< Back
ஞாயிறுமலர்
முதல் நாளிலேயே பதானை ஓரங்கட்டிய ஜவான்
ஞாயிறுமலர்

முதல் நாளிலேயே பதானை ஓரங்கட்டிய ஜவான்

தினத்தந்தி
|
15 Sept 2023 5:12 PM IST

முதல் நாளிலேயே ரூ.150 கோடியை வசூலித்து 4-வது இடத்தை பிடித்திருக்கிறது, ‘ஜவான்’ திரைப்படம்.

இந்திய சினிமா தொடங்கிய காலம் தொட்டே, இந்தி மொழி சினிமாக்கள்தான் தரத்திலும், வசூலிலும் முதன்மையானவை என்ற கருத்து நிலவி வந்தது. அந்த வரலாற்றை கடந்த 2017-ம் ஆண்டில் வெளிவந்த 'பாகுபலி-2', அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.', 'கே.ஜி.எப்.-2' போன்ற தென்னிந்திய திரைப்படங்கள் மாற்றின. அதோடு பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுடைய படங்கள் கூட, 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மிக மோசமான தோல்விகளைச் சந்தித்தன.

2018-ம் ஆண்டு 'ஜீரோ' என்ற மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்த ஷாருக்கான், அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் கதாநாயகனாக நடிப்பதை தவிர்த்து வந்தார். இடையில் ஓரிரு படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் தலையைக் காட்டி வந்தார். இந்த நிலையில்தான் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடிப்பில் 'பதான்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வெளியானது. நாட்டுப்பற்றை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தப் படம், இந்திய சினிமா உலகில் சரிந்திருந்த பாலிவுட்டின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்திப் பிடித்தது.

ரூ.225 கோடியில் தயாரிக்கப்பட்டிருந்த 'பதான்' திரைப்படம், ரூ.1,050 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் உலக அரங்கில் ரூ.104 கோடியாகும். 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல், தன்னுடைய ரசிகர்களை தவிக்க விட்ட ஷாருக்கான், இந்த ஆண்டிலேயே 'பதான்' படத்தைத் தொடர்ந்து 'ஜவான்' என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பழைய படங்களின் கதைகளை தூசி தட்டி, தன்னுடைய படங்களை இயக்குபவர் என்ற விமர்சனம் அட்லியின் மீது இருந்தாலும், அதை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சுவாரசியமாக எப்படி தர வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் அட்லி.

அந்த வித்தையை 'ஜவான்' திரைப்படத்திலும் அட்லி பயன்படுத்தியிருக்கிறாராம். நாட்டிற்காக போராடும் ஒரு ராணுவ வீரனை, தேச துரோகி என்று முத்திரை குத்திக் கொல்கிறார்கள். அவரது சாவுக்கு, ராணுவ வீரனின் மகன் பழிவாங்குவதுதான் 'ஜவான்' படத்தின் கதை. இதுபோன்ற கதைக்களம் பல படங்களில் பார்த்த ஒன்றுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'வில்லு' திரைப்படத்தின் மூலக்கதையும் இதுதான்.

ஆனாலும் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகாபடுகோன் ஆகியோரின் நடிப்பினாலும், விஜய் சேதுபதியின் வித்தியாசமான வில்லத்தனத்தாலும், அட்லியின் மேஜிக்கினாலும் இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம், இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்த திரைப்படங்களில் 4-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்த வரிசையில் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் முதல் நாளில் உலக அரங்கில் ரூ.223.5 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. 'பாகுபலி-2' திரைப்படம் ரூ.214.5 கோடியும், 'கே.ஜி.எப்.-2' திரைப்படம் ரூ.164.5 கோடியும் முதல் நாளில் வசூலித்து, அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக முதல் நாளிலேயே ரூ.150 கோடியை வசூலித்து 4-வது இடத்தை பிடித்திருக்கிறது, 'ஜவான்' திரைப்படம்.

இதை வைத்துப்பார்க்கும் போது, பதான் திரைப்படத்தைப் போலவே, 'ஜவான்' திரைப்படமும் ரூ.1000 கோடியை தாண்டி வசூல் சாதனை புரியும் என்று பாலிவுட் வட்டாரங்களும், ஷாருக்கான் ரசிகர்களும் வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் ரூ.600 கோடியில் எடுக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' திரைப்படம், முதல் நாளில் ரூ.136 கோடியை வசூலித்திருந்தாலும், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதையும் நாம் மறந்து விட முடியாது. எனவே ஜவான் திரைப்படத்தின் வசூல் சாதனை தொடருமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்