போர் விமானம் ஓட்ட பயிற்சி பெற்ற தமிழக இளம்பெண்ணின் சாகசப் பயணம்
|ஒவ்வொரு ஆண்டும், விமானப்படைக்கு சேர்க்கப்படும் வீரர்-வீராங்கனைகளில் போர் விமான பைலட் பணிக்காக சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படி தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் முறையான பயிற்சிக்கு பின்னர் `ஏர் ஆபிசர்' என்ற பதவியில் போர் விமான ஓட்டிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
வான் மேகங்கள் காட்டும் ஜாலங்கள் எத்தனை ஆச்சரியங்கள் நிறைந்தவை. பலமுறை வானைக்கிழித்து மேகத்தில் நுழைந்து செல்லும் பறவைகளை பார்த்து மகிழ்வோம். வான் மேகங்களுக்கு இடையே பறந்து செல்லும் விமானங்களையும் ரசித்து பார்ப்போம். பறவைகளை பார்க்கிறபோது ஏற்படாத ஒரு ஈர்ப்பு, `ஆகா... ஏரோப்பிளேன் செல்கிறது' என்று சுற்றம் மறந்து உதடுகள் வார்த்தைகளை வெளியிடும். பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். குடியரசு தினம், சுதந்திர தினத்தின் போது தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கும் ஒரு விஷயம் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள். இதுதவிர 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை `வாயு சக்தி' என்ற பெயரில் விமானப்படையின் போர் விமான சாகசங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த சாகசங்களை பார்க்கும்போது மெய்சிலிர்க்கும்.
ஒவ்வொரு ஆண்டும், விமானப்படைக்கு சேர்க்கப்படும் வீரர்-வீராங்கனைகளில் போர் விமான பைலட் பணிக்காக சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அப்படி தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் முறையான பயிற்சிக்கு பின்னர் `ஏர் ஆபிசர்' என்ற பதவியில் போர் விமான ஓட்டிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.
இப்படி நியமிக்கப்படும் விமான ஓட்டிகள்தான் நம் மயிர்க்கூச்செறியும் சாகசங்களுக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் மட்டுமல்ல, சாகச வீரர்களும் ஆச்சரியமானவர்கள்தான். பொதுவாக இப்படிப்பட்ட சாகச வீரர்களை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் நம்மை பாதுகாக்கும் விமானப்படை வீரர்கள் என்றால் இன்னும் மரியாதை கலந்த மகிழ்ச்சி இருக்கும். அவர்கள் பெண்கள் என்றால் இன்னும் மகிழ்ச்சி ஒருபடி மேலாக இருக்கும். இனி வரும் காலங்களில் அதை ஒரு தமிழ்ப்பெண் நிறைவேற்றப்போகிறார் என்ற தகவல் வந்தால் நமக்கு இன்னும் சற்று மகிழ்ச்சி அதிகமாகவே இருக்கும் அல்லவா...?
அப்படி ஒரு மகிழ்ச்சிக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த ஜி.பிரியதர்ஷினி. கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி விமானப்படையின் பயிற்சி முடித்து ஏர்போர்ஸ் ஆபீசர் என்ற பதவிக்கான ஆணையை இந்திய திருநாட்டின் முதல் குடிமகள் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்று இருக்கிறார் பிரியதர்ஷினி. பயிற்சி முடித்த கையோடு 10 நாள் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய அவர் தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''எனது தந்தை எஸ்.குருமூர்த்தி. இவர் முன்னாள் ராணுவ வீரர். அம்மா சாந்தி, இல்லத்தரசி. தம்பி கவுரிசங்கர், எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். எனக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. அதற்காக கஷ்டப்பட்டு படித்தேன். ஆனால், இடம் கிடைக்கவில்லை. காரணம், ஏதோ ஒரு கல்லூரியில் படித்து டாக்டர் ஆனால் போதும் என்று நான் நினைக்கவில்லை. ராணுவ மருத்துவக்கல்லூரியில் படித்து, ராணுவத்தில் பணி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
அப்பா ராணுவ வீரர் என்பதால் அப்படி ஒரு ஆசை என்னுள் சிறு வயதில் இருந்தே இருந்திருக்கலாம். அந்த ஆசை எனது அப்பாவுக்கும் இருந்தது. நான் திண்டல் வேளாளர் மகளிர் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டபோதே, எனது வருங்கால பணி குறித்து அப்பாவுக்கு ஆசை இருந்திருக்கும்போல, முதல் மொழியை இந்தி என்று சேர்த்து விட்டார். கண்டிப்பாக வீட்டில் தமிழில்தான் பேசுவோம். வீட்டிலேயே தமிழ் எழுத படிக்க கற்றுக்கொண்டேன். வகுப்பு பாடம் மட்டும் இந்தியாக இருந்தது.
