ஆச்சரியமளிக்கும் 'மொபைல் டேட்டா' விலை
|‘மொபைல் டேட்டா’க்கள் மலிவு விலையில் கிடைப்பதும் இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. இஸ்ரேல்தான் உலகிலேயே மலிவான மொபைல் டேட்டா கட்டணம் விதிக்கும் நாடாக விளங்குகிறது.
இணையம் இன்றைய வாழ்வியலுக்கு அவசியமாகிவிட்டது. தனிநபர் பயன்பாடு மட்டுமின்றி தொழிற்துறை சார்ந்தும் இணையத்தின் தேவை உள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் பல்வேறு பணிகளை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
'மொபைல் டேட்டா'க்கள் மலிவு விலையில் கிடைப்பதும் இணையத்தின் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. எனினும் உலக நாடுகள் பலவற்றிலும் மொபைல் டேட்டாக்களின் விலை மாறுபடுகிறது. ஒரு ஜி.பி. டேட்டாவை மலிவான விலைக்கு விற்பனை செய்யும் நாடுகளும் இருக்கின்றன. பல மடங்கு அதிக தொகைக்கு விற்பனை செய்யும் நாடுகளும் உள்ளன. மலிவான மொபைல் டேட்டா கட்டணங்கள் விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. ஒரு ஜி.பி. டேட்டா சராசரியாக 14.06 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்தான் உலகிலேயே மலிவான மொபைல் டேட்டா கட்டணம் விதிக்கும் நாடாக விளங்குகிறது.
அங்கு ஒரு ஜி.பி மொபைல் டேட்டாவின் விலை 3 ரூபாய் 31 பைசாதான். அதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் இத்தாலி, இந்திய மதிப்பில் ஒரு ஜி.பி. டேட்டாவை 9.93 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இப்போது 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா (ஒரு ஜி.பி டேட்டா ரூ.14.06) கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்தது.
பிரான்ஸ் (ரூ.19.03), உருகுவே (ரூ.22.34) 4-வது, 5-வது இடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வங்காளதேசம் (ரூ.26.48), பாகிஸ்தான் (29.79), துருக்கி (ரூ.32.27), சீனா (ரூ.33.93), டென்மார்க் (ரூ.35.59) ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 வரையிலான இடங்களில் உள்ளன.
இத்தாலியில் ஒரு ஜி.பி. டேட்டா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், மறு முனையில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருக்கும் செயிண்ட் ஹெலினா தீவில் ஒரு ஜி.பி. மொபைல் டேட்டாவின் விலை எவ்வளவு தெரியுமா? அமெரிக்க மதிப்பில் 41.06 டாலர்கள். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.3,398.
செயின்ட் ஹெலினாவில், ஒரு ஜி.பி. டேட்டாவின் சராசரி விலை இந்தியாவை விட 241 மடங்கு அதிகம். இதேபோல், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ளவர்கள் ஒரு ஜி.பி டேட்டாவிற்கு செலுத்தும் தொகையை விட முறையே இரண்டு மடங்கு, நான்கரை மடங்கு மற்றும் 33 மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு ஜி.பி மொபைல் இன்டர்நெட் டேட்டாவின் சராசரி விலை உலகளவில் மிகக் குறைவு. இத்தகைய மலிவான விலை நாட்டில் மொபைல் இணைய சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 43 சதவீதம் பேர் மொபைல் இணைய சேவையை பெற்றுள்ளனர்.