இந்தியாவை கலக்க காத்திருக்கும் 'ஸ்பை' யுனிவர்ஸ் படங்கள்
|‘டைகர்-3’, ‘வார்-2’ ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, ‘டைகர் v பதான்’ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், ‘வார்’ படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாக பாலிவுட் சினிமாவிற்கு போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மாதத்தில் தோராயமாக 20 படங்கள் வெளியாகின்றன என்றால், அதில் 18 படங்கள் தோல்வியைத்தான் தழுவி நிற்கின்றன. ஒன்றிரண்டு படங்கள்தான் வெற்றியைப் பெறுகின்றன. அதையும் பிரம்மாண்டமான வெற்றி என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன் படங்களும் கூட தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததை கடந்த காலகட்டத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.
சல்மான்கான் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்ற படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இது தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'வீரம்' படத்தின் ரீமேக் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த படங்களை ரீமேக் செய்த பாலிவுட் படங்கள் அனைத்துமே படுதோல்வியை சந்தித்திருக்கின்றன.
ஆனால் ஒன்றைக் கவனித்தோம் என்றால், பாலிவுட்டில் ராணுவ உளவு அமைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடிப் படங்கள் பலவும் மிகப்பெரிய வெற்றியையும், மிகப்பெரிய வசூலையும் கடந்த சில ஆண்டுகளில் பெற்றுக் கொடுத்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப சென்டிமெண்ட் படங்கள், காமெடி படங்கள், காதல் படங்கள் போன்றவற்றில் எல்லாம் தோல்வியைத் தழுவிய பெரிய நடிகர்கள் அனைவரும், இதுபோன்ற ராணுவ உளவு அமைப்பு படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார்கள். இதில் சல்மான்கான், ஹிருத்திக்ரோஷன் வரிசையில், சமீபத்தில் 'பதான்' படம் மூலமாக ஷாருக்கானும் இணைந்திருக்கிறார்.
2012-ம் ஆண்டு சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் 'ஏக் தா டைகர்'. ரூ.75 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ரூ.335 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தப் படமாகும். ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றும் கதாநாயகன், இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் சதிச் செயல்களை கண்டுபிடித்து முறியடிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படம் இது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே ராணுவ உளவு அமைப்பு பின்னணியில் 2017-ம் ஆண்டு மீண்டும் சல்மான்கான் நடிப்பில் 'டைகர் ஜிந்தா கை' என்ற படம் வெளியானது. ரூ.120 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.565 கோடி வரை வசூலித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு படங்களையும் தயாரித்தவர் ஆதித்யா சோப்ரா.
பின்னர் 2019-ம் ஆண்டு ஹிருத்திக்ரோஷன் நடிப்பில் மீண்டும் ஒரு ஸ்பை (SPY) படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தையும் ஆதித்யா சோப்ராவே தயாரித்தார். ரூ.170 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படமும், ரூ.475 கோடி வரை வசூலித்தது. இப்படி தொடர்ச்சியாக தான் தயாரித்த மூன்று ராணுவ உளவு அமைப்பு சார்ந்த படங்கள் வெற்றி பெற்றதால், இதனை ஒரு யுனிவர்ஸ் படமாக மாற்ற ஆதித்யா சோப்ரா முடிவு செய்தார்.
அதன்படி தான் எடுக்கவிருக்கும் அடுத்த படத்தில் இதற்கு முன்பு வெளியான ஸ்பை படங்களின் கதாநாயகர்களையும் இணைக்க முடிவு செய்தார். இதற்காக ஆதித்யா சோப்ரா தனது தயாரிப்பு நிறுவனமான 'ஒய்.ஆர்.எஸ்.' (யஷ் ராஜ் பிலிம்ஸ்) என்பதை, 'ஒய்.ஆர்.எஸ். ஸ்பை யுனிவர்ஸ் (YRS SPY UNIVERSE) என்று மாற்றியிருக்கிறார்.
ராணுவ உளவு அமைப்பு சார்ந்த அனைத்துப் படங்களும் இந்த யுனிவர்ஸ் கீழ் வந்து சேரும். அதன்படி இதற்கு முன்பு ராணுவ உளவு அதிகாரியாக 'டைகர்' என்ற படங்களில் நடித்திருந்த சல்மான்கானை, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'பதான்' படத்தில் ஷாருக்கானுடன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தனர்.
அதோடு முதன் முறையாக இந்தப் படத்தை இந்தி மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டனர். இனி வரும் அனைத்து ஒய்.ஆர்.எஸ். ஸ்பை யுனிவர்ஸ் படங்களும் தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. ரூ.225 கோடியில் எடுக்கப்பட்ட 'பதான்' திரைப்படம், ரூ.1050 கோடியை வசூலித்து, பாலிவுட்டிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதையடுத்து 'டைகர்' படத்தின் மூன்றாம் பாகம், 'வார்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தடுத்து தயாராக இருக்கிறது. இதில் 'டைகர் 3' படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்தின் கதாநாயகர் சல்மான்கானுடன் 'வார்' படத்தில் ராணுவ உளவு அதிகாரியாக நடித்த ஹிருத்திக்ரோஷன், 'பதான்' படத்தில் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்த ஷாருக்கான் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
அதே போல் 'வார்-2' படத்தில், சல்மான்கான், ஷாருக்கான் இருவரும் நடிக்க இருக்கிறார்கள். 'வார்-2' திரைப்படம் 2025-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் நாயகனான ஜூனியர் என்.டி.ஆர், வில்லன் கதாபாத்திரம் ஏற்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
'டைகர்-3', 'வார்-2' ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, 'டைகர் v பதான்' என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், 'வார்' படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக வெளியாக இருக்கும் ராணுவ உளவு அமைப்பு சார்ந்த மேற்கண்ட படங்கள் அனைத்துமே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கின்றன. அந்தப் படங்கள் இந்திய சினிமாவை கலக்கப் போகிறதா?, பாலிவுட் தயாரிப்பாளர்களை கலங்கடிக்கப்போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.