< Back
ஞாயிறுமலர்
ஜப்பானியர்களின் கட்டுடல் ரகசியம்
ஞாயிறுமலர்

ஜப்பானியர்களின் கட்டுடல் ரகசியம்

தினத்தந்தி
|
21 Sept 2023 5:42 PM IST

உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் 1450 பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

உணவு பழக்கம்:

கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

உடற்பயிற்சி:

கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள். உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

உணவு தயாரிக்கும் முறை:

ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும். உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது. ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

கிரீன் டீ

ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

மீன்கள்

ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

மேலும் செய்திகள்