பூக்களுக்கு மாற்றாக... புது அவதாரம் எடுக்கும் மாலைகள்
|உள்ளம் அமைதி, தெளிவு பெறுவதற்கு இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாட்டில் தவறாமல் இடம்பிடிப்பது பூக்கள். கள்ளம், கபடமின்றி இதழ் திறந்து சிரித்து நம்மை ரசிக்க வைக்கின்றன பூக்கள்.
இறைவனை வழிபடவும், திருமணவிழா, பூப்புனித நீராட்டு விழா உள்பட அனைத்து குடும்ப விழாக்களிலும் மாலைகள் வடிவில் பூக்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. அரசியல் தலைவர்களை கவுரவிக்கவும் பிரமாண்ட மாலைகளை அணிவித்து பலர் அசத்துகின்றனர்.
அகிலத்தை ஆளும் ஆண்டவன் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் மாலைகள் அணிவிப்பது வழக்கமாக இருக்கிறது. பொதுவாக ரோஜா, சம்பங்கி, செவ்வந்தி, செண்டுமல்லி, மல்லிகை என விதவிதமான பூக்களை கொண்டு மாலைகளை கட்டுவார்கள். ஆனால், ஒருவர் மணம் வீசும் மலர்களை தவிர்த்து, உடலுக்கு பலம் தரும் பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர்ந்த கருப்பு திராட்சை, செர்ரி பழம் ஆகியவற்றை கொண்டு மாலைகளை கட்டி இருக்கிறார். அதுவும் 3 மாலைகளை கட்டி அசத்தி உள்ளார், செல்வக்குமார் என்ற வாலிபர். 29 வயதாகும் இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ மாலை கடை வைத்துள்ளார். சக தொழிலாளர்களுடன் இணைந்து பம்பரமாக சுழன்று மாலை கட்டி கொண்டிருந்த அவரிடம், பூக்கள் இல்லாமல் மாலைகள் கட்டியது பற்றி கேட்டோம். அவர் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பூ மாலை கட்டும் வேலைக்கு எப்படி வந்தீர்கள்?
நிலக்கோட்டை அருகே உள்ள பழையகாமன்பட்டி எனது சொந்த ஊர். தந்தை சேகர் விவசாயி. தாயார் முத்துலட்சுமி. எனக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், ரக்சன் என்ற மகனும், ஹனிதா என்ற மகளும் உள்ளனர். நான் 10-ம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழலால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. இதனால் குடும்பத்துக்காக வேலைக்கு செல்ல நினைத்தேன். ஆனால் என்ன வேலைக்கு செல்வது என்று தெரியவில்லை. அப்போது எனது தம்பி சரவணன் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மாலை கட்டும் வேலை செய்து வந்தார்.
அதுவரை எங்கள் குடும்பத்தில் யாருக்கும் மாலை கட்டும் வேலை தெரியாது. எனது தம்பி தான் குடும்பத்தில் முதன்முதலாக மாலை கட்டும் வேலைக்கு சென்றார். எனவே நானும் வேறுவழியின்றி எனது தம்பியுடன் சேர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாலை கட்டும் வேலையில் சேர்ந்தேன். அங்கு தான் பலவிதமான மாலை கட்டும் வேலையை கற்றுக்கொண்டேன்.
சென்னையில் இருந்து நிலக்கோட்டைக்கு வந்து ஏன் பூ கடை வைத்தீர்கள்?
உலகையே மாற்றி போட்ட கொரோனா தான் எனது வாழ்க்கையையும் திருப்பி போட்டது. கொரோனா தொற்றால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் பலர் வேலையிழந்தனர். எனவே நான் உள்பட என்னுடன் மாலை கட்டும் வேலையில் ஈடுபட்ட எனது நண்பர்களும் ஊருக்கு வந்துவிட்டோம். கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் மீண்டும் சென்னைக்கு செல்ல மனமில்லை.
உள்ளூரில் வேலை செய்ய முடிவு செய்தேன். அதேநேரம் எனக்கு நன்கு தெரிந்த மாலை கட்டும் தொழிலை கைவிட மனமில்லை. நமக்கு தெரிந்த தொழிலை திறம்பட செய்வது தானே சிறந்தது. எனவே நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கடை வைத்து மாலை கட்டி விற்பனை செய்து வருகிறேன்.
பாதாம், பிஸ்தா கொண்டு மாலை கட்டும் ஐடியா எப்படி வந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையை சேர்ந்த ரூபன், சீலன் ஆகியோர் அங்குள்ள வன்னியடி மறச்சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, செர்ரி ஆகியவற்றை கொண்டு மாலையை கட்டி காணிக்கையாக வழங்க முடிவு செய்தனர். இதற்காக தோவாளையை சேர்ந்த ஒரு பூ வியாபாரியை அவர்கள் தொடர்பு கொண்டனர்.
அந்த பூ வியாபாரி, நான் பல்வேறு வகையான மாலைகள் கட்டுவதை அறிந்து என்னை தொடர்பு கொள்ளும்படி கூறியிருக்கிறார். அதன்படி 2 பேரும் என்னை தொடர்பு கொண்டு பாதாம் உள்ளிட்டவை கொண்டு மாலைகள் கட்டி தரும்படி கேட்டனர். நானும், எனது நண்பர்களுடன் சேர்ந்து 3 மாலைகளை கட்டி கொடுத்தேன்.
