< Back
ஞாயிறுமலர்
ஹீரோயிசத்தால் தனித்தன்மையை இழந்த பாலிவுட் கைதி
ஞாயிறுமலர்

ஹீரோயிசத்தால் தனித்தன்மையை இழந்த பாலிவுட் 'கைதி'

தினத்தந்தி
|
2 April 2023 9:50 PM IST

‘போலா’ படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கதாநாயகனை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹீரோயிசத்தை திணிப்பது எல்லாம், இனி வரும் காலத்தில் பெரியதாக ரசிகர்களிடம் எடு படாது.

'போலா' படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கதாநாயகனை பழிவாங்கியே தீருவேன் என்ற கதாபாத்திரத்தில் ஏற்கனவே அவரால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அபிஷேக்பச்சன் நடித்திருக்கிறார். ஒரு சில நிமிடங்களே திரையில் தோன்றும் அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. கொடூர தோற்றத்தில் ஒரு கையை இழந்த நிலையில் அவர் காணப்படுகிறார்.

ஒரு படத்தின் ஹீரோவை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, சண்டைக் காட்சிகளை வேண்டுமென்றே திணிப்பது, கதைக்கு தேவையே இல்லை என்றாலும் சில 'பில்டப்' காட்சிகளை சேர்ப்பது போன்ற விஷயங்களால் தோல்வியை சந்தித்த படங்களை பட்டியலிட முடியும்.

இந்திய சினிமாவின் பல்வேறு மொழிகளில் உள்ள முன்னணி நாயகர்களின் படங்களில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுவதை பார்க்கலாம். சினிமாவின் தரம் பெருமளவில் மாறிவிட்ட நிலையிலும் கூட இன்றும், அதுபோன்ற 'பில்டப்' காட்சிகளை வைப்பது இருக்கத்தான் செய்கிறது. அது சில நேரம் கை கொடுக்கலாம். ஆனால் பல நேரங்களில் காலை வாரி விட்ட கதைதான் நிகழ்ந்திருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'கைதி'. தரமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, கதைக்கு தேவைப்படும் காட்சிகள், ரசிகர்கள் விரும்பும் வகையிலான சண்டைக்காட்சிகள் என்று கலவையாக அமைந்த படம் அது. ரூ.25 கோடியில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 'கைதி'க்கு முன்பாக 'மாநகரம்' என்ற சிறப்பான படத்தை இயக்கியிருந்தாலும், 'கைதி' படம்தான், லோகேஷ் கனகராஜை மிகப்பெரிய இயக்குனராக மாற்றியது என்றால் அது மிகையல்ல. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த கார்த்தி, படத்தின் கதையோட்டத்திற்கு என்ன தேவையோ, அதை மட்டுமே படத்தில் கொடுத்திருந்தார். தான் ஒரு கதாநாயகன், எனக்கு ஆங்காங்கே 'பில்டப்' காட்சிகள் வேண்டும் என்று அவர் அடம்பிடிக்கவில்லை.

அதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவரை சாதாரண கதாநாயகன் மாதிரியும் அந்தப் படத்தில் காட்டவில்லை. ஒரு கதாநாயகனுக்கான அத்தனை தனித்தன்மையான விஷயங்களும் அதில் இருந்தன. எந்த இடத்தில் கதாநாயகனை உயர்த்திக் காட்ட வேண்டுமோ, அந்த இடத்தில் கதையின் போக்கை மாற்றாத வகையில் அவரது ஹீரோயிசம் அமைந்திருந்தது. கதையின் போக்கில் ஹீரோயிசம் அமைந்திருந்த காரணத்தால்தான், அந்தப் படம் ஒரு இயக்குனரின் படமாகவும், ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் வகையிலான படமாகவும் இருந்தது.

மிகப்பெரிய வெற்றியை அடைந்த அந்தப் படத்தை, பாலிவுட்டில் நடிக்கும் உரிமையை அங்கு முன்னணி நடிகராக இருக்கும் அஜய்தேவ்கன் வாங்கியிருந்தார். படத்தின் கதாநாயகனாக நடித்ததுடன், அந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்தார். படத்தில் ஒரு சில மாறுதல்களையும் செய்திருக்கிறார். 'போலா' என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மூலமாகவே, படத்தில் கதாநாயகனுக்கு நிறைய பில்டப் காட்சிகள் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தப் படம் கடந்த வியாழக்கிழமை (30-3-2023) அன்று வெளியாகியிருக்கிறது. 'கைதி' படத்தில், கதாநாயகன் கார்த்திக்கு நிகரான கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நரேன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை பெண்ணின் கதாபாத்திரமாக அஜய்தேவ்கன் மாற்றியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில், அவரது நெருங்கிய தோழியான தபுவை நடிக்க வைத்திருக்கிறார்.

