பறவையின் நன்றி மறவாத பாசம்
|கான்பூர் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் அந்த பறவை தன்னை காப்பாற்றிய நபரின் எதிர்பாராத வருகையை பார்த்து சிறகை விரித்து துள்ளிக்குதித்து பாசத்தை பொழியும் வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் பாசமாகவும், நன்றி உணர்வோடும் நடந்து கொள்ளும். பறவைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. உயிருக்கு போராடிய காட்டு பறவை தன்னை காப்பாற்றிய நபரை பிரிந்து செல்ல மனமில்லாமல் அவருடனேயே வசித்த நிலையில் வனத்துறை பிரித்து சென்றுவிட்டது.
தற்போது கான்பூர் சரணாலயத்தில் பராமரிக்கப்படும் அந்த பறவை தன்னை காப்பாற்றிய நபரின் எதிர்பாராத வருகையை பார்த்து சிறகை விரித்து துள்ளிக்குதித்து பாசத்தை பொழியும் வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.
இந்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள அமேதி அருகில் உள்ள மண்ட்வா கிராமத்தை சேந்தவர் ஆரிப் கான். கடந்த ஆண்டு வயல்வெளி பகுதியில் காயம் அடைந்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 'சாரஸ் கிரேன்' எனப்படும் கொக்கு இனத்தை சேர்ந்த பறவையை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.
அந்த பறவைக்கு சிகிச்சை அளித்து, உணவு ஊட்டி அன்பாக பராமரித்தார். ஆரிப் கான் சாப்பிடும்போது அவரது தட்டில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அளவுக்கு சரஸ் கிரேன் பறவை நெருக்கமாகிவிட்டது. அது பரிபூரணமாக குணமடைந்ததும் காட்டு பகுதியில் கொண்டு சென்று பறக்கவிட்டார்.
ஆனால் அந்த பறவை மீண்டும் ஆரிப் கானை தேடி வந்துவிட்டது. அவரது வீட்டின் உறுப்பினர் போல ஐக்கியமாகிவிட்டது. அதனால் அதனை அன்போடு வளர்த்து வந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றால் அந்த பறவையும் பின் தொடர்ந்து செல்லும் அளவுக்கு நெருக்கமாகிவிட்டது.
அந்த பறவையை திரும்பி செல்லுமாறு கூறியும், அது அவருடனேயே மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து பயணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. ஆரிப் கானுக்கும், பறவைக்கும் இடையே இருக்கும் உறவை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். பறவையை காப்பாற்றிய அவரது மனிதாபிமான செயலை பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வு உத்தர பிரதேச மாநில வனத்துறையின் கவனத்திற்கு சென்றது. காட்டுப்பறவையான அது உத்தரபிர பிரதேச மாநிலத்தின் மாநில பறவையாக விளங்குகிறது. இந்த பறவையை வன சட்டப்படி வீட்டில் வளர்ப்பது குற்றம் என்று கூறிய வனத்துறையினர் ஆரிப் கானிடம் இருந்து அதனை பிரித்தனர்.
கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே சமஸ்பூர் பறவைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பறவை திடீரென்று காணாமல் போனது. ஆரிப் கானிடம் வளர்ந்தபோது அதனை பார்வையிட்ட முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் வனத்துறையின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இறுதியாக அருகிலுள்ள பிசாயா கிராமத்தில் அந்த பறவை கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்த பறவை கான்பூரில் உள்ள சரணாலயத்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பராமரிக்கப்படுகிறது. அதனை பார்ப்பதற்காக சமீபத்தில் ஆரிப் கான் சென்றார். அவரை பார்த்ததும் சரஸ் கிரேன் பறவை எல்லையில்லா ஆனந்தம் அடைந்தது. அதனை வெளிப்படுத்தும் விதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூட்டுக்குள் அங்கும் இங்கும் துள்ளிக்குதித்தபடி ஆரிப்கானை வரவேற்றது.
சிறகடித்து பறக்க முயற்சித்து ஆரிப் கானை நெருங்குவதற்கு முயற்சித்தது. ஆனால் அது முடியாமல் போகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சப்தம் எழுப்பியது. அதற்கு தானியங்கள் வழங்கி ஆரிப் கான் ஆசுவாசப்படுத்தினார்.
பறவையின் நன்றி மறவாத பாசத்தை பார்த்து பலரும் மனம் நெகிழ்ந்து போனார்கள். அது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி டிரெண்டிங் ஆகி இருக்கிறது.