அந்த மாலைகளை கட்டிய அனுபவத்தை பற்றி கூறுங்கள்?
பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றை கொண்டு மாலைகள் கட்டுவது, எனக்கும் அதுவே முதல்முறை தான். அதேநேரம் நமது தொழிலில் சாதிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். திட்டமிடல், தன்னம்பிக்கை, ஆர்வம் இருந்தால் உழைப்பு தானாக வந்துவிடும். இவை ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதாகி விடும். மாலைகளை கட்டுவதற்கு ஒப்புக்கொண்டேன். இதையடுத்து 8 அடி உயரத்தில் 2 மாலைகளுக்கும், 4 அடி உயரத்தில் ஒரு மாலைக்கும் அவர்கள் ஆர்டர் கொடுத்தார்கள். இதற்காக பாதாம்-50 கிலோ, முந்திரி-50 கிலோ, பிஸ்தா-50 கிலோ, உலர்ந்த கருப்பு திராட்சை -50 கிலோ, உலர்ந்த செர்ரி-62 கிலோ வாங்கினேன். பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றை ஊற வைத்து சிறு கம்பியில் தொடுத்து மாலைகளாக கட்டினோம்.
என்னுடன் தினமும் 12 பேர் இரவு, பகலாக மொத்தம் 7 நாட்கள் வேலை செய்து மாலைகளை கட்டினோம். அந்த 3 மாலைகளும் மொத்தம் 350 கிலோ எடையில் இருந்தன. அந்த மாலைகளை கட்டியதில் லாபத்தை எதிர்பார்க்காமல், புதிய முயற்சிக்காக செய்தோம். எனவே பொருட்களின் விலை, நான் உள்பட வேலை ஆட்களின் கூலியாக சேர்த்து மொத்தம் ரூ.3½ லட்சம் மட்டுமே வாங்கினோம். அவர்களும் மாலைகளை மிகவும் மனதிருப்தியுடன் வாங்கி சென்றனர். தமிழகத்தில் இதுபோன்று யாரும் இதுவரை மாலைகள் கட்டியது இல்லை என்று கூறுகின்றனர். அதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்றைய நாகரிக உலகில் புதுமையான மாலைகள் கேட்டு வருகிறார்களா?
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கிறது. எனவே திருமண நாள் அனைவருக்கும் மறக்க முடியாத நினைவாக இருக்கும். இன்றைய இளைய தலைமுறையினர் திருமண விழாவை சுவாரசியமாக மாற்றுவதற்கு ரொம்பவே முயற்சி செய்கின்றனர். இதில் மணமக்கள் அணியும் மாலைகளும் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்களால் ஆன மாலைகளைத் தான் பலரும் விரும்பி கேட்டனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய மாடல்களை தேடிப் பிடித்து அதேபோன்று புதுமையான மாலைகள் கேட்கின்றனர். நாங்களும் அதற்கேற்ப மாலைகளை கட்டிக் கொடுக்கிறோம். ரோஜா பூக்களை முழுமையாக அப்படியே வைத்து மாலை கட்டிய காலம் போய்விட்டது. ரோஜா பூக்களில் இருந்து இதழ்களை உதிர்த்து அதை மடித்து, ஓசூரில் இருந்து வரவழைக்கப்படும் ஜிப்சி, கிஷாந்தம், ஆர்கெட் உள்ளிட்ட பூக்களை ஒவ்வொரு அடுக்காக வைத்து மாலை கட்டுகிறோம். அவை பார்ப்பதற்கு புதுமையாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும். அதேபோல் ஏலக்காய், வெட்டிவேர் கொண்டும் மாலைகள் தயாராகின்றன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாலைகள் குறித்து கூறுங்கள்?
அமெரிக்கா, கனடா, துபாய், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். வெளிநாடுகளில் வசித்தாலும் திருமணம், கோவில் திருவிழா என்றால் நமது பாரம்பரிய பழக்கங்களை மறப்பதில்லை. எனவே தமிழக கலாசாரத்தின்படி மாலைகளை அணிந்து திருமணம் செய்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் சிவன், பெருமாள், முருகன் கோவில்களை கட்டி மக்கள் வழிபாடு செய்கின்றனர். அந்த கோவில்களுக்கு திருவிழா என்றால் தமிழகத்தில் இருந்தே மாலைகளை கேட்டு வாங்குகின்றனர்.
அதன்படி நிலக்கோட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு மாலைகளை அனுப்பும் கம்பெனிகள் இருக்கின்றன. வெளிநாடு வாழ் தமிழர்களின் விருப்பத்தின்பேரில் மாலைகள் கட்டப்பட்டு, ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன. நிலக்கோட்டையின் பூக்களுக்கும், மாலைகளுக்கும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
''கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலைவர்களுக்கு அணிவிக்க ஏலக்காய் மாலை கேட்டு பலரும் வருவார்கள். ஏலக்காய்களுடன், அந்தந்த கட்சியின் கொடி வண்ணங்கள் இடம்பெறும் வகையில் துணிகளை வைத்து மாலை கட்டுவோம். அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெட்டிவேரில் மாலை கட்டி அனுப்பி இருக்கிறோம்'' என்றார், செல்வக்குமார்.