< Back
ஞாயிறுமலர்
மாம்பழம் உண்பதற்கு சரியான நேரம்..!
ஞாயிறுமலர்

மாம்பழம் உண்பதற்கு சரியான நேரம்..!

தினத்தந்தி
|
30 April 2023 9:15 PM IST

மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்ச்சத்துமிக்க உணவுப் பொருட்களையும் உட்கொள்வது உடலில் எலக்ரோலைட் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும். கோடை காலத்தில் பலரும் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம் போன்ற பருவ கால பழங்களை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும். நீரிழப்பை தடுக்கும்.

கோடை காலத்தில் பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது முக்கியம். இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

இதுகுறித்து உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா, ''நாம் உண்ணும் உணவு சிக்கலின்றி செரிமானத்திற்கு உள்ளாக வேண்டும். கல்லீரலில் சுரக்கும் ஒரு வகை திரவம், செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் போன்றவை மூலம் உணவு உடைக்கப்படும்.

சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை. அதனால் செரிமானம் சரியாக நடைபெறாது. அதன் காரணமாக வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகும். மாம்பழங்களில் அமிலேஸ், புரோட்டீஸ், லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் உள்ளன. அவை உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகளை உடைக்கவும், வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகின்றன.

மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. அது குடல் இயக்கத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும். எனவே உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்'' என்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாம்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நீரிழிவு நோயை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் மாம்பழத்தில் அதிகம் உள்ளன. அவை இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.

மேலும் செய்திகள்