< Back
ஞாயிறுமலர்
வியப்பூட்டும் சுவர் நகரங்கள்
ஞாயிறுமலர்

வியப்பூட்டும் 'சுவர் நகரங்கள்'

தினத்தந்தி
|
24 Sept 2023 7:32 PM IST

அன்றைய காலகட்டத்தில் இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் தலைநகராக கூறப்படும் இந்த கலாசார நகரத்தின் அடையாளமாக இன்றளவும் சுவர்கள் பாதுகாப்பு அரணாக விளங்கிக்கொண்டிருக்கின்றன.

இது 1535 முதல் 1538-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் கட்டப்பட்டது. 12 மீட்டர் (39 அடி) உயரத்துடன் 4,018 மீட்டர் நீளம் கொண்டது. 34 கோபுரங்களும், 8 நுழைவு வாசல்களும் அமைந்திருக்கின்றன.

உலக அளவில் நீளமான சுவர்களால் எழுப்பப்பட்ட இடம் என்றால் உடனே சீனப்பெருச்சுவர்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால் பண்டைய காலத்தில் மன்னர்கள் எதிரிப்படைகளிடம் இருந்து தங்கள் அரண்மனைகள், நகரங்களை பாதுகாக்க உயரமான அரண்கள் கொண்ட கோட்டை சுவர்களை எழுப்பினார்கள். அவற்றுள் பல நினைவுச்சின்னங்களாக, மனதை மயக்கும் சுற்றுலா இடங்களாக மாறியுள்ளன. சீனச்சுவருக்கு போட்டியாக காட்சியளிப்பவைகளில் சில உங்கள் பார்வைக்கு...

கார்காசோன், பிரான்ஸ்

இரட்டை சுவர்களால் எழுப்பப்பட்ட பிரமாண்டமான கோட்டையாக இது விளங்கியது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டது. இது கட்டிக்கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு சுவர்களை கட்டமைத்து நகரத்தின் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறார்கள். இது அந்த காலத்தில் எழுப்பப்பட்ட கோட்டைச்சுவர்களுள் வித்தியாசமான கட்டிடக்கலை அம்சமாக பார்க்கப்படுகிறது.

சியான், சீனா

எதிரிகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக எழுப்பப்பட்ட தற்காப்பு சுவர் இது. சீனப்பெருஞ்சுவரை போல் இதுவும் பிரபலமான வரலாற்று இடமாக அறியப்படுகிறது. 1374 முதல் 1378-ம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் இது கட்டப்பட்டது. சுமார் 14 கிலோமீட்டர் நீளமும், 12 மீட்டர் (39.4 அடி) உயரமும், 15 முதல் 18 மீட்டர் (49 முதல் 59 அடி) வரை அகலமும் கொண்டது.

கும்பல்கர், இந்தியா

ராஜஸ்தானில் அமைந்திருக்கும் மலைக்கோட்டை இது. சீனப்பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீளமான சுவர் கொண்ட கோட்டையாக திகழ்கிறது. 15-ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னர் கற்களை கொண்டு இந்த கோட்டையை எழுப்பினார். இந்த கோட்டை சுவர் 36 கிலோ மீட்டர் தூரம் நீளம் கொண்டது. 2013-ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்தது.

சுவர் நகரம், கொலம்பியா

கொலம்பியா நகரத்தின் வரலாற்று மையமாக திகழும் இது 'சுவர் நகரம்(வால் சிட்டி)' என்று அழைக்கப்படுகிறது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து நகரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த சுவரை கட்டமைத்திருக்கிறார்கள்.

சுமார் 11 கிலோமீட்டர் தூரம் வரை கோட்டைகள் மற்றும் அரண்களை கொண்டதாக சுவர்களை நிர்மாணித்திருக்கிறார்கள். 16,17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 1984-ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அவிலா, ஸ்பெயின்

உலகளவில் இன்றளவும் பழமை மாறாமல் பராமரிக்கப்படும் வரலாற்று இடங்களுள் ஒன்றாக அவிலா விளங்குகிறது. இந்த கோட்டை சுவருக்குள்தான் இன்று நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உட்புறங்களில் நவீனகால கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் கோட்டை சுவர் பழமை மாறாமல் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த சுவர் 2,515 மீட்டர் சுற்றளவு, 87 கோபுரங்கள் மற்றும் 9 வாசல்கள், 33 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியது.

நார்ட்லிங்கன், ஜெர்மனி

வட்ட வடிவில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுவர் நகரம் இது. இதனை எவ்வளவு நீளத்திற்கு கட்டி இருக்கிறார்கள் தெரியுமா? சுமார் 25 கிலோ மீட்டர் தூரம். சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் விண்கல் விழுந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பள்ளத்தின் மீது இந்த நகரம் கட்டி எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது வட்டவடிவில் காட்சி தருவதால் இந்த நகரத்தின் சுவரை சுற்றி நடப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மேலும் செய்திகள்