மலையேறுவதில் சாதனை படைக்கும் தமிழக தம்பதி
|5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மலைகளின் உச்சியில் ஏறி அசத்திவிட்டார் இந்திரா.
இன்றைய காலகட்டத்தில் சாதிக்க துடிக்கும் பெண்கள் பலவிதமான பரிணாமங்களாக, பல்வேறு துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக கோலோச்சுகிறார்கள். சவால்களை தகர்த்து மெச்சத்தகுந்த இடத்தை பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள், இந்த பிரபஞ்ச பூமியிலே.
விளையாட்டு, கல்வி, அரசியல், ராணுவம், விண்வெளி என சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வீடே கதியென்று கிடந்தவர்கள் இன்று உலகில் கால் தடம் பதிக்காத இடம் உண்டா? என கேட்கும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சாதனை சிகரங்களை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மலையேற்றம் செய்வதில் அசாத்திய சாதனை படைக்கும் தமிழக தம்பதியின் வாழ்வியல் அனுபவம் பற்றிய கட்டுரை இது. அவர்களின் பெயர் சதீஷ்-இந்திரா.
இந்திராவின் பூர்வீகம் குமரி-கேரள எல்லையில் உள்ள புதுக்கடை கிராமம். சிதம்பரம் பிள்ளை, சாரதா தம்பதிக்கு 6-வது மகளாக பிறந்த இவர் எம்.காம். பட்டதாரி. தனது பள்ளிப் படிப்பை முன்சிறை ஒன்றிய அரசு பள்ளியிலும், மேற்படிப்பை செயின்ட் ஜூட்ஸ் கல்லூரியிலும், நெல்லையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும் படித்தவர். கணவர் சதீஷ், நாகர்கோவில் புத்தேரியை சேர்ந்தவர். இவர்கள் திருமணம் 2001-ம் ஆண்டு நடந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு இருவரும் பணி நிமித்தமாக துபாயில் குடியேறி இருக்கிறார்கள். பணிக்கு இடையே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளில் இந்திரா ஆர்வம் காட்டி இருக்கிறார். அதுவே மலையேற்ற பயிற்சியில் ஈடுபடும் ஆவலை தூண்டிவிட, களம் இறங்கிவிட்டார். 2018-ம் ஆண்டு மலையேற்ற சாகச பயணங்களில் ஈடுபடத் தொடங்கியவர் 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மலைகளின் உச்சியில் ஏறி அசத்திவிட்டார். எதையும் விருப்பமாக, காதலாக செய்தால் சவால்களை தாண்டி சாதித்து விடலாம், என பெருமையாக சொல்கிறார், இந்திரா.
''ஆரம்பத்தில் கணவர், வேலை, வீடு என மற்ற பெண்களைப் போலவே எனது வாழ்க்கைப் பயணமும் இருந்தது. அதே சமயத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. இதற்காக உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி ஜிம் போன்ற கட்டமைப்பை வீட்டில் உருவாக்கி இருந்தேன். அதில் மேற்கொண்ட பயிற்சிகளால் உடல் வலிமையாக மாறியதும் மலையேறுவதில் திடீரென ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆசையை கணவரிடம் தெரியப்படுத்தினேன். அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் பச்சைக் கொடி காட்டினார். எனக்கு வழிகாட்டியாகவும் மாறினார். இருவரும் சேர்ந்து தினமும் பயிற்சி மேற்கொண்டோம். மலை ஏறும் பயிற்சிக்காக எந்த பயிற்சியாளர்களையும் நாங்கள் நாடவில்லை. வீட்டு படிக்கட்டு மற்றும் சாய்வு உடற்பயிற்சி எந்திரங்களில் தினமும் 3 மணி நேரம் பயிற்சி செய்வோம். சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஜிம் உடற்பயிற்சிகளையும் உள்ளடக்கிய தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு பயணங்களுக்கு தயாராகி வந்தோம்.
முதல் பயணத்தை சிறு, சிறு மலையில் ஏறி தொடங்கினோம். ஷார்ஜாவில் உள்ள உயரமான அல்கெய்மா மலைக்கு என்னுடைய கணவர் மற்றும் சிலருடன் குழுவாக சென்று சிகரத்தை அடைந்தோம். அரபு எமிரேட்சில் உள்ள ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் பல உள்ளூர் மலை பயணங்களை குழுவினராக மேற்கொண்டிருந்தோம். இந்த மலை பயணம் பயற்சியாக இருந்தது. இந்த பயணத்தின் முடிவில் நாங்கள் மலையின் உச்சியை அடைந்தபோது மூச்சடைக்கும் அனுபவம் ஏற்பட்டது. ஆனால் அங்குள்ள அழகிய காட்சி இதுபோன்ற சிரமத்தை மறக்க வைத்து புத்துணர்வை ஊட்டியது. அடுத்தடுத்து மலை பயணங்கள் மேற்கொள்வதற்கு உந்துதலாக அமைந்தது. பிறகு மலையேறுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.
