குளிர்பானங்கள் அதிகம் பருகினால்...
|குளிர் பானங்களை அதிகமாக உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குளிர்பானங்கள் அதிகம் பருகுவது வயிற்றில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்துவிடும்.
கோடைக்காலத்தில் நிலவும் வெப்பத்தை தணிக்க குளிர் பானங்களை அருந்துவதற்கு பலரும் விரும்புகிறார்கள். அதன் குளிர்ச்சி தன்மையும், சுவையும் அடிக்கடி பருகத் தூண்டுகிறது. அப்படி குளிர்பானங்கள் பருகுவது தற்காலிக நிவாரணம் அளிக்கும். தாகத்தை தணிப்பதாக தோன்றும். உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். அதே வேளையில் குளிர் பானங்களை அதிகமாக உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
குளிர் பானங்களில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. அதிக அளவு கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளடங்கி இருக்கும். அதனை அடிக்கடி பருகும்போது அதில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் உடலில் சேர்ந்து எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். குளிர் பானங்களை அதிக அளவு உட்கொள்வதால் ஏற்படும் 5 முக்கியமான உடல்நல அபாயங்கள் பற்றி பார்ப்போம்.
1. குளிர் பானத்தின் முதன்மை ஆபத்து என்னவென்றால் கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். ஏனெனில் இந்த பானங்கள் அதிக அளவில் கல்லீரலை சென்றடையும் போது, கொழுப்பு திரட்சியை ஏற்படுத்தும். அது நாளடைவில் கல்லீரலின் செயல்பாட்டுக்கு கேடு விளைவிக்கும். கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு முடங்கக்கூடும்.
2. குளிர்பானங்கள் அதிகம் பருகுவது வயிற்றில் கொழுப்பு படிவதற்கு வழிவகுத்துவிடும். உடல் எடை அதிகரிப்புக்கும் அது காரணமாகிவிடும். குளிர்பானங்களில் பிரக்டோஸ் அதிகமாக கலந்திருக்கும். அதனை தொடர்ந்து பருகுவது இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
3. நீரிழிவு நோய் பொதுவான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிர்பானங்களை அதிகமாக நுகர்வது இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கும். இன்சுலின் என்பது ஒருவகை ஹார்மோன் ஆகும். இது ரத்த ஓட்டத்தில் இருந்து செல்களுக்கு குளுக்கோஸை கடத்தும் பணியை செய்கிறது. சர்க்கரை அதிகம் கலந்திருக்கும்குளிர்பானங்களை பருகும்போது உடல் செல்கள் இன்சுலின் செயல்பாட்டுக்கு குறைந்த உணர்திறன் கொண்டதாக மாறும். அதனால் இன்சுலின் செயல்பாடு பாதிப்படையும்.
4. குளிர் பானங்களில் உள்ளடங்கி இருக்கும் அதிக அளவிலான சர்க்கரை உடலை சேதப்படுத்தும். உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். மேலும் பல்வேறு நோய்களுக்கு காரணமாகிவிடும்.
5. துரித உணவுகளை உட்கொள்வது மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும். கடினமான மருந்துகளைப் போல அவை வினைபுரிகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்பானங்கள் போன்றவற்றின் அதிக நுகர்வும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். கோடை காலங்களில் குளிர் பானங்களுக்கு மாற்று பொருட்களை நுகர்வது உடல்நலனை காக்க உதவும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.