உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள்
|உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
உடல் எடை அதிகரிப்பது, உடலில் கொழுப்பு அதிகம் படிவது, மன அழுத்தத்தில் இருப்பது, கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரும் நிலைமை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
அதனை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உணவு பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் சில மாறுதல்களை செய்வதன் மூலம் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* உடல் எடையை குறைப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உடனடி பலன் தரக்கூடியது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.
* உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். அதனை தொடர்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
* வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த பழக்கங்களை அறவே தவிர்ப்பது அவசியமானது.
* உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது. காய்கறி ஜூஸ் பருகுவதும், குறிப்பாக கோதுமை புல் ஜூஸ் பருகுவது நன்மை அளிக்கும்.
* பூண்டு, ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பையும் குறைக்கக்கூடியது. அதனால் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது.
* செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரியும். அத்துடன் உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கீரை உதவி புரியும்.
* மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிக்க உதவும்.