< Back
ஞாயிறுமலர்
தமிழ் சினிமாவை தூசி தட்டிய பாலிவுட்
ஞாயிறுமலர்

தமிழ் சினிமாவை தூசி தட்டிய பாலிவுட்

தினத்தந்தி
|
9 July 2023 11:01 AM IST

24 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் ஒரு கதையை, தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள், பாலிவுட்காரர்கள். 'ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ஹகானி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் கரன் ஜோஹர் இயக்கியிருக்கிறார்

இந்திய சினிமாத் துறையில் முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பது, பாலிவுட் எனப்படும் இந்தி மொழி திரைப்படங்கள். ஆனால் சமீப காலமாக அந்த மொழியில் எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் சறுக்கலையே சந்திக்கின்றன. கதையிலா, திரைக்கதையிலா, நடிகர்- நடிகையர் தேர்விலா, எதில் பிரச்சினை இருக்கிறது என்பதையே அறிய முடியாத அளவுக்கு பாலிவுட் திரைப்படங்கள் பலவும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

அதே நேரம் தென்னிந்தியாவில் இருந்து நேரடியாக பாலிவுட்டில் வெளியிடப்படும் திரைப்படங்கள் சக்கை போடு போடுகின்றன. பாலிவுட் ரசிகர்கள் பலரும், தென்னிந்திய சினிமாக்களுக்கு ரசிகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, தென்னிந்தியப் படங்கள் பலவும், பாலிவுட்டில் அதிக வசூலையும் பெறுகின்றன. இந்த நிலையில் பாலிவுட் சினிமாத் துறையினேரே, தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார்கள். ஆனால் அப்படி ரீமேக் செய்யும் படங்களும் கூட அங்கே மிகப்பெரும் தோல்வியை சந்திக்கின்றன.

இந்த நிலையில் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாவின் ஒரு கதையை, தூசி தட்டி எடுத்திருக்கிறார்கள், பாலிவுட்காரர்கள். 'ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ஹகானி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அறியப்படும் கரன் ஜோஹர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் கதையை, இஷிதா மொய்த்ரா, ஷஷாங் கைத்தான், சுமித் ராய் ஆகியோர் கூட்டாக எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு ஓரிரு மாதங்கள் இடைவெளியில் ஒரே கதையம்சம் கொண்ட இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அவை சூர்யா-ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' மற்றும் பிரசாந்த்- சிம்ரன் நடிப்பில் பிரவீன்காந்தி இயக்கத்தில் வெளியான 'ஜோடி' ஆகிய திரைப்படங்கள். இந்த இரண்டு திரைப்படங்களிலும் காதலர்களான நாயகனும், நாயகியும், இரு வீட்டிலும் எதிர்ப்பு இருக்கும் என்பதை உணர்ந்து, காதலனின் வீட்டிற்கு காதலியும், காதலியின் வீட்டிற்கு காதலனும் சென்று அங்குள்ளவர்களின் மனதில் இடம்பிடிப்பதுதான் கதை. இந்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களாகும்.

கரன் ஜோஹர் இயக்கத்தில் உருவாகியிருக்கும், 'ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ஹகானி' படத்தின் கதையும் இதுதான் என்று சொல்கிறார்கள். கடந்த 4-ந் தேதி வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர், அதனை உறுதிப்படுத்துவது போல் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் நாயகனாகவும், ஆலியாபட் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா, ஜெயாபச்சன், ஷபானா ஆஸ்மி உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பு வந்த தமிழ் சினிமாவின் கதையை தூசி தட்டி இருந்தாலும், 'ராக்கி அவுர் ராணி கீ பிரேம் ஹகானி' திரைப்படத்தில் இயக்குனர் கரன் ஜோஹரின் மேஜிக் நிச்சயமாக பேசப்படும் என்று பாலிவுட் சினிமா ரசிகர்களும், சினிமாத் துறை வட்டாரத்தில் உள்ளவர்களும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்