< Back
ஞாயிறுமலர்
இதயம் காப்போம்.... இனிமையாக வாழ்வோம்!
ஞாயிறுமலர்

இதயம் காப்போம்.... இனிமையாக வாழ்வோம்!

தினத்தந்தி
|
14 Jun 2023 1:01 PM IST

கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ் எம்.டி., டி.என்.பி (கார்டியோ).

நவீனம் புகுந்துவிட்ட மனித வாழ்க்கை பரபரப்பு மிகுந்ததாக காணப்படுகிறது. எப்போதும் எதையாவது ஒன்றை நோக்கிய பயணத்துடன், தேடலுடன் மனித வாழ்க்கை நகர்கிறது. மனிதனின் இந்த தேடலில் அதிகம் பாதிக்கப்படும் உடல் உறுப்பு இதயம் என்றால் அது மிகையல்ல. அதிக ஆசை, கற்பனையில் தோன்றிய வாழ்க்கை லட்சியத்தை அடைய எப்போதும் பரபரப்பு, அதிக எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பலவீனம்... இது போன்ற நிகழ்வுகளால் இதயத்தின் 'லப்டப்' சத்தம் அடிக்கடி தடுமாறுகிறது. தவறான உணவுப்பழக்கம், போதையில் மூழ்குவதில் ஆர்வம், போதிய உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாதது... போன்றவற்றால் ரத்தம் பாயும் பாதையில் (ரத்த நாளங்களில்) கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இது தான் மாரடைப்பின் அபாய கட்டம்.

இந்த அபாயம் ஒரே நாளில் வருவதல்ல. பாதிப்புகள் தொடங்கும் போதே உடலும், இதயமும் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் தான் அதை பொருட்படுத்துவதில்லை. எல்லாம் முற்றிப்போய், முடியாத கட்டம் வரும் போது, தடுமாறும் இதயம் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்கிறது.

சர்வதேச அளவில் அதிகமான மக்கள் இறப்புக்கு காரணமாக இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு உள்ளது. இதில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி, மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும், ஆரோக்கியமாக இதயத்தை வைத்துக்கொள்வது எப்படி.... என்பது போன்ற சந்தேகம் நமக்கு ஏற்படுவதுண்டு. இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ் எம்.டி., டி.என்.பி (கார்டியோ).

அவரது பேட்டி...

இதயத்தின் செயல்பாடு குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் சுருக்கமாக கூறுங்கள்?

கருவில் முதல் முதலாக இயங்க ஆரம்பிக்கும் உறுப்பு இதயம் தான். ஆறு வார கருவில் ஆரம்பித்து கல்லறை வரை இடைவிடாது இயங்கும் உறுப்பு இதயம் மட்டுமே!. இதில் இருந்தே இதய செயல்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.

பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் அத்தியாவசியமானது. கெட்ட பழக்கவழக்கங்கள் இன்றி, கிடைக்காதவைகளை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் ஏங்குவதை விட்டுவிட்டு, நமக்கு கிடைத்தவைகளை மனப்பூர்வமாக ஏற்று நன்றி உணர்வுடனும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்தால், இதயம் ஆரோக்கியம் பெறும்.

இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் - உடற்பயிற்சிகள் எவை?

நிறைய காய்கறிகள், பட்டைத்தீட்டாத முழு தானியம், பழங்கள், அளவான அசைவ உணவு (சவ்வற்ற இறைச்சி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு) போன்றவை இதயத்திற்கு பாதுகாப்பான உணவு. வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி (நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல்) செய்வது நன்று.

ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதை எப்படி அறிந்து கொள்வது? மேலும், மாரடைப்பிற்கும், சாதாரண வாய்வு பிரச்சினைக்கும் உள்ள வேறுபாட்டை எப்படி உணர்வது?

