< Back
ஞாயிறுமலர்
கே.ஜி.எப். ஆசையில் கையை சுட்டுக் கொண்ட கப்ஜா
ஞாயிறுமலர்

கே.ஜி.எப். ஆசையில் கையை சுட்டுக் கொண்ட 'கப்ஜா'

தினத்தந்தி
|
2 April 2023 3:26 PM IST

‘கப்ஜா’ படத்தில் கன்னட நடிகர்களாக இருந்தாலும் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட உச்ச நடிகர்களான உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் என்று மூன்று நடிகர்கள் நடித்திருந்தும், ரசிகர்களை திருப்திப்படுத்தாத கதைக்களத்தின் காரணமாக அது தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்திய சினிமாவில் ஒரு படம், ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டால், அந்த ரீதியிலான படங்கள் அதிகமாக அந்த வருடம் முழுவதும் வருவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த வகையில் 1980-90-களில் பயத்தை மட்டுமே காட்டி வந்த பேய் படங்களை, நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்த 'முனி' திரைப்படம் புரட்டிப் போட்டது. பயத்துடன் நகைச்சுவையையும் கலந்து கட்டி அவர் எடுத்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

அதன்பிறகும் அவர் 'காஞ்சனா' என்ற படத்தை எடுத்து, அது 'முனி' படத்தை விட பெரிய வெற்றியையும், அதிக வசூலையும் ஈட்டியது. அதன்பிறகு, தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தென்னிந்தியாவின் மற்ற மொழி படங்களிலும் அதே ரீதியிலான நகைச்சுவை கலந்த பேய் படங்களை எத்தனை எடுத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்த்தால் தலை சுற்றிவிடும்.

அந்த வகையில் இப்போது இந்திய மொழியில் உள்ள சினிமாத் துறை நடிகர்கள், இயக்குனர்கள் அனைவரும், கேங்ஸ்டர் படங்களின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து நடிகர்களிடமும் இருக்கும். அதேபோல் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதும் பலரது கனவாக இருக்கும்.

தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், ஜெயசூர்யா, சுரேஷ்கோபி, இந்தியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் இப்படி அனைத்து மொழி பெரிய நடிகர்களும் ஏதாவது ஒரு படத்திலாவது கேங்ஸ்டர் கதாபாத்திரம் ஏற்றிருந்திருப்பார்கள்.

ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு வந்த 'கே.ஜி.எப்.' முதல் பாகம் மற்றும் 2023-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப். இரண்டாம் பாகம்' ஆகிய படங்கள், பெரிய நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் ஆகியோரிடம் மீண்டும் ஒரு அதிரிபுதிரியான மிரட்டல் கேங்ஸ்டர் படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

அதோடு கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் மிகப் பெரிய வெற்றி, பல தயாரிப்பாளர்களின் மனதிலும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது என்பதும் இங்கே சொல்லியாக வேண்டியது இருக்கிறது. ஏனெனில் ரூ.80 கோடியில் எடுக்கப்பட்ட கே.ஜி.எப். முதல் பாகத்தின் வசூல் கிட்டத்தட்ட ரூ.300 கோடி. அதே சமயம் ரூ.100 கோடியில் எடுக்கப்பட்ட அதன் இரண்டாம் பாகத்தின் வசூல் ரூ.1300 கோடி. அப்படியென்றால் தயாரிப்பாளர்களுக்கு ஆசை வரத்தான் செய்யும்.

ஆனால் கே.ஜி.எப். போன்ற ஒரு வெற்றியையும், வசூலையும் பெற வேண்டுமானால், அந்தப் படம் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானதாகவும், ஏற்கனவே அவர்கள் பார்த்து ரசித்த கே.ஜி.எப். படத்தில் இருந்து வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்ற விஷயத்தை மட்டும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் வசதியாக மறந்து போகிறார்கள். அதனால் தான் கே.ஜி.எப். வெற்றிக்குப் பிறகு எடுக்கப்பட்ட பல கேங்ஸ்டர் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கின்றன.

தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் வெளியிடப்பட்ட 'மைக்கேல்', கன்னடத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு பான் இந்தியா படமாக கடந்த 17-ந் தேதி வெளியான 'கப்ஜா' ஆகிய படங்கள் மண்ணைக் கவ்வியிருக்கின்றன. 'மைக்கேல்' படமாவது, வளர்ந்து வரும் நடிகரான சந்தீப் கிஷன் ஒரு ஆர்வத்தில் நடித்து, பாடம் கற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். இந்தப் படத்தின் மொத்த வசூலே ரூ.12 கோடிதான்.

ஆனால் பல வருடங்களாக சினிமாத் துறையில் இருக்கும் கன்னட நடிகரான உபேந்திரா கூட இந்த ஆசையில் விழுந்து, தற்போது கையை சுட்டுக் கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய பரிதாபம். 'கப்ஜா' படத்தின் ஒரே ஆறுதல், உபேந்திராவின் நடிப்புதான் என்றாலும், காட்சிக்கு காட்சி கே.ஜி.எப். படத்தை நினைவுபடுத்தும் திரைக்கதை அமைப்பின் காரணமாக மிகப்பெரிய தோல்வியை இந்தப் படம் சந்தித்திருக்கிறது.

ரூ.120 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் 9 நாள் வசூலே உலக அளவில் ெவறும் ரூ.40 கோடிதான் என்பதை என்னவென்று சொல்வது. ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்ட கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் ரூ.165 கோடி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு படம் ரூ.100 கோடியில் தயாரிக்கப்படுகிறது என்றால், அந்தப் படம் ரூ.130 கோடி வசூலையாவது தாண்டினால்தான், தயாரிப்பாளர் தப்பித்தார் என்று அர்த்தம். அப்படி இல்லை என்றால் அவர் நிலை அவ்வளவுதான். அப்படியானால் 'கப்ஜா' படத்தின் நிலையை நாமே புரிந்துகொள்ள வேண்டியதுதான். இந்த நிலையில் இந்தப் படத்தின் முடிவில், இரண்டாம் பாகமும் வரலாம் என்ற குறிப்பையும் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். 'கப்ஜா'வின் படுதோல்வி, இரண்டாம் பாகத்திற்கு வழி ஏற்படுத்துமா என்பதை அதன் தயாரிப்பாளர்தான் முடிவு செய்ய வேண்டும்.

கே.ஜி.எப். படத்தைப் பார்த்து கேங்ஸ்டர் படம் எடுக்க விரும்பும் மற்ற தயாரிப்பாளர்களும், அதுபோன்ற கேங்ஸ்டர் படங்களில் நடிக்க விரும்பும் நாயகர்களும் கூட கொஞ்சம் யோசித்து படங்களை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இங்கே ரசிகர்களை திருப்திப்படுத்த உச்ச நடிகர் நடித்திருந்தால் மட்டும் போதும் என்ற நிலை மாறிவிட்டது.

'கப்ஜா' படத்தில் கன்னட நடிகர்களாக இருந்தாலும் இந்திய அளவில் அனைத்து ரசிகர்களாலும் அறியப்பட்ட உச்ச நடிகர்களான உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார் என்று மூன்று நடிகர்கள் நடித்திருந்தும், ரசிகர்களை திருப்திப்படுத்தாத கதைக்களத்தின் காரணமாக அது தோல்வியை சந்தித்திருக்கிறது. இதன் மூலம் ஒரு சினிமா வெற்றிபெற ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான, அவர்களின் ரசனைக்குரிய கதையும், திரைக்கதையுமே அவசியம் என்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்