தமிழ் திரையுலகில் கோலோச்சிய மருதகாசி
|தமிழ் சொல்லாடலுக்காக பாவேந்தரால் தனிப்பட்ட வகையில் பாராட்டு பெற்ற கவிஞர் மருதகாசி, திரை இசை பாடல்களில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர்.
மருதகாசி என்பது வெறும் பெயர் அல்ல. தமிழ் புலமையால் மாநகரம் முதல் பட்டி தொட்டி வரை கேட்போர் அனைவரின் மனதையும் சொக்க வைத்த ஒரு ஆளுமையின் அடையாளம். தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்ட தேமதுர கவி.
தேடி வந்த வாய்ப்பு
இவர் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே தென்கச்சிபெருமாள்நத்தம் அடுத்த குக்கிராமமான மேலகுடிகாடு கிராமத்தில் பாரம்பரியமிக்க ஒரு விவசாய குடும்பத்தில், அய்யம்பெருமாள்-மிளகாயி அம்மாள் தம்பதிக்கு 3-வது மகனாக பிறந்தவர் ஆவார். சிறு வயது முதலே கல்வியில் மிகச்சிறப்பாக தன்னை வளர்த்துக் கொண்டார். அந்த காலத்திலேயே கொள்ளிடம் ஆற்றின் மறுகரைக்கு பயணம் செய்து கும்பகோணம் லிட்டில் பிளவர் பள்ளியில் படித்து, பள்ளி படிப்பை நிறைவு செய்தார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை தொடர்ந்தார். திரைப்படத்துறையில் வாய்ப்புகளை தேடி அலைந்து வாய்ப்புகளைப் பெற்று திரைத்துறையில் வளர்ந்த பலரின் வரலாற்றை நாம் அறிவோம். ஆனால் திரைத்துறையில் வாய்ப்பை தேடாமலேயே மருதகாசியை பாடல் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது உலகறியாத உண்மை. அதுவும் அப்போது திரைத்துறையில் கோலோச்சி நின்ற சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இருந்து அழைப்பு என்றால் சொல்லவா வேண்டும்?!
நாடகங்களுக்கு பாடல்
இன்டர்மீடியட் படிக்கும்போது அவருக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர் திரைப்பாடல் ஆசிரியரான கவிஞர் பாபநாசம் சிவனாரின் சகோதரர் ராஜகோபாலன். இவர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தந்தை ஆவார். மருதகாசியின் தமிழ் ஆர்வத்தை கண்டு வியந்த ராஜகோபாலன் அவரை கவிதை எழுதுவதற்கு ஊக்கப்படுத்தியுள்ளார். அப்போது தேவி நாடக சபா உரிமையாளர் ரத்தினத்தோடு மருதகாசிக்கு அறிமுகம் ஏற்பட்டு, ரத்தினத்தின் நாடகங்களுக்கு மருதகாசி பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். வசதி படைத்தவராக இருந்ததால் வறுமையில் வாடும் நாடகக் கலைஞர்களுக்கு அவரால் இயன்ற அளவுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.
ஏ.கே.வேலன் இயக்கத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தில் உருவான தை பிறந்தால் வழி பிறக்கும் நாடகத்திற்கு அனைத்து பாடல்களையும் மருதகாசி எழுதிக் கொடுத்துள்ளார். இவர்கள் மூவரும் ஒரே அணியாக இருந்து பல நாடகங்களில் பணிபுரிந்துள்ளனர். அதில் மருதகாசி எழுதிய பாடல்கள் பிரபலமடையவே அவரை தனது நிறுவனத்திற்கு பாடல் எழுத மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அழைத்துள்ளது.
வாராய் நீ வாராய்...
தனக்கான சந்தர்ப்பம் அமைந்து விடாதா என்று மாடர்ன் தியேட்டர்ஸ் வாசற்படியில் காத்துக் கிடந்த எத்தனையோ நபர்களுக்கு மத்தியில் வாய்ப்பு தேடி செல்லாமல் மருதகாசியின் வீட்டு வாசலுக்கு மாடர்ன் தியேட்டர்சின் அழைப்பு வந்து சேர்ந்தது. மருதகாசி திரைப்படத் துறைக்கு செல்வது அவரது தந்தை அய்யம்பெருமாளுக்கு பிடிக்காத நிலையில், அவரை ஒரு வழியாக சமாதானம் செய்துவிட்டு திரைத்துறைக்கு செல்ல முடிவெடுத்தார் மருதகாசி. சேலம் மாடர்ன் தியேட்டருக்கு சென்ற மருதகாசி, டி.ஆர்.மகாலிங்கம் நடிக்க ஜி.ராமநாத ஐயர் இசையமைக்க உருவான மாயாவதி திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார்.
