பள்ளி மாணவர்களின் 'நீண்ட' சாதனை
|மாணவர்களை குழுவாக ஒன்றிணைத்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்கத்திலும் கின்னஸ் சாதனை முயற்சில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், கட்டிடக்கலை ஆசிரியர், பீட்டர் வாக்டெல்.
இறைச்சிகள், பாலாடைக்கட்டிகள் மற்றும் பலவிதமான இனிப்பு பலகாரங்கள், மினியேச்சரில் வடிவமைக்கப்படும் மிக சிறிய வடிவிலான கலைப்படைப்புகளை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சிறிய பலகை வடிவத்தை சேர்ந்தவை சார்க்குட்டரி போர்டுகள். அவை பெரும்பாலும் 9×13 அல்லது 12×18 அங்குலம் அளவையே கொண்டிருக்கும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உலகின் மிகப்பெரிய சார்க்குட்டரி போர்டை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அந்த பலகையின் நீளம் 62.38 மீட்டர். அதாவது 204 அடி நீளமும், 7.8 அங்குலம் அகலமும் கொண்டவை. இந்த பலகையின் நீளத்தை அளவிட்டு பார்த்தால் 13 மாடி உயர கட்டிடத்துக்கு இணையான அளவை கொண்டிருக்கிறது.
அங்குள்ள அடோல்போ கேமரில்லோ உயர்நிலைப் பள்ளியில் கட்டிடக்கலை ஆசிரியராக பணிபுரியும் பீட்டர் வாக்டெல் என்ற ஆசிரியர் தனது மாணவர்களை ஊக்கப்படுத்தி இந்த சாதனை பலகையை உருவாக்கி இருக்கிறார். பள்ளியின் கூடைப்பந்து மைதானத்தில் விளையாட்டை பார்ப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த பலகை வடிவ இருக்கைகள் பயனற்று கிடந்த நிலையில் அவற்றை மறுசுழற்சி செய்து சார்க்குட்டரி போர்டுகளாக உருவாக்கி விட்டார்.
சுமார் 50 மாணவர்கள் 3 மாதங்கள் பணிபுரிந்து இந்த பலகையை வடிவமைத்திருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் உள்ள கட்டிடக்கலை வடிவமைப்பு கூடத்தில் இந்த பலகை வடிவம் பெற்றிருக்கிறது.
இறுதியில் 204 நீளம் கொண்ட இந்த நீண்ட பலகையில் இறைச்சிகள், பாலாடைக்கட்டிகள், நட்ஸ் வகைகள், உள்பட சுமார் 230 கிலோ எடையுள்ள பலவகையான உணவுப்பொருகளை அடுக்கி வைத்து கின்னஸ் சாதனை குழு முன்பு சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்கள் சரிபார்த்து கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கிவிட்டார்கள்.
நீண்ட நாட்களாக உபயோகப்படாமல் பாழடைந்த நிலையில் கிடக்கும் எந்த பொருளையும் குப்பையில் போட வேண்டியதில்லை. அவற்றை ஏதாவதொரு வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களை குழுவாக ஒன்றிணைத்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் நோக்கத்திலும் இந்த கின்னஸ் சாதனை முயற்சில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், கட்டிடக்கலை ஆசிரியர், பீட்டர் வாக்டெல்.