வெற்றியை எதிர்நோக்கும் பவன் கல்யாண்
|தெலுங்கு சினிமாவில் பரவலான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், பவன் கல்யாண். ‘ப்ரோ’ படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று பவன் கல்யாண் எதிர்பார்க்கிறார்.
2015-ம் ஆண்டு வெளியான 'கோபாலா கோபாலா' திரைப்படத்தில் தன்னுடைய பக்தனுக்காக மனித ரூபத்தில் தோன்றும் இறைவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பவன் கல்யாண். அதன்பிறகு, மீண்டும் ஒரு தெய்வீக சக்தி கொண்ட கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பரவலான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர், பவன் கல்யாண். 1996-ம் ஆண்டு 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' என்ற படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர், கடந்த 27 ஆண்டுகளில் மொத்தமாக 25 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இதில் 12 படங்கள் மட்டுமே நேரடி தெலுங்கு படங்கள். மற்ற 13 படங்களும் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6 வருடங்களாக பவன் கல்யாணுக்கு குறிப்பிடும் படியாக படம் ஒன்றும் அமையவில்லை. 2016-ம் ஆண்டில் இருந்து மிகப் பெரிய வெற்றிக்காக பவன் கல்யாண் காத்திருக்கிறார். ஆனால் தோல்வி அல்லது பரவாயில்லை ரகத்தில்தான் அதன்பிறகான 5 படங்களும் அமைந்திருந்தன. இதில் கடைசியாக வெளியாகி இருந்த இரண்டு படங்களும் பரவாயில்லை ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.
2021-ல் வெளியான 'வக்கீல் சாப்' திரைப்படம், இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும். இதே படத்தை தான் தமிழில் அஜித்குமார் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அவருக்கு அமைந்தது. ஆனால் பவன் கல்யாணின் 'வக்கீல் சாப்' ஓரளவு வெற்றியைதான் கொடுத்தது.
அதன் பின்னர் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த 'ஐயப்பனும் கோஷியும்' திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்தார். 'பீமல நாயக்' என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பவன்கல்யாணுக்கு அளிக்கவில்லை. பரவாயில்லை ரகமாகத்தான் அமைந்தது. மலையாளத்தில் இருந்த இயற்கையான சில விஷயங்களை, தெலுங்கில் தன்னுடைய ரசிகர்களுக்காக செயற்கையாக அமைத்ததன் காரணமாகவே 'பீமல நாயக்' பெரிய வெற்றியை இழந்தது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடித்து வருகிறார், பவன் கல்யாண். இந்தப் படத்தை தமிழிலும், தெலுங்கிலும் அதிகப் படங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு 'ப்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி ஏற்கனவே, தெலுங்கில் 'நாலோ', 'சம்போ சிவ சம்போ', 'ஜன்டா பை கபிராஜூ' ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இவை அனைத்தும் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'உன்னை சரணடைந்தேன்', 'நாடோடிகள்', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களின் ரீமேக் ஆகும்.
சமுத்திரக்கனி மற்றும் தம்பிராமையா ஆகியோரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியான படம் 'வினோதய சித்தம்'. தன்னுடைய மற்றும் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வாழ்விலும் நடைபெறும் விஷயங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் தன்னால்தான் நடத்தப்படுகிறது என்று நம்பும் ஒருவர், திடீரென விபத்தில் இறந்து போகிறார்.
தான் இல்லாவிட்டால் தன் குடும்பம் தவித்துப் போகும் என்று கூறி, 10 நாள் கால அவகாசம் தந்தால், அனைத்தையும் சரி செய்து விட்டு வருவதாக கால தூதனிடம் கேட்கிறார். தானும் உடன் இருப்பதாகச் சொல்லி அந்த நபருடன் வரும் காலதூதன், தனிப்பட்ட ஒருவரால் எந்த விஷயங்களும் நடைபெறுவதில்லை. எல்லாம் காலத்தின் கணக்குப்படியே நடைபெறுகிறது என்பதை இறந்த நபருக்கு பல செயல்களின் மூலமாக எடுத்துரைக்கும் வகையில் படம் அமைந்திருந்தது. இந்தப் படம் பல தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது. இதில் கால தூதனாக சமுத்திரக்கனியும், குடும்ப தலைவராக தம்பிராமையாவும் நடித்திருந்தனர்.
'வினோதய சித்தம்' படத்தின் ரீமேக்தான் 'ப்ரோ'. இதில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத் திரத்தில் பவன்கல்யாணும், தம்பிராமையா நடித்த கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் நடிகரான சாய்தரம் தேஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தெலுங்கு படத்திற்காக குடும்ப உறவுகளின் அமைப்பை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. வயதான குடும்ப தலைவராக நடித்திருந்த தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தை, 'ப்ரோ' படத்திற்காக ஒரு குடும்பத்தின் இளைஞன் என்பதுபோல் மாற்றியிருக்கிறார்களாம்.
சமுத்திரக்கனியின் மீதும் அவரது கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் நடித்து வருகிறார் பவன்கல்யாண். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு வெளியான 'கோபாலா கோபாலா' திரைப்படத்தில் தன்னுடைய பக்தனுக்காக மனித ரூபத்தில் தோன்றும் இறைவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பவன் கல்யாண். அதன்பிறகு, மீண்டும் ஒரு தெய்வீக சக்தி கொண்ட கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.
தெலுங்கின் முன்னணி நடிகர் வெங்கடேஷூடன் இணைந்து பவன் கல்யாண் நடித்திருந்த 'கோபாலா கோபாலா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அதேபோல் 'ப்ரோ' படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று பவன் கல்யாண் எதிர்பார்க்கிறார். ஆனால் காலம் என்ன கணித்து வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.