அதே போல் 'கைதி' படத்தில், கார்த்தி 10 வருடங்களாக சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார் என்பதும், கேங்ஸ்டராக இருந்த தன்னை ஒரு பெண்ணின் காதல் மாற்றியது, அவளின் இறப்புக்கு காரணமானவர்களை கொன்றதால், அந்த சிறை தண்டனை கிடைத்தது என்பதும், பிறந்த உடனேயே சிறைக்கு சென்றதால் இதுவரை பார்க்காத தன் மகளைப் பார்ப்பதற்காக அவர் செல்கிறார் என்பதும், படத்தில் ஆங்காங்கே வரும் சில வசனங்களின் மூலமாகவே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும்.

ஆனால் 'போலா' படத்தில் இவை அனைத்தும் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. 'கைதி'யில் இல்லாத கதாநாயகி கதாபாத்திரத்தை, பாலிவுட்டில் உருவாக்கி, அவரை காப்பாற்றுவது, திருமணம் செய்வது, அவரை கொன்றதற்காக சிலரை கொன்று சிறைக்குச் செல்வது என்று அனைத்து இடத்திலும் ஹீரோவை 'பில்டப்' செய்திருக்கிறார்கள். அதோடு 'போலா' படத்தின் ஆரம்ப காட்சியில் அஜய்தேவன், சிறையில் புத்தகம் படிப்பது, அவர் விடுதலை செய்யப்படும் போது, சிறைக்குள் நடந்து வருகையில், மற்ற கைதிகள் அவரை ஆரவாரம் செய்து அனுப்பி வைப்பது என்று தேவையில்லாத ஆணியை எல்லாம் சொருகி வைத்திருக்கிறார்கள். அவை ஹீரோவை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.

'கைதி' படத்தில் காட்டிற்குள் நடக்கும் சண்டைக் காட்சி படத்திற்கு தேவையான ஒன்றுதான். அந்த சண்டைக் காட்சியும் கூட மிகப்பெரிய பிரமாண்டமாக இல்லாமல் ஓரளவு யதார்த்தமான சண்டைக்காட்சியாகவே அமைந்திருக்கும். ஆனால் 'போலா' படத்தில் லாரியை ஓட்டிச் செல்லும் கதாநாயகன், பைக்கில் வரும் அடியாட்களை துவம்சம் செய்வதோடு, தானும் ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு சாகசங்களிலும் ஈடுபடுவது, தேவையில்லாத ஹீரோயிசம் என்பதைத் தவிர வேறு என்ன? சூலாயுதத்தை வைத்துக் கொண்டு அவர் வில்லன் கூட்டத்தை கொன்று குவிக்கும் காட்சியெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம்.

'போலா' படம் பாலிவுட்டில் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், முதல் நாள் வசூலாக இந்திய அளவில் ரூ.13 கோடியையும், உலக அளவில் மொத்தமாக ரூ.20 கோடியையும் வசூல் செய்திருக்கிறது. சனி, ஞாயிறுக்கிழமைகளின் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டால்தான், படம் தேறுமா? தேறாதா? என்பதை சொல்ல முடியும்.

படத்திற்கு தேவையான இடத்தில் ஹீரோயிசத்தை வைப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஒரு கதாநாயகனை உயர்வாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹீரோயிசத்தை திணிப்பது எல்லாம், இனி வரும் காலத்தில் பெரியதாக ரசிகர்களிடம் எடு படாது. 'கைதி' திரைப்படத்தை இன்னும் எத்தனை மொழிகளில் எடுத்தாலும், கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே வைத்து நியாயம் செய்த லோகேஷ் கனகராஜூம், தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து, அதற்கு ஏற்றாற் போல் நடித்த கார்த்தியும்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார்கள்.

மேலும் செய்திகள்