சுற்றுப்புறத்தை சீரமைக்கும் பசுமை காவலர்கள்!
|நம்முடைய குடியிருப்பு பகுதிகளையும், அதன் சுற்றுப்பகுதிகளையும் சுத்தமாகவும், பசுமையாகவும் பராமரிக்கும் கடமை, நம் எல்லோருக்கும் உண்டு.
இதை உணர்ந்தவர்கள், தங்களது நேரத்தை ஒதுக்கி, சமூக களப்பணிகளில் ஐக்கியப்படுத்தி கொள்வர். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் பலரும் ஒன்றிணையும்போது, அப்பகுதியில் பல மாற்றங்கள் நிகழும்.
சென்னையின் மடிப்பாக்கம், புழுதிவாக்கம், சுண்ணாம்பு களத்தூர், உள்ளகரம், கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை... இந்த பகுதிகளில், கடந்த 7 வருடங் களாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதை நிகழ்த்தி காட்டியவர்கள், மடிப்பாக்கம் சமூக சேவை டிரஸ்ட் அமைப்பினர். இப்படி ஒரு அமைப்பு உருவாகவும், பல அத்தியாவசியமான சமூக பணிகள் நடைபெறவும் முதல் காரணமாய் அமைந்தவர், சரவண குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றும் இவரே, சமூக அக்கறை கொண்ட குழுவின் முதல் விதையாய் மண்ணில் விழுந்து, 80-க் கும் மேற்பட்ட நிரந்தர உறுப்பினர்களை கொண்ட பண்பட்ட சமூகத்தை கட்டமைத்திருக்கிறார்.
''2015-ம் ஆண்டு, மழை வெள்ள நீரினால் ஒட்டுமொத்த சென்னையும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. எல்லா பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்திருந்த வேளையில், வெள்ள நீரை மையப்படுத்தியே நிறைய பிரச்சினைகள் எழுந்தன. குறிப்பாக, 'உங்கள் பகுதியில் இருந்துதான், வெள்ள நீர் எங்களது பகுதிக்குள் வருகிறது', 'உங்கள் பகுதியில் சூழ்ந்திருக்கும் வெள்ள நீரை எங்கள் பகுதிக்குள் பம்ப் செய்து விடாதீர்கள்'... என குடியிருப்பு பகுதிகளில் நிறைய வாக்குவாதங்கள் உருவாகின.
வெள்ள நீர் வடிய மழை நீர் கால்வாய்கள் இல்லாததே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் காரணமாக இருந்தது. அதை உணர்ந்ததும், மாநகராட்சியிடம் மழைநீர் வாய்க்கால்கள் அமைத்துத் தர விண்ணப் பிக்க, ஒரு அமைப்பை உருவாக்கினேன். ஆனால், அந்த பொறுப்புள்ள சமூக பணியை தமிழக அரசே முன்னின்று நடந்த ஆரம்பித்ததும், குடியிருப்பு பகுதிகளை சுற்றியிருக்கும் பொது இடங்களையும், நீர் நிலைகளையும் பராமரிக்க ஆரம்பித்தேன். அப்படி 2017-ம் ஆண்டு உருவானதுதான், எம்.எஸ்.எஸ். எனப்படும் மடிப்பாக்கம் சமூக சேவை டிரஸ்ட் அமைப்பு. 2017-ம் ஆண்டு 5 நபர்களுடன் ஆரம்பமான இந்த சேவை அமைப்பு, இன்று 80-க்கும் மேற்பட்ட நிரந்தர தன்னார்வலர்களோடு பயணிக்கிறது'' என உற்சாகமாக பேசினார்.
'சமூக பணி' என்ற ஒருமித்த கருத்தினால் ஈர்க்கப்பட்ட நிறைய தம்பதிகள், இந்த அமைப்பில் சேர்ந்து களப்பணி ஆற்றுகிறார்கள். பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் களப்பணியாற்றுவது பொதுமக்களை ஆச்சரியப்படுத்துகிறது.
''நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் அதிகாரி மூலமாக 200 மரக்கன்றுகள் கிடைத்தது. அதை மடிப்பாக்கத்தை சுற்றியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் நட ஆரம்பித்தோம். மர நடவு பணிகள் முடிந்ததும், நட்ட மரங்களை தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணிகளையும், அதற்கு வேலி அமைத்து பாதுகாக்கும் பணிகளையும் முன்னெடுத்தோம். இப்படி நாம் நடும் மரங்கள் எல்லாம் நெடுநெடுவென வளர்ந்து விடுவதில்லை. சாலை பணிகள், பாதாள சாக்கடை பணிகள்... என பல்வேறு காரணங்களால், மரங்கள் சேதமாகிவிடும்.
அப்படி சேதமாகும் மரங்களையும் தொடர்ச்சியாக நட்டு, பராமரிக்க ஆரம்பித்தோம். மடிப்பாக்கத்தில் தொடங்கிய மரம் நடவு பணிகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு இப்போது 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் 5 ஏரிக்கரைகளில் மர நடவு வேலைகள் முடிந்திருக்கின்றன. இப்போது எங்களது பராமரிப்பில், 6,500 மரங்கள் உயிர்ப்புடன் வளர்ந்து நிற்கிறது. அதற்கு தேவையான எல்லா பராமரிப்பு பணிகளையும் நாங்களே செய்கிறோம்'' என்றவர், தன்னுடன் கடந்த 7 ஆண்டுகளாக பயணிக்கும் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்.
