இந்தியாவின் வரலாற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புகள்
|தாஜ்மஹால் முதல் ஜான்சி கோட்டை வரை ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்களை கொண்டிருக்கிறது. அவற்றுள் பிரபலமான சில கட்டமைப்புகள் உங்கள் பார்வைக்கு...
பண்டைய நாகரிகம், பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் வரலாற்றோடு நீண்ட நெடிய தொடர்புடைய கட்டிடக்கலை பின்னணியை கொண்ட மாநிலங்களுள் ஒன்று உத்தரபிரதேசம். தாஜ்மஹால் முதல் ஜான்சி கோட்டை வரை ஏராளமான கட்டிடக்கலை அதிசயங்களை கொண்டிருக்கிறது. அவற்றுள் பிரபலமான சில கட்டமைப்புகள் உங்கள் பார்வைக்கு...
ஆக்ரா கோட்டை, ஆக்ரா
யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற ஆக்ரா கோட்டை முகலாய பேரரசர்களின் முக்கிய வசிப்பிடமாக செயல்பட்டது. அதற்கேற்ப அரண்மனைகள் பிரமாண்ட கட்டமைப்புகளுடன் காட்சி அளிக்கின்றன. பாதுகாப்பு அரண்களுடன் கூடிய உயரமான கட்டுமானமும், பார்வையாளர் அரங்குகளும் கவனம் ஈர்ப்பவை.
இந்தக் கோட்டையில் இருந்து தாஜ்மஹாலின் முழு அழகையும் ரசிக்கலாம். தாஜ்மஹாலின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடமாகவும் இது விளங்குகிறது.
அலகாபாத் கோட்டை, அலகாபாத்
கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கம்பீரமான கோட்டை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது. இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிகளின் தனித்துவமான கலை அம்சங்களுடன் இந்தக் கோட்டை மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
அயோத்தி, பைசாபாத்
ராமர் பிறந்த இடமாக அறியப்படும் அயோத்தி பாரம்பரிய வரலாற்றுடன் நீண்ட நெடிய தொடர்புடையது. அதற்கு சாட்சியாக பழமையான கோவில்கள், கட்டுமானங்கள் ஏராளம் உள்ளன. வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் இடமாகவும் விளங்குகிறது.
வாரணாசி
கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ள புனித நகரமான வாரணாசி, பல்வேறு வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. பாரம்பரிய கட்டமைப்புகள் இங்கு ஏராளம் உள்ளன. கங்கை நதிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் ஆன்மிக நடவடிக்கைகளின் மையமாக உள்ளன. இங்கு பல்வேறு சடங்குகள், பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
பாரா இமாம்பரா, லக்னோ
18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடக்கலை அதிசயம், லக்னோவின் கலாசார, பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. புல்புலையா என்று அழைக்கப்படும் இந்தக் கோட்டை கொத்தளம் விசாலமான பரப்பளவை கொண்டது.
இங்கு அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்ட கட்டமைப்புகள் ஏராளம் உள்ளன. பிரமாண்டமான மைய மண்டபம், அசாபி மசூதி ஆகியவை முக்கிய இடங்களாக விளங்குகின்றன.
தாஜ்மஹால், ஆக்ரா
முகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் மீது கொண்ட அன்பின் உருவகமாக தாஜ்மஹால் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. உலக பாரம்பரிய தளங்களை அங்கீகரிக்கும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தலைசிறந்த கட்டிடக்கலை அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
ஜான்சி கோட்டை, ஜான்சி
இந்த வரலாற்று கோட்டை சுதந்திர போராட்டத்தில் துணிச்சலாக பங்கேற்ற ராணி லட்சுமி பாயுடன் தொடர்புடையது. இந்தக் கோட்டையின் கட்டிடக்கலையும், லட்சுமி பாயின் வீரத்தை பறைசாற்றும் கதைகளும் பார்வையாளர்களை வரலாற்றின் பக்கங்களை ஆராயத் தூண்டும்.
சாரநாத், வாரணாசி
புத்தர் ஞானம் பெற்ற பிறகு தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய புனித தலமாக இது விளங்குகிறது. தாமேக் ஸ்தூபம், அசோக தூண் மற்றும் பழங்கால மடங்கள் என வரலாற்று நினைவுகளை காட்சிப்படுத்தும் ஏராளமான கட்டமைப்புகள் இங்குள்ளன.
பதேபூர் சிக்ரி, ஆக்ரா
இது பேரரசர் அக்பரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முகலாய கட்டிடக்கலையின் மகத்துவத்தைக் காட்சிப்படுத்தும் நுணுக்கமான கட்டமைப்புகளை கொண்டது. பிரமிக்க வைக்கும் அரண்மனைகள், மசூதிகள் மற்றும் புலந்த் தர்வாசா எனப்படும் கலைவேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்டமான நுழைவு வாயில்கள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தக் கூடியவை.
சுனார் கோட்டை, மிர்சாபூர்
கங்கை கரையோரம் அமைந்துள்ள இந்தக் கோட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பின்புலத்தை கொண்டது. பல்வேறு வம்சங்களின் ஆட்சியைக் கண்ட இடமாகவும் இது திகழ்கிறது. கோட்டையின் கட்டமைப்புகள் அதற்கு சாட்சியாக இருக்கின்றன.