< Back
ஞாயிறுமலர்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ஆசிரியர்
ஞாயிறுமலர்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ஆசிரியர்

தினத்தந்தி
|
15 Sept 2023 4:26 PM IST

2023-ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்த ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார். இவர் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானது எப்படி, அவர் கடந்து வந்த பாதை குறித்து அவரிடம் கேட்பதற்காக, அந்த பள்ளிக்கு சென்றோம்.

மாணவர்கள் புடை சூழ நடுவில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார், ஆசிரியர் காட்வின். அவர் இருந்த அறையில் எந்த பக்கம் பார்த்தாலும் பதக்கங்களும், சான்றிதழுமாக இருந்தது. அவரிடம் கேட்க வேண்டிய எல்லா கேள்விகளையும் முன்வைத்தோம். ''இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்'' என்ற திருக்குறளுடன், பேச தொடங்கினார்.

''எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பதுங்கு குழியில் தங்கியது முதல் அவரது பணி அனுபவங்களை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் வாரிசு அடிப்படையில் கடந்த 1998-ல் உடற்பயிற்சி ஆசிரியர் பணி கிடைத்தது. அன்று முதல் இன்று வரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் பணியாற்றி வருகிறேன்.

கிராமப்புறம் என்பதால் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்தாலும், அதனை எவ்வாறு மெருகேற்றுவது, வெளிக்கொண்டு வருவது போன்ற சிந்தனை இல்லாமல் இருந்தது. அதனை வெளிக்கொண்டு வர நான் வழிவகை செய்தேன். அதன் மூலம் மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்களை கலந்து கொள்ள செய்து, பரிசுகளை பெற்று கொடுத்தேன்.

எந்த மாணவருக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது என்பதை உற்றுநோக்கி அதில் அந்த மாணவரை ஊக்கப்படுத்துவேன். வெற்றியோ-தோல்வியோ நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என அடிக்கடி கூறுவேன். ஆனால், என்னுடைய மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டால், நிச்சயம் வெற்றி பெறுவார்கள்'' என்று உற்சாகமாக பேசுபவர், நகர்ப்புற மாணவர்களை காட்டிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதலான திறமைகள் இருப்பதாக கூறுகிறார்.

''நீச்சல், குத்துச்சண்டை, வாள் சண்டை, கூடைப்பந்து, கால்பந்து போன்ற எல்லா விளையாட்டிலும் அவர்களை சாதிக்க வைத்திருக்கிறேன். வாள் சண்டை பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க, பஞ்சாப் சென்று அங்குள்ள முகாம்களில் தங்கி, நானும் வாள் சண்டை கற்றுக் கொண்டேன். இதுமட்டுமின்றி தமிழகத்திலேயே அலங்காநல்லூர் பள்ளியில் தான், குத்துச்சண்டை மேடை அமைக்கப்பட்டுள்ளது.

நீச்சல் போட்டிக்கு பயிற்சி பெற போதிய இடம் இருக்காது. இதனால், கிராமப்புறங்களை சுற்றி உள்ள கண்மாய்களை பயன்படுத்திக் கொண்டோம். அங்கு சென்று பல மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பேன். அதன் பலனாக நீச்சல் போட்டியிலும் மாநில அளவில் சாதித்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், பள்ளியில் படிக்கும் 800 மாணவர்களில் 200 பேர் விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களாக இருப்பார்கள்.

அதுமட்டுமின்றி, டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை வைத்து, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறேன். அதாவது, 50 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்திற்குள், 1 லட்சத்து 6 ஆயிரத்து 411 கிக்குகள் செய்து அதனை கின்னஸ் சாதனையாக்கி இருக்கிறேன். எந்த அரசுப் பள்ளியிலும் இதுபோல் கின்னஸ் சாதனை செய்யவில்லை'' என்றவர், நிறைய மாணவர்களை ராணுவ வீரர்களாகவும் மாற்றி இருக்கிறார்.

''இதுவரை எங்கள் பள்ளி மாணவர்களில் மாநில அளவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். அதுபோல், விளையாட்டு கோட்டாவில், 300-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்திலும், காவல்துறையிலும் நல்ல பொறுப்பில் இருக்கிறார்கள். அங்கு அவர்கள் அந்தந்த போட்டிகளில் சிறந்த வீரர்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு கூடுதல் பெருமை.

இங்குள்ள கல்லணை கிராமத்தில் வீட்டிற்கு ஒரு நீச்சல் வீரரை உருவாக்கிய பெருமையும் உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் இந்த பள்ளி செய்யாத சாதனையே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு சாதித்துள்ளோம்.

