ஓய்வுகாலத்துக்கு முந்தைய முதலீட்டு திட்டமிடல்
|ஓய்வு கால வாழ்க்கையை இனிமையாக கழிப்பதற்கு நடுத்தர வயதை கடந்ததுமே திட்டமிட தொடங்கி விட வேண்டும்.
சேமிப்பு மட்டுமே ஓய்வு கால பணத்தேவையை பூர்த்தி செய்யாது. சேமிப்புடன் முதலீட்டு திட்டங்களிலும் பணத்தை செலுத்த வேண்டும். அது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அதிக வருமானத்தையும் ஈட்ட முடியும். அதற்கு செய்ய வேண்டிய திட்டமிடுதல்கள்..
நிபுணத்துவ ஆலோசனை பெறவும்: உங்கள் நிதி நிலைமை மற்றும் இலக்குகளின் அடிப்படையில் வழிகாட்டுதல் வழங்கக்கூடிய நிதி ஆலோசகரை சந்தியுங்கள். அவருடன் கலந்து பேசி பொருத்தமான திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
தாமதிக்காதீர்கள்:
ஓய்வு காலத்தை நெருங்கும்போதுதான் பலரும் சேமிப்பு பற்றி சிந்திப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் முன்கூட்டியே சேமிக்க தொடங்குங்கள். அத்துடன் முதலீட்டு திட்டங்களிலும் சேருங்கள். எவ்வளவு சீக்கிரமாக சேமிக்கிறீர்களோ, எவ்வளவு அதிகமாக முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ அதற்கேற்ப பண பலனை ஓய்வுக் காலத்தில் அனுபவிக்கலாம். எனவே சேமிப்பு, முதலீட்டு திட்டங்களில் இணைவதற்கு தாமதப்படுத்த வேண்டாம்.
பட்ஜெட்டை உருவாக்கவும்:
உங்கள் செலவுகளை கண்காணிக்கும் விரிவான பட்ஜெட்டை மாதந்தோறும் கட்டமையுங்கள். செலவுகள் அனைத்தும் வருமானத்திற்குள் கட்டுப்படாத நிலையில் வீண் செலவுகளை வரையறை செய்யுங்கள். பணப்புழக்கத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடியும்.
அதில் மீதமாகும் தொகையை ஆரம்பத்தில் சிறு சேமிப்பாக தொடங்குங்கள். மாதந்தோறும் செலுத்துவதற்கு வசதியான ஆர்.டி போன்ற சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
இலக்குகளை அமைக்கவும்:
ஓய்வு காலத்தில் நீங்கள் விரும்பும் வாழ்க்கை முறை, உங்களுக்குத் தேவைப்படும் பணத்தின் அளவு போன்ற விஷயங்களை வரையறை செய்து நிதி இலக்குகளை தீர்மானியுங்கள். அந்த இலக்கை அடைய எவ்வளவு சேமிக்க வேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எத்தனை ஆண்டுகள் அதற்கு தேவைப்படும் என்பதை கணக்கிட்டு பாருங்கள். அதற்கேற்ப திட்டமிடுவது இலக்கை எளிமையாக அடைவதற்கு வித்திடும்.
முதலீடுகளை விரிவுபடுத்தவும்:
லாபம் தரும் முதலீட்டு திட்டமாகவே இருந்தாலும் அதிலேயே மொத்த தொகையையும் முதலீடு செய்யாதீர்கள். ஏதாவதொரு காலகட்டத்தில் திடீர் ஏற்ற, இறக்கங்களை சந்திக்க நேரிடலாம். அப்போது நிதி நிலையில் ஏற்படும் மாறுபாடு நஷ்டத்தை தரலாம். எனவே பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட் போன்ற எல்லாவிதமான திட்டங்களிலும் பரவலாக முதலீடு செய்யுங்கள். அவை ஏற்ற, இறக்கத்தில் இருந்து சேமிப்பை பாதுகாக்க உதவும். நீண்ட காலத்திற்கு நிலையான வருமானம் கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.
அவசர நிதியை ஒதுக்கவும்:
சிறு சேமிப்பை உடனே தொடங்கிவிடலாம், ஆனால் முதலீடு செய்வதற்கு திட்டமிடுவதற்கு முன்பு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான குடும்ப செலவுகளை ஈடுசெய்யக்கூடிய அவசர நிதி உங்கள் வசம் இருப்பதை உறுதி செய்யுங்கள். அந்த அவசர நிதி எதிர்பாராத நிகழ்வுகளின் போது ஏற்படும் செலவை சமாளிக்க உதவும்.
வரவும் செலவும் இணையாகவோ, மீதமாகும் தொகை சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு மட்டுமே போதுமானதாகவோ இருக்கும்பட்சத்தில் அவசர நிதி கையிருப்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சேமிப்பையோ, முதலீட்டையோ செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அது நிதி இலக்கை நோக்கிய திட்டமிடுதலுக்கு முட்டுக்கட்டையாக மாறிவிடும்.