அப்போதைய காலகட்டத்தில் வடமொழி கலப்போடு தமிழில் வெளிவந்து கொண்டிருந்த திரையிசை பாடல்கள் மத்தியில் பிறமொழி கலப்பு இல்லாமல் எளிய தமிழ் நடையில் பாடல்கள் எழுதிய மருதகாசியின் நடை அதை கேட்ட அனைவருக்கும் பிடித்துப் போனது. அதன் பின்னர் மருதகாசி மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான கவிஞராக மாறிவிட்டார். அவரோடு அவரது சமகால கவிஞர் காமு ஷெரீப் இணைந்து பல பாடல்களை மாடர்ன் தியேட்டர்சுக்காக எழுதியுள்ளனர். அப்போது கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுத ஆங்கிலேய இயக்குனர் டங்கன் இயக்கிய மந்திரகுமாரி திரைப்படத்தில் 'வாராய் நீ வாராய்' என்ற மிக பிரபலமான பாடலை மருதகாசி எழுதினார்.
மருதகாசியின் பாடல் எழுதும் திறனை கண்டு வியந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், மருதகாசி தனது திரைப்படத்திற்கு பாடல் எழுத வேண்டும் என்று தனது விருப்பத்தை மாடர்ன் தியேட்டர் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னை சென்ற பாடலாசிரியர் மருதகாசி, அதன்பின் ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து பாடல்கள் வரை எழுதியுள்ளார். பாடல் எழுதுவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக கருதாமல் பாடல் பதிவு செய்யப்படும்போது பாடகர்கள் உச்சரிப்பில் பிழை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, பாடல் பதிவு முடியும் வரை காத்திருந்து கவனிப்பது அவரது தமிழ் பற்றுக்கு சான்று என இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அடிக்கடி பல மேடைகளில் கூற கேட்டுள்ளதாக பாடலாசிரியர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
விவசாயம் சார்ந்த பாடல்கள்
தமிழில் முதல் வண்ண திரைப்படமான அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் வெளிவந்த அனைத்து பாடல்களையும் மருதகாசியே எழுதியுள்ளார். அந்த காலகட்டத்தில் வெளிவந்த விவசாயம் சார்ந்த 22 பாடல்களில் 17 பாடல்களை எழுதியவர் மருதகாசிதான். இதன்மூலம் விவசாயத்தின் மீது அவர் கொண்டிருந்த மாறாத காதலை வெளிப்படுத்தி இருந்தார். அவர் எழுதிய 'மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை உழுதுபோடு செல்ல கண்ணு' என்னும் பாடல்களின் ஒவ்வொரு வரிகளும் உயிர்ப்பானவை.
தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பாடல் ஆசிரியர் மருதகாசி தத்துவம், காதல், விவசாயம், உறவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சூழ்நிலைக்கேற்ப நான்காயிரம் பாடல்களுக்கும் அதிகமாக எழுதி தனி முத்திரையை பதித்த வித்தக கவி ஆவார். அவரது எண்ணற்ற பாடல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் விட்டுச்சென்ற இடத்தை இன்றளவும் வேறு எந்த பாடலாசிரியராலும் நிரப்ப முடியவில்லை. எதார்த்தமான பாடல் வரிகளின் ஏகோபித்த அடையாளம் பாடலாசிரியர் மருதகாசி.
மீண்டும் திரைத்துறைக்கு அழைத்த எம்.ஜி.ஆர்.
1957-ம் ஆண்டு வெளிவந்த 40 திரைப்படங்களில் 36 படங்களுக்கு அவர் பாடல் எழுதியது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதன் பிறகு சொந்த திரைப்படம் எடுக்க முடிவு செய்து, அவர் எடுத்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. அந்த திரைப்பட தோல்வியை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இனி இந்த திரைப்படத் தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து சென்னையில் இருந்து புலம் பெயர்ந்து கும்பகோணத்தில் குடியேறினார். அப்போது தனது சொந்த கிராமமான மேல குடிகாடு கிராமத்தில் நேரடியாக விவசாய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவர் மகிழ்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், மீண்டும் நடிக்க வந்தபோது தனது திரைப்படங்களுக்கு மருதகாசி பாடல் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று கருதி உள்ளார். தனது ஆசையை தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரிடம், காசி அண்ணனை பாடல் எழுத வரச் சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர். தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தினர் மீண்டும் மருதகாசியை திரைத்துறைக்கு கொண்டு வந்தனர்.
அதன்பின்னர் விவசாயி, தேர்த்திருவிழா, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களுக்கு மருதகாசி தொடர்ந்து பாடல் எழுதியுள்ளார். ஒருவர் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் விலகி இருந்துவிட்டு மீண்டும் திரைத்துறைக்கு வந்தால் திரை உலகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. ஆனாலும் பாடலாசிரியர் மருதகாசி தனது இரண்டாவது திரைத்துறை பயணத்திலும் மிகச்சிறந்த இடத்தையே பெற்றிருந்தார்.