நேர மேலாண்மையை நிர்வகிக்கும் வழிமுறைகள்
|வேலைகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக ஓய்வில்லாமல் அதிலேயே மூழ்கிவிடக்கூடாது. அது உடலுக்கும், மனதுக்கும் சோர்வைத்தரும். அதற்காக நீண்ட நேரம் ஓய்வெடுத்தாலும் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். வேலைகளுக்கு இடையே சில நிமிடங்களை ஓய்வுக்கு ஒதுக்குங்கள். அந்த சமயத்தில் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, தியானத்தில் ஈடுபடலாம்.
வேலை-வாழ்க்கை இரண்டுக்கும் சம நிலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். தூக்கமும் அவசியமானது.
உடற்பயிற்சி செய்வதற்கும் தினமும் நேரம் ஒதுக்க வேண்டும். அது உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். அதுவும் வேலை திறனை மேம்படுத்துவதற்கு துணைபுரியும்.
நேரத்தை வீணடிக்கும் செயல்களில் கவனம் திசை திரும்புவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. வேலை நேரத்தில் தொலைபேசிகளை அருகில் வைத்திருப்பது, இணைய தள பக்கங்களை திறந்த நிலையில் வைத்திருப்பது கவன சிதறல்களுக்கு இடம் கொடுக்கும். அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொண்டால்தான் வேலையில் முழு கவனத்தையும் செலுத்த முடியும்.
ஒவ்வொரு பணிக்கும் காலக்கெடுவை நிர்ணயிக்கவும். அது விரைவாக வேலை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும். சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பதற்கு ஊக்குவிக்கும்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒருங்கிணைத்து செய்யும் 'மல்டி டாஸ்டிங்' பணியை கூடுமானவரை தவிர்க்கவும். அது வேலை திறனை குறைக்கும். ஒவ்வொரு வேலையின் மீதும் முழு கவனம் பதிவதை தடுக்கும்.
எந்தவொரு வேலையையும் செய்வதற்கு முன்பும் திட்டமிடுங்கள். சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். இது உங்களை ஒழுங்கமைத்து சரியான பாதையில் பயணிக்க வைக்கும். வேலையையும் துரித கதியில் முடித்துவிடலாம்.
எல்லா வேலையையும் நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். சில வேலைகளை நம்பிக்கைக்குரியவர்களிடம் ஒப்படையுங்கள். வெளி நபர்களை நாடும் 'அவுட்சோர்ஸ்' முறையையும் பின்பற்றலாம். அது முக்கியமான பணிகளில் நீங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்து வதற்கு வித்திடும்.
மிக முக்கியமான மற்றும் அவசரமான பணிகளைக் கண்டறிந்து அவற்றை விரைவாக செய்து முடிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதுவும் நேர மேலாண்மையை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.