லட்சுமிபதி, கோபாலகிருஷ்ணன், மோகன், ஆறுமுகம், மாலதி, தேன்மொழி, தமிழ் செல்வி, விஜயலட்சுமி, ராதா கிருஷ்ணன், ஜெயகுமார் என தன்னார்வலர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது. இதில் லட்சுமிபதி நம்மோடு பேசினார்.
''மரம் நடவு பணிகளுக்கு அடுத்தபடியாக, 2016-ம் ஆண்டு குளங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டோம். வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் நீர்நிலைகள் அதிகம்; குறிப்பாக குளம், ஏரி போன்றவை அதிகளவில் இருக்கும் என்பதால், அதை பராமரிக்க தொடங்கினோம். நீர் நிலைகளை ஆக்கிரமித்திருந்த தாவரங்களை அகற்றி, தண்ணீர் இருப்பை அதிகமாக்கினோம். குறிப்பாக மடிப்பாக்கம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, நாயக்கர் குட்டை மற்றும் ஒத்தீஸ்வரர் கோவில் ஏரி ஆகியவற்றை சுத்தமாக்கி, சீரமைத்திருப்பதோடு வாரந்தோறும் தூய்மை பணிகளையும் செய்கிறோம். நீர்நிலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் குப்பை தொட்டிகளை அமைத்து, சுத்தமாக பராமரிக்கிறோம்'' என்றவர், நிறைய குடும்பங்களின் ஆதரவும், குழந்தைகளின் சமூக பொறுப்புணர்ச்சியும்தான் எங்களை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது என்ற கருத்தோடு நிறைவு செய்தார். இவரை தொடர்ந்து, முதல் பெண் தன்னார்வலராக இணைந்த மாலதியிடம் பேசினோம். அவர் உணர்வுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
''இந்த அமைப்பில் இணைந்திருக்கும் எல்லோருக்கும் ஒரு சமூக அந்தஸ்து இருக்கிறது. எல்லோருக்கும் பிசியான அலுவலக வாழ்க்கையும், பாசமான குடும்ப வாழ்க்கையும் இருக்கிறது. ஆனால் அத்தகைய சூழலிலும், தங்களது குடியிருப்பு பகுதிகளை ஆக்கப்பூர்வமான முறையில், சுத்தமாகவும், பசுமையாகவும் பேணி பாதுகாக்க ஆசைப்படுகிறார்கள். ஓய்வு நாட்களில், வீட்டில் ஓய்வெடுப்பதை தவிர்த்துவிட்டு, சாலைகளிலும், பொது இடங்களிலும் கள பணியாற்றுகிறார்கள். நிறைய பெற்றோர், தங்களது குழந்தைகளை தைரியமாக களப்பணிக்கு அனுப்புகிறார்கள். பள்ளிப்பருவத்திலேயே, அவர்கள் சமூக அக்கறையுடன் செயல்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சேறு-சகதி, புழுதி, குப்பை... என எதை கண்டும் மிரளாமல் தைரியமாக களப்பணியாற்றுகிறார்கள்'' என்று பெருமிதப்படும் மாலதி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ ஆசைப்படுவதாகவும் கூறினார்.
2017-ம் ஆண்டில் இருந்து செயலாற்ற தொடங்கி, 300-வது வாரத்தை நெருங்கியிருக்கும் எம்.எஸ்.எஸ். அமைப்பினரை, கலெக்டர் மற்றும் சென்னை மேயர் உட்பட பலரும் பாராட்டி கவுரவித்திருக்கிறார்கள். தூய்மை பணிகளை முன்னெடுத்து சிறப்பாக செயலாற்றி வருவதை சிறப்பு விருது வழங்கியும் கவுரவித்திருக்கிறார்கள்.
''கடந்த சில வருடங்களாக, கோவில் வளாகத்தில் இருக்கும் கோவில் குளங்களை சுத்தமாக்கும் உழவார பணிகளை முன்னெடுத்து செய்கிறோம். அந்தவகையில், மடிப்பாக்கத்தை சுற்றியிருக்கும் நிறைய கோவில் குளங்கள் சுத்தமாகி, சீரமைக்கப்பட்டிருக்கிறது. இதோடு, ஜாக்கிங் கிளப் என்பதை முன்னெடுத்து, அதன்மூலம் ஜாக்கிங் பயிற்சியின் அவசியத்தையும், உடல் ஆரோக்கிய விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகிறோம். இவ்வளவு பிசியான சமூக பணிகளுக்கு மத்தியிலும், நாங்கள் ஒரே குடும்பமாக அடிக்கடி சமூக சுற்றுலாக்களுக்கு செல்வதும் வழக்கமாகிவிட்டது'' என்று புன்னகை பூக்களை உதிர்க்கும் சரவண குமார், தங்களுடைய ஆசை மற்றும் லட்சியத்தை பகிர்ந்து கொண்டார்.
''எங்களது பகுதியில் நிகழும் சமூக மாற்றங்களும், பராமரிக்கப்படும் இயற்கை சூழலும் மற்றவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். அவர்களை சிந்திக்க செய்ய வேண்டும். எங்களைவிட சிறப்பான சுற்றுப்புற சூழலை அவர்களது பகுதியில் உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பதே, எங்களுடைய ஆசை. அதை நோக்கியே பயணிக்கிறோம். மேலும் பசுமையான கிராமப்புற சூழலை சென்னை நகருக்குள்ளும் உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க ஆசைப்படுகிறோம்'' என்ற பசுமையான கருத்துகளுடன், விடைபெற்றார்.