அதுமட்டுமின்றி, அப்பா ராணுவத்தில் இருந்தபோது அவர் செய்த பல சாகசங்கள் குறித்து பேசுவார். அதை கேட்கிறபோது ராணுவத்தில் சேரும் ஆசை மனதுக்குள் ஆழமாக பதிந்தது. ஆனால், ராணுவ மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டபோது, மருத்துவம் சார்ந்தே படிக்கலாம் என்று இளநிலை மருந்தியல் படிப்பை கோவையில் படித்தேன். கல்லூரி முடிக்கும் நேரத்தில் கொரோனா உலகை ஆட்கொண்டது. உலகம் முழுவதும் வேலிகள் வைத்ததுபோல நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம் சென்று வர தடை விதிக்கப்பட்டது. அப்போது பல நாடுகளில் தவித்த நம் நாட்டு மக்களை விமானப்படை சென்று மீட்டு வந்த தகவல்கள் எனக்கு வியப்பை தந்தது'' என்பவர் விமானப்படையில் சேரும் ஆர்வத்தை தனது தந்தையிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
''நானும் விமானப்படையில் சேரவா...'' என்று அப்பாவிடம் கேட்டேன். ``உனக்கு இயற்கையிலேயே ராணுவத்தின் மீது ஆசை உண்டு. நீ சாதிப்பாய், விண்ணப்பம் போடு'' என்றார். ஒரே நேரத்தில் விமானப்படைக்கும், தரைப்படைக்கும் அதிகாரிகள் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தேன். 2 தேர்வுகளையும் எழுதினேன். 2 தேர்விலும் வெற்றி பெற்றேன். நேர்முகத்தேர்வுக்கு காத்திருந்த நேரத்தில், முதலில் விமானப்படை அழைப்பு வந்தது. அதில் தேர்ச்சியும் பெற் றேன். எனவே தரைப்படை நேர்முகத்தேர்வினை தவிர்த்துவிட்டேன்'' என்பவர் தனது பயிற்சி அனுபவங்களை விவரிக்கிறார்.
''அடி ஆழத்தில் புதைந்து என்னை துரத்திய கனவின் ஒற்றை பக்கத்தை கட்டியாக பிடித்துக்கொள்ளும் ஒரு நாள். ஒட்டு மொத்தமாக வெளி உலக தொடர்பை துண்டித்து ஐதராபாத் அருகே உள்ள துண்டிக்கல் விமானப்படை பயிற்சி தளத் துக்குள் நுழைந்தேன். அது ஒரு புதிய உலகம். ஏற்கனவே பயிற்சி பெற்று, அதிகாரி அந்தஸ்துக்காக பயிற்சிக்கு வந்த பழைய வீரர்கள், புதிதாக வந்து சேர்ந்திருந்த என்னைப்போன்ற இளம் பயிற்சியாளர்கள். சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னோடு பயிற்சிக்கு சேர்ந்தவர்கள் 111 பேர். அதில் என்னையும் சேர்த்து பெண்கள் 8 பேர் மட்டுமே. அதிலும் தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஒருவர் அது நான்தான்.
ஆனால் ஒரு விஷயம், உள்ளே சென்ற அடுத்த நிமிடம், ஆண்-பெண் பேதங்கள் மறைந்து சமத்துவம் மட்டுமே எங்கும் இருக்கிறது. அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். அனைத்துக்கும் நேரக்கெடு இருந்தது. பெண் என்பதால் எந்த சலுகையும் இல்லை. ஆண் என்றால் அதிகாரம் செய்யவும் முடியாது. அது சற்று பிரமிப்பையும், எனக்கான கவுரவத்தையும் கொடுத்தது.
தொடர்ந்து 6 மாதங்கள்... கடும் பயற்சியின் தொடக்கநிலை. இந்த 6 மாதங்களை கடந்து விட்டால் போதும் என்றே இருந்தது. அதிலும் 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு நாளில் 60 கிலோ மீட்டர் ஓட வேண்டும். அது ஒரு சாகசப் பயணம். ஒரு நாளில் 60 கிலோ மீட்டர் என்றால் மலைப்பாக இருக்கிறது அல்லவா... பயிற்சியில் அதுவும் சாத்தியமாகிறது. துப்பாக்கி, எங்களுடைய பொருட்கள் என்று அத்தனையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும். தரையோடு கை முட்டிகளை ஊன்றி ஊர்ந்து செல்கிறபோது, கையில் தோல்கள் உரிந்து ரத்தம் கொட்டியது. சாதாரண நிலையில் நான் இருந்திருந்தால் அன்றோடு அனைத்தையும் போட்டு விட்டு ஆஸ்பத்திரியில் சென்று படுத்திருப்பேன். ஆனால், பயிற்சியில் அது சாத்தியமில்லை. ஒரு புறம் வலி, இன்னொரு புறம் நான் உட்கார்ந்து விட்டால் எனது அணி தோற்று விடும். என்னால் அது நடக்கக்கூடாது என்று வலியில் தொடர்ந்து ஊர்ந்து சென்றேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். 10 நிமிடம் வலியை தாங்கி கடந்து சென்றேன். அடுத்து என் உடம்பில் ஒரு காயம் இருக்கிறது என்ற நினைப்பே இல்லாமல் ஓடத்தொடங்கினேன்.
