28 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை
|நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா அந்த பட்டியலில் இடம் பிடிப்பவர்தான். இவர் ஒருமுறை.. இருமுறை அல்ல.. 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிசாதனை படைத்திருக்கிறார்.
உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது மலையேற்றம் மேற்கொள்பவர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். முதல் முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தாலும் அது அவர்களுக்கு புதுமையான பயண அனுபவமாகவே அமைந்துவிடும்.
செல்லும் பாதை, உறையவைக்கும் குளிர், இனிமை தரும் சீதோஷண நிலை என மாறுபட்ட வானிலைகளை ஒருசேர அனுபவிப்பதில் கிடைக்கும் இன்பம் அவர்களை மீண்டும் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதற்கு தூண்டிவிடும். சிலர் இரண்டு, மூன்று முறை மீண்டும் ஏறிவிடுவார்கள். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதையே சாதனை பயணமாக மாற்றிவிடுபவர்களும் உண்டு.
நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா ஷெர்பா அந்த பட்டியலில் இடம் பிடிப்பவர்தான். இவர் ஒருமுறை.. இருமுறை அல்ல.. 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி (கடல் மட்டத்திலிருந்து 8848.86 மீட்டர், 29,029அடி) சாதனை படைத்திருக்கிறார்.
53 வயதாகும் கமி ரீட்டா ஷெர்பா கிழக்கு நேபாளத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அதுவே அவரை மலையேற்றம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாக மாற வைத்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.
1994-ம் ஆண்டு முதல் முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி பகுதிக்கு சென்றடைந்திருக்கிறார். அது முதல் ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரம் ஏறும் வழக்கத்தை பின்பற்றி வந்திருக்கிறார். கடந்த 17-ந் தேதி 27-வது முறையாக எவரெஸ்ட் சென்றடைந்திருக்கிறார்.
அங்கிருந்து வீடு திரும்பிய ஒரு வாரத்திற்குள் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய உலக சாதனை படைத்துவிட்டார். ஷெர்பா ஒரே ஆண்டில் இருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறுவது முதல் முறையல்ல. ஏற்கனவே 2006, 2007, 2010, 2011, 2012, 2013, 2016, 2017, 2018, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை ஏறி இருக்கிறார்.
இந்த ஆண்டும் இரண்டு முறை ஏறியதையடுத்து தனது சாதனையை தானே முறியத்து 28 முறை ஏறிய நபராக புதிய சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் மட்டுமின்றி மவுண்ட் கே2 மற்றும் மவுண்ட் லோட்சே ஆகிய சிகரங்களை ஒருமுறையும், மனாஸ்லு சிகரத்தை மூன்று முறையும், சோ ஓயு சிகரத்தை 8 முறையும் ஏறி இருக்கிறார். இவை அனைத்தும் கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் மீட்டருக்கு மேல் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.