< Back
ஞாயிறுமலர்
தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால்...
ஞாயிறுமலர்

தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால்...

தினத்தந்தி
|
23 July 2023 9:40 AM IST

தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும் என்பது தெரிந்திருந்தும் பலரும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்கமுடிவதில்லை என்பது தான் அவர்களுடைய கருத்தாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மாற்று திட்டத்தை முன் வைக்கும் விதமாக புதிய ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

வாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்வதற்கு நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், வார இறுதி நாட்களில் சில மணிநேரங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது. அதுவும் நல்ல பலன்களை கொடுக்கும் என்கிறது அந்த ஆய்வு. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்களும் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கிறார்கள் என்றும் சொல்கிறது.

இது தொடர்பான ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். 89,573 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்தனர். ஜாக்கிங் செய்வது, சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி செய்வது போன்ற உடல் இயக்க செயல்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்பவர்கள், சுமார் 75 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், பொதுவான உடற்பயிற்சிகளை மேற்கொள்பவர்களுடன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களை ஒப்பிட்டு பார்த்தனர். இருப்பினும் ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இதய செயலிழப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வில் பங்கேற்றவர்கள் எப்போது உடற்பயிற்சி செய்தார்கள் என்பதையும் ஆராய்ந்தனர். வாரம் முழுவதும் சீரான இடைவெளியில் உடற்பயிற்சி செய்தாலோ அல்லது வார இறுதி நாட்களில் ஓரிரு நாட்கள் கடுமையான பயிற்சிகளை செய்தாலோ, ஜிம்முக்கு சென்று சில மணி நேரங்கள் கடுமையான் உடற்பயிற்சி செய்தாலோ போதுமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அதேவேளையில் வார நாட்களில் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி செய்தாலும் கூட ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனினும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்வதாக இருந்தால் இரண்டரை மணி நேரமாவது செலவிட வேண்டும் என்ற கருத்தை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். ஏரோபிக் உடற்பயிற்சிகள், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் செய்வதற்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்