வாழ்க்கையிலும் இடர்கள் வரும்போது அங்கேயே உட்கார்ந்து விடாமல் தொடர்ந்து சென்றால் வலிகள் மறைந்து விடும் அல்லவா... அதுபோல், 6 மாதங்கள் முடிந்த பிறகுதான், போர் விமானத்தையே கண்ணில் காட்டினார்கள்.
நன்றாக படித்து நல்ல பதவிக்கு வந்து, எனது அப்பாவையும், அம்மாவையும் ஒரு முறையாவது விமானத்தில் அழைத்துச்செல்ல வேண்டும் என்று வானத்தில் பறந்து செல்லும் விமானங்களை பார்க்கிறபோதெல்லாம் நினைப்பேன். நானும் அதுவரை விமானத்தில் சென்றதில்லை. ஆனால் நேரடியாக போர் விமானத்துக்குள் நான் செல்லும்போது உடல் சிலிர்த்தது. விமானத்தின் பைலட் அறைக்குள் நான். இதை அடைவதற்கு எத்தனை தேர்வுகள், உடல் தகுதி, மருத்துவ தகுதிகள். நிச்சயமாக அத்தனையும் ஏன் என்று விளக்கினார்கள். பயிற்சியில் இருந்தபோது விமானத்தின் செயல்பாடுகளை கற்று முடித்த பிறகு, விமானப் பயணம். முதல் நாள், எங்கள் தலைமை பைலட் விமானத்தை இயக்க, மண்ணை விட்டு சீறிப்பாய்ந்து மேகக்கூட்டத்துக்குள் மறைந்தது விமானம். உலகத்தை 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அதுமட்டுமில்லை. பயிற்சி முடிந்து தனித்தனியாக நாங்கள் விமானத்தை ஓட்ட வேண்டும். அந்த நாளும் வந்தது. தனியாக நான் விமானம் ஓட்டினேன். அதே 14 ஆயிரம் அடி உயரத்தில். உலகின் உச்சியில் நான் மட்டும். கனவின் எல்லையை தொட முடியாது. கனவின் உச்சியில் நான்... விவரிக்க முடியாத வார்த்தைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு இறங்கினேன். இனி பல முறை பயணிப்பேன். இந்திய மக்களுக்காக எனது பயணங்கள் இருக்கும்.
பயிற்சியின் போது எனது உணர்வுகளை எடுத்துக்கூற தமிழ் பேசும் இன்னொரு உறவு என் அருகில் இல்லையே என்ற ஆதங்கம் இருந்தது. ஏன்... நம் பெண்கள் ஆர்வமாக இந்த துறையை தேர்ந்தெடுக்கக்கூடாது. விமானப்படை சேவையை குறிப்பாக போர் விமானத்தின் அதிகாரி பணி குறித்து மாணவிகள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்னும் ஏராளமான தமிழ்ப்பெண்கள் விமானப்படையில் சேரும் வாய்ப்பு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் அங்கு பயிற்சி பெற்றதாக கூறினார்கள். என்னோடு தேர்வு எழுத சிலர் வந்தனர். நேர்முகத்தேர்வுக்கு 3 பேர் வந்தனர். ஆனால் நான் மட்டுமே பயிற்சிக்கு சென்றேன். இனி வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
10 நாட்கள் சிறப்பு பயிற்சி எனக்கு தந்த அனுபவங்கள் ஏராளம். சரியாக குளிக்க முடியாது. சாப்பிட முடியாது. ஓய்வு எடுக்க முடியாது. ஆனாலும் புத்துணர்ச்சியாக இருக்க முடிந்தது. எந்த சூழலிலும் நம்மால் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற ஒரு பாடத்தை அந்த பயிற்சி கற்றுத்தந்தது. எனவே என்னால் முடிந்தது அனைவராலும் முடியும்'' என்று மகிழ்ச்சியுடன் கூறும் பிரியதர்ஷினிக்கு தற்போது வயது 24 ஆகிறது.