< Back
ஞாயிறுமலர்
முதுமையை வேகப்படுத்தும் பழக்கங்கள்
ஞாயிறுமலர்

முதுமையை வேகப்படுத்தும் பழக்கங்கள்

தினத்தந்தி
|
13 Aug 2023 7:48 AM IST

வயது அதிகரிக்கும்போது முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது இயல்பானது, இயற்கையானது.

ஒருசில தவறான பழக்கவழக்கங்கள் இளமை பருவத்தை கடப்பதற்கு முன்பே முதுமை தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும். அவற்றுள் 10 பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

மதுப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு கேடானது. அதனை அளவுக்கு அதிகமாக அருந்துவது விரைவாகவே வயதான தோற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.

ஊட்டச்சத்துக்குறைபாடு

உண்ணும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும். அதனை கருத்தில் கொள்ளாமல் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். உடலில் கொழுப்பு அளவையும் அதிகரிக்க செய்துவிடும். வளர்சிதை மாற்றமும் குறைய தொடங்கும். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிவிடும்.

தூக்கமின்மை

தினமும் குறைவான நேரம் தூங்குவது அல்லது தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது உடலையும், மனதையும் சோர்வாக்கிவிடும். வழக்கமான வேலைகளை செய்வதற்கு கூட சிரமப்பட நேரிடும். தூங்கும் விஷயத்தில் அசவுகரியமான சூழல் தொடர்வது விரைவாகவே உடலை முதுமை தோற்றத்திற்கு தள்ளிவிடும்.

மன அழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் கூட மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதில் இருந்து விரைவாக மீளாவிட்டால் அது மன நோயாக மாறிவிடும். உடலையும் கடுமையாக பாதிக்க செய்துவிடும். அதன் தாக்கம் சருமத்தில் எதிரொலிக்கும். விரைவில் முதிர்ந்த தோற்றம் எட்டிப்பார்க்கும்.

உணவை தவிர்ப்பது

பணி நெருக்கடி, இரவு நேர வேலை, காலையில் தாமதமாக எழுவது போன்ற காரணங்களால் பலரும் காலை உணவை முறையாக உட்கொள்வதில்லை. காலை உணவுதான் உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது. அதனை தவிர்ப்பது உடல் பலவீனமடைவதற்கு வழி வகுத்துவிடும். அதன் தாக்கம் உடல் தோற்றத்தில் எதிரொலிக்கும்.

கடுமையான உணவுக்கட்டுப்பாடு

'டயட்' என்ற பெயரில் கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுவது தவறானது. மருத்துவரின் ஆலோசனையை பெற்றே அத்தகைய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தேவையில்லாத உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

உடற்பயிற்சியின்மை

நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உடற்பயிற்சியின்மையே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. விரைவாகவே சருமம் முதுமை தோற்றத்திற்கு மாறிவிடக்கூடும்.

பருவகால உணவுகள்

அந்தந்த பருவங்களில் விளையும் பருவகால உணவுகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது அவசியம். அவை சரும பொலிவுக்கு வித்திடும். அவற்றை தவிர்ப்பது சருமத்தில் முதிர்ச்சி படரத் தொடங்கிவிடும்.

புகைப்பழக்கம்

மதுப்பழக்கத்தை போல், புகை பிடிப்பதும் ஆரோக்கியத்தை மோசமாக்கும். முதுமையை துரிதப்படுத்தும்.

காபின்

தேநீர், காபி பருகாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றை குறிப்பிட்ட அளவிற்கு மேல் பருகினால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அதிலும் தினமும் அளவுக்கு அதிகமாக டீ மற்றும் காபி உட்கொள்வது வேகமாக வயது முதிர்வுக்கு வழிவகுத்துவிடும்.

மேலும் செய்திகள்