வாரத்தில் 3 நாட்கள் மலையேறுவோம். அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட மலையில் ஏறினேன். மலை ஏறுவதில் சதம் அடித்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. இதனை நான் தான் செய்தேனா என பிரம்மிப்பாக இருக்கிறது. எனது கணவரின் துணையின்றி இதனை சாதித்திருக்க முடியாது'' என்பவர்
ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை, இந்தோனேஷியா பாலி மலை உள்ளிட்ட பிரபலமான மலை சிகரத்திலும் ஏறி அசத்தி இருக்கிறார். அதைத்தொடர்ந்து உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட்டுக்கு சென்றடைய வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது. அது பற்றி தொடர்கிறார்...
''எவரெஸ்ட் சிகரத்திலும் கால் பதித்து முத்திரை பதிக்க வேண்டும் என்ற எனது ஆசையை கணவரிடம் வெளிப்படுத்தினேன். அதுவும் அந்த சிகரத்தை தொட்டதும் அங்கேயே எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். அதன்படி எங்களுடைய பயணம் கடந்த மே மாதம் தொடங்கியது. அதே மாதம் 15-ந் தேதி தான் எனது பிறந்த நாள். அதற்கேற்ப திட்டமிட்டு பயணத்தை தொடர்ந்து பிறந்த நாளிலேயே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தோம். 8 நாட்கள் இடைவிடாத பயணமாக அது அமைந்தது. எங்களை தவிர மேலும் 4 பேர் இந்த பயணத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். செல்லும் வழியில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டோம். அந்த அளவுக்கு பயணம் பெரும் சவாலாக இருந்தது.
ஒருவழியாக எனது பிறந்த நாளன்று எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததும் அங்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். சாதனை பயணத்திலும் இது புதுமையாக இருந்தது'' என்று கூறிய இந்திராவுக்கு 50 வயது ஆகிறது.
இந்த வயதில் எவரெஸ்ட் சென்றது பற்றி கூறுகையில், ''50 வயது முதுமை அல்ல. அது வாழ்க்கையின் அடுத்த கட்டம். எப்போதும் சாதனைக்கு வயது தடையாக இருக்கக்கூடாது என்பதற்கு நானும் ஒரு உதாரணம். எந்த வயதிலும் சாதிக்கலாம். அதற்கு மன வலிமையும், விரும்பியதை செய்வதற்கான விருப்பமுமே முக்கியம். எனினும் முதல் முயற்சியில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதை ஆச்சரியமாகத்தான் பார்க்கிறேன்.
அடுத்ததாக நாங்கள் ஜெர்மனி சென்று அங்குள்ள உயரமான மலைகளை கண்டறிந்து அங்கும் சாதனை நிகழ்த்த உள்ளோம். இது போன்று உலகத்தில் எந்த நாடுகளுக்கு சென்றாலும் மலையேறுவதற்கான பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் சென்று வருகிறோம். விடாமுயற்சி இருந்தால் மலையேறுவது மட்டுமின்றி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார், இந்த சாதனை பெண்மணி.
பயணத்தில் திருமண நாள் கொண்டாட்டம்
மலையேறுவதில் கில்லாடியாக மாறிய இந்திரா ஒரு கட்டத்தில் மலை பயணத்தை தன்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் விஷயத்தோடு இணைக்க விரும்பினார். அதாவது தன்னுடைய திருமண நாள், பிறந்த நாளை மலையின் உச்சியில் கொண்டாட முடிவெடுத்தார்.
அந்த வகையில் 2021-ம் ஆண்டு தனது 20-வது திருமண நாளை கொண்டாட ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்தார். அதோடு அங்கேயே திருமண நாளை கணவருடன் சேர்ந்து புதுமையாக கொண்டாடினார். அந்த வகையில் எவரெஸ்ட் சிகரத்தில் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்திரா. சாதனையின்போது அதில் புதுமையை புகுத்துவது எல்லையில்லா சந்தோசத்தை தருவதாகவும் கூறுகிறார்.
உற்சாகப்படுத்தும் பிள்ளைகள்
''எங்களுடைய நேரத்தை பெரும்பாலும் மலையேறுவதில் செலவிடுகிறோம். இதனால் எங்களுடைய பிள்ளைகளான ராகுல், பிரியங்காவை கஷ்டப்படுத்துறோம் என வருத்தப்பட்டோம். ஆனால் எங்களுடைய ஆசைக்கு அவர்கள் குறுக்கே நின்றது கிடையாது. நாங்கள் படித்து கொள்கிறோம், நீங்கள் சந்தோசமாக இருங்கள் என எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். தற்போது மகன் ராகுல் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டும், மகள் பிரியங்கா 11-ம் வகுப்பு படித்தும் வருகின்றனர்'' என்கிறார், இந்திரா.