சிறுவயதில் இருந்தே விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. ஆனால், அது நிறைவேறுவதற்கு காலதாமதம் ஆனது. அதுபோல் விமானத்தில் செல்ல ஆசைப்படும் மாணவர்களை மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து, போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வேன் என கூறி ஊக்கப்படுத்துவோம்.

என்னுடைய சொந்த செலவில் கடந்த 2017 முதல் தற்போது வரை பல மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறேன். இது அவர்களை மேலும், மேலும் உற்சாகப்படுத்தி, போட்டிகளில் வெற்றி பெற வைக்கும் என்பது என்னுடைய எண்ணம்'' என்பவர், நிறைய விருதுகளை பெற்றிருக்கிறார்.

''தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை 2014-ல் பெற்றேன். 3 முறை மாவட்ட கலெக்டர் சார்பில் வழங்கப்படும் சிறந்த பணிக்கான விருதை பெற்றுள்ளேன். தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 'பியர்சன் பெஸ்ட் டீச்சர்' விருதையும் பெற்றேன். அரசுப் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் என்.சி.சி. அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறேன். இதற்காக நாக்பூர் சென்று அங்கு ராணுவ பயிற்சியும் பெற்றேன்.

யோகா, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றேன். 'யோகா பார் லைப்' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறேன். அதுமட்டுமின்றி வாரத்தில் 2 நாட்கள் ஆசிரியர்களுக்கு இலவசமாக யோகா வகுப்புகளும் நடத்தி வருகிறேன். இதில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். ஆன்லைன் மூலமாகவும் யோகா வகுப்புகள் இலவசமாக நடத்தி வருகிறேன்.

என்னுடைய 49 வயதில், 25 வருட ஆசிரியர் பணியில் கிராமப்புற மாணவர்களுக்கு புதிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியதோடு, அவர்களின் திறனை வளர்த்துச் சாதிக்கவும் வைத்திருக்கிறேன்.

இதுபோல் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் குத்துச்சண்டை மைதானம், பள்ளியில் அரசு சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 'ஜிம்' அமைய காரணமாக இருந்திருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்ததை ஒப்பிட்டு பார்க்கும்போது என்னுடைய பள்ளியை நல்ல நிலைக்கு முன்னேற்றம் அடைய செய்திருக்கிறேன் என்ற மன திருப்தி கிடைக்கிறது. கொரோனா காலத்தில் 40 நாட்கள் பொதுமக்களுக்கு எங்களால் முடிந்த சேவையைச் செய்திருக்கிறேன். அதற்காக மாவட்ட கலெக்டரின் விருதையும் பெற்றேன்'' என்றவர், நல்லாசிரியர் விருது வென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

''தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நான் இதுவரை 6 முறை விண்ணப்பித்திருக்கிறேன். அதில், 2 முறை தகுதியும் பெற்று கடைசி நேரத்தில் அந்த விருதை தவறவிட்டிருக்கிறேன். இந்த முறை எப்படியாவது தேசிய நல்லாசிரியர் விருதை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடக்கத்தில் இருந்தே போராடினேன். அதன்பலனாக தற்போது விருது கிடைத்துள்ளது. பல்வேறு படிநிலைகளை தாண்டி, அவர்கள் கேட்ட பல ஆவணங்களை சமர்ப்பித்தும் இருக்கிறேன். ஆன்லைனில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான முறையில் பதில் அளித்தேன். தேர்வுக் குழு நடத்திய நேர்காணலிலும் உரிய ஆவணங்களுடன் என்னுடைய செயல்பாடுகளை விளக்கினேன். அதன்மூலம் விருதுக்கு தேர்வாகி இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னிடம் படித்து ராணுவத்தில், காவல்துறையில் பெரிய பொறுப்பில் இருக்கும் என் மாணவர்கள் என்னைப் பற்றி பேசி வீடியோவாக பதிவிட்டனர். அதனையும் நான் நல்லாசிரியர் விருதுக்காக பதிவு செய்தது மறக்கமுடியாத தருணம்.

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவது இதுவே முதல்முறை. அதனால்தான் என்னவோ எனக்கு எல்லோரும் மனநிறைவுடன் பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். என்னுடைய செல்போன் செயலிழந்து போகும் அளவிற்கு பாராட்டு மழையில் நனைந்திருக்கிறேன். அதனை என்னுடைய வாழ்நாளில் ஒரு போதும் மறக்க முடியாது.

இந்த விருது கிடைப்பதற்கு காரணமாக இருந்த என்னுடைய மாணவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். விருதுக்காக உழைக்கவில்லை என்றாலும், இந்த விருது என்னை மேலும், மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. தொடர்ந்து மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவேன் என கூறி விடைபெற்றார்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் காட்வினுக்கு ரேச்சல் என்ற மனைவியும், சாம்ராக்லண்ட், பிரியன் ரேனியஸ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்