூலகத்தை நான் தான் தோற்றுவித்தேன். இதை சமூகத்திற்கான செயல்பாடாக பார்க்கிறேன். மேலும் 'துபாய் எக்ஸ்போ 2020' கண்காட்சி, 2021-ம் ஆண்டு நடைபெற்றபோது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு வருகை தந்திருந்தார். அப்போது 600-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்து தமிழ் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் நான் எழுதிய 'குறளும், மொழியும்' புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் இருந்த திருக்குறள் பற்றி கேட்டறிந்த அமீரக நாட்டு தலைவர்கள், மிகவும் வியந்தனர். அவர்கள் இப்படிபட்ட தொன்மையான மொழியா தமிழ் மொழி என ஆச்சரியப்பட்டனர். 1½ அடி திருக்குறளில் இத்தனை சிறப்பு மிக்க கருத்துகளா? என வியந்தனர். அவர்களுடைய மொழியிலும் இதை மொழிபெயர்த்து, அவர்களுடைய குழந்தைகளுக்கும் கொடுக்க ஆசைப்பட்டனர்'' என்கிறார், ஸ்ரீரோகிணி.