மூச்சுத்திணறல், அதிக அளவு வியர்வையுடன் கூடிய நெஞ்சு வலி - கீழ் தாடைக்கும் இடது கைக்கும் பரவுதல் மாரடைப்பின் அறிகுறி ஆகும். நெஞ்சு எரிச்சல், ஏப்பம், குமட்டல் ஆகியவை வாய்வு பிரச்சினைக்கான அறிகுறிகள். ஆனால், பெரும்பான்மையான நேரங்களில், மாரடைப்பையும், வாய்வு தொந்தரவையும் துல்லியமாக கண்டறிவது கைதேர்ந்த மருத்துவர்களுக்கே கடினமான ஒன்று. எனவே, சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நேரம் கடத்தாமல் மருத்துவ உதவியை நாடுவது நன்று.

எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு வருவது ஏன்?

முதுமை, சில இனப்பிரிவினர் (குறிப்பாக தெற்கு ஆசியர்கள்), மரபியல் மாற்றங்கள் போன்ற நம்மால் மாற்ற முடியாத ஆபத்துக் காரணிகளால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அது தவிர, கட்டுப்பாடில்லாத சர்க்கரை வியாதியும், ரத்த அழுத்தமும், மன அழுத்தமும், மாரடைப்புக்கு காரணமாக அமைகின்றது.

இதய நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகிறது. குறிப்பாக, அதிகாலை நேரத்தில் தான் பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறதா?

ஆம்! பெரும்பான்மையான மாரடைப்பு அதிகாலை வேளையில் தான் ஏற்படுகிறது. காரணம், அதிகாலையில் தான், நம் உடலில் ரத்தத்தை உறையவைக்கக்கூடிய ரசாயன மாற்றங்களும், இயக்குநீர் என்று சொல்லக்கூடிய ஹார்மோன்களும் அதிகம் சுரக்கின்றன.

அதுபோல திங்கட்கிழமைகளில் தான் அதிக அளவு மாரடைப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறதே?

இதில் ஓரளவு உண்மை உள்ளது. ஆனால், அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு போதிய பதிவேற்றங்களும், காரணங்களும் இன்னும் அறியப்படவில்லை.

இதயத்துடிப்பில் மாற்றம் ஏற்பட்டால், என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்?

லேசான தலை சுற்றல், மயக்கம் முதல் திடீர் மரணம் வரை எதுவும் நேரலாம்.

ரத்தக்குழாய்களில் ஏன் அடைப்பு ஏற்படுகிறது?

ரத்தக்குழாய் அடைப்பு என்பது கெட்ட கொழுப்பு, ரத்தக்கட்டி, கால்சியம் படிமம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையாகும். ரத்தக்குழாயில் ஏற்படும் சேதத்தினால் இந்த கலவையானது உண்டாகி ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

குடும்பத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?

ஒருவருக்கு மாரடைப்பு என்ற சந்தேகம் வந்து விட்டால், காலதாமதமின்றி மருத்துவ உதவியை நாடுவதே சாலச்சிறந்தது. ஆஸ்பிரின் (aspirin) என்ற உயிர் காக்கும் மருந்தை மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு உட்கொள்வது சில நேரங்களில் உதவலாம்.

சளி, வாய்வு தொல்லை காரணமாக மாரடைப்பு ஏற்படுமா?

ஏற்படாது.

எந்த சூழலில் சுவாசிக்க முடியாத அளவிற்கு மூச்சடைப்பு ஏற்படும்?

இதய வியாதியினால், இதய பம்பிங் வெகுவாக குறையும் நிலையில், நுரையீரலில் நீர் தேக்கம் ஏற்படுவதன் காரணமாக சுவாசிக்க முடியாத அளவிற்கு மூச்சடைப்பு ஏற்படும்.

ரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன? ரத்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்?

தேவையில்லாத பதற்றம், பயம், கோபம் மற்றும் ஆரோக்கியமற்ற (அதிக உப்பு நிறைந்த) உணவுமுறை ஆகியவை ரத்த அழுத்தத்திற்கு முக்கியமான காரணங்கள். ரத்த அழுத்தத்திற்கு சரியான தொடர்சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறினால், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகள் உண்டாக வாய்ப்பு உண்டு.

ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் எதனை சாப்பிட வேண்டும், எதனை தவிர்க்க வேண்டும்?

நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். உப்பு, கொழுப்பு நிறைந்த பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

இதய நோய்களில் எத்தனை வகைகள் இருக்கிறது? எந்த வகையான இதய நோய் உயிருக்கு ஆபத்தானது?

இதய நோய்கள், பிறவிக்குறைபாடு முதல் வயோதிகத்தில் வரும் வியாதிகள் வரை பல்வேறு வகைப்படும். இவற்றுள், இதய ரத்தக்குழாய் அடைப்பு, தசைநார்கள் பாதிப்பு, இதய வால்வு பாதிப்பு, இதயத்தின் மின் செயல்பாடு திறன் பாதிப்பு போன்றவை பிரதான இதய நோய் வகைகள் ஆகும். ஆபத்தான இதய நோய் என்று எதனையும் பிரித்துப்பார்க்க இயலாது. அனைத்து வகையான இதய நோய்களும் உயிருக்கு ஆபத்தானவையே.

இதய மருத்துவ பரிசோதனைகளான ஈ.சி.ஜி, எக்கோ, டி.ம்.டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன? எந்த சமயத்தில் எந்த பரிசோதனையை எடுக்க வேண்டும்?

ஈ.சி.ஜி பரிசோதனை மூலம் இதயத்தின் மின் செயல்பாட்டையும், சில நேரங்களில் மாரடைப்பையும் கண்டறியலாம். எக்கோ பரிசோதனை மூலம் இதயத்தின் செயல்பாட்டுத்திறனை கண்டறியலாம். டி.ம்.டி பரிசோதனை மூலம் சில நேரங்களில் இதய ரத்தக்குழாய் அடைப்பிற்கான அறிகுறிகளை கண்டறியலாம். எந்த நேரத்தில் எந்த பரிசோதனையை செய்யவேண்டும் என்பதை, நோயாளியின் அறிகுறியை வைத்து மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப செய்வது நல்லது.

ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் வேறுபாடுகள் என்ன?

ஆஞ்சியோகிராம் என்பது இதய ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் சிறந்த பரிசோதனை ஆகும். ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் என்பது இருவேறு சிகிச்சைகள் அல்ல, இவை இரண்டும் இதய ரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையாகும்.

குழந்தை பருவம் முதல் வயோதிகம் வரை, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் வாழ்க்கை முறைகள் எவை?

ஜங்க் புட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு, புகை மற்றும் மது தவிர்த்தல், பசிக்கு உணவு, மிதமான உடற்பயிற்சி, சுறுசுறுப்பாக இருத்தல், தியானம் ஆகிய வாழ்க்கை முறைகள் மாரடைப்பில் இருந்து நம்மை காப்பாற்றும். இதயத்தையும் பாதுகாக்கும்.

இதய நோயின் அறிகுறிகள் என்ன?

நெஞ்சு வலி (அதாவது நெஞ்சின் நடுப்பகுதியில் இனம்புரியாத தீவிர அழுத்தம்), மூச்சு திணறல், மயக்கம், அதீதமான வியர்வை, அதிக நேரம் நீடிக்கும் படபடப்பு போன்றவை இதய நோயின் அறிகுறிகள் ஆகும்.

பணிச்சுமை, மன அழுத்தம், போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், இதயத்தின் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?

சாமானிய மனிதன் முதல், நாட்டின் அதிபர் வரை அனைவருக்கும் ஏதோ ஒரு போராட்டம் இருக்கத்தான் செய்யும். அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு. தேவையற்ற கலக்கங்களை களைவதும், நம் பணியை பதற்றமின்றி ஆர்வத்துடன் செய்வதும், நல்ல உறவுமுறைகளை பேணுவதும், எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வதும் நம் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். தினமும் 15 நிமிடம் தியானம் செய்வதும் பலன் கொடுக்கும்.

இவ்வாறு டாக்டர் ஜி. வெங்கடேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்