< Back
ஞாயிறுமலர்
கோவில் கருவறைக்குள் பெண் அர்ச்சகர்கள்
ஞாயிறுமலர்

கோவில் கருவறைக்குள் 'பெண் அர்ச்சகர்கள்'

தினத்தந்தி
|
24 Sept 2023 1:24 PM IST

இந்தியா கோவில்கள் நிறைந்த நாடு. தெற்கில் கன்னியாகுமரியில் இருந்து வடக்கில் காஷ்மீர் வரைக்கும் எப்பகுதிக்கு பயணித்தாலும், கோவில்களை காணலாம். மொத்தத்தில் இந்திய கலாசாரத்தில் கோவில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கோவிலுக்கு சென்று மனமுருக கடவுளை தரிசனம் செய்து வந்தாலும், கோவில் கருவறைக்குள் நம்மால் சென்றுவிட முடியாது. கடவுளுக்கு பூஜை செய்வதற்கென்று இருக்கும் அர்ச்சகர்கள் மட்டுமே அங்கு செல்ல இயலும். ஏனெனில் கடவுள் வீற்றிருக்கும் பகுதி புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது. எனவே தான், நமக்கும் கடவுளுக்குமான ஒரு பாலமாக, வேத மந்திரங்களை அறிந்த அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் அர்ச்சர்கள் பணி எல்லோருக்குமானது என்று கூறி, தமிழ்நாட்டில் 2007-ம் ஆண்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழனி, ஸ்ரீரங்கம் ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தொடக்கத்தில், 240 பேர் பயிற்சிக்காக சேர்ந்தனர். ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட பின்னர், முதல் பேட்ச்சிற்கு பிறகு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் படித்து முடித்த பிறகு அந்தப் பள்ளிகள் செயல்படாமல் போனது.

தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மீண்டும் இந்த பள்ளியை நடத்த தொடங்கியது. இம்முறை 3 பெண்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்து அசத்தி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார்கள்.

சமூகத்தில் பெண்களை ஒடுக்குவதற்கு ஏற்படுத்தப்படும் தடைகளை உடைப்பதற்கான முயற்சிகளை பெண்களே முன்னெடுத்து வருகிறார்கள். அதில் அவர்கள் வெற்றி கண்டு, அதை மீண்டும் உலகிற்கு உரக்க சொல்லி இருக்கிறார்கள் இந்த 3 பெண்கள். ஏனெனில் இத்தனை காலமாக ஆண்கள் மட்டுமே கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்து வந்தார்கள். தற்போது 3 பெண்கள் அர்ச்சகராகி கோவில் கருவறைக்குள் சென்று, இறைவனுக்கு பூஜை செய்ய இருக்கிறார்கள்.

திருச்சி அர்ச்சகர் பள்ளியில் படித்து முடித்த 3 பெண்களில் 2 பேர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலாதனூரை சேர்ந்தவர்கள். அவர்களுடைய பெயர்: ரம்யா (வயது 23), கிருஷ்ணவேணி (22). மற்றொருவர் திருவாரூரை சேர்ந்த ரஞ்சிதா.

ரம்யாவின் பெற்றோர்: சுந்தரமூர்த்தி-தமிழரசி. கிருஷ்ணவேணியின் பெற்றோர்: சிவப்பிரகாசம்-பூபதி. இவர்களில் சுந்தரமூர்த்தி டெய்லர், சிவப்பிரகாசம் கிராமத்தில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். கிருஷ்ணவேணியின் அத்தை மகள் தான் ரம்யா ஆவார்.

ரம்யா, கிருஷ்ணவேணியை நேரில் சந்தித்து பேசினோம். அவர்கள் நம்மிடையே முதலில் தெரிவித்த விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. ஆம்! ரம்யா எம்.எஸ்சி., கிருஷ்ணவேணி பி.எஸ்சி படித்தவர். இருவரும் கல்லூரி படிப்பில் கணிதத்தை தேர்ந்தெடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள். ரம்யா கணிதத்தில் முதுகலை படிப்பையும் முடித்திருக்கிறார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்த 2 பெண்களும் கோவில் அர்ச்சகருக்கான படிப்பை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் தான் என்ன?, அவர்களது லட்சியம் என்ன? என்பது குறித்து அவர்களிடம் பேசினோம். முதலில் ரம்யா தொடர்ந்தார்.

* கோவில் அர்ச்சகர் பணியை தேர்வு செய்தது ஏன்?

எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். ஆனால் கோவிலில் அர்ச்சகர் பணியில் மட்டும் இன்னும் ஏனோ சாதிக்க முடியவில்லை. எனவே இதிலும் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏன் ஆண்கள் மட்டும் தான் இந்த பணியை செய்ய முடியுமா? பெண்களால் செய்ய முடியாதா? என்று எண்ணி இதை தேர்வு செய்து படித்தேன்.

* உங்களது முயற்சிக்கு பெற்றோர் ஆதரவு இருந்ததா?

எனது பெற்றோர், 'உன்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நீ சென்று படி' என்று, எனக்கு ஆதரவாகவே இருந்தார்கள்.

* உங்களுக்கு கோவில் அர்ச்சகர் பணி மீதான ஈடுபாடு எப்போது தோன்றியது?

நான், கல்லூரி இறுதியாண்டு படித்து முடித்த வேளையில், அர்ச்சகருக்கான படிப்பு தொடர்பாக அரசு அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன் பின்னர் தான் இந்த பணி மீது ஈர்ப்பு ஏற்பட்டு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளி பாடசாலையில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தேன்.

* எத்தனை ஆண்டு படிப்பு, உங்களுடன் எத்தனை பெண்கள் படித்தார்கள்?

இந்த படிப்பை ஒரு வருடம் படிக்க வேண்டும். நாங்கள் மொத்தம் 22 பேர் படித்தோம். இதில் 3 பேர் பெண்கள். பள்ளிப்படிப்பு போன்று தான் தேர்வுகள் அனைத்தும் இருக்கும்.

* படிப்பு எளிதாக இருந்ததா?

நான் படித்தது வைணவம் பற்றியது. தமிழில் தான் பாடங்கள் இடம்பெற்றிருந்தன. பாடங்கள் அனைத்தும் எளிதாகவே இருந்தது. கோவில்களில் பணிபுரியும் சுவாமிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்து வகுப்புகள் எடுத்தனர்.

* முதுகலை பட்டம் படித்துவிட்டு, அர்ச்சகர் வேலைக்கு போகலாமா என்று யாரேனும் கேட்டுள்ளார்களா?

நானும் இதுபோன்று எண்ணியது இல்லை, என்னிடமும் யாரும் கேட்டதும் இல்லை. என் குடும்பத்தினர் உள்பட அனைவரும் ஊக்கம்தான் அளித்து வருகிறார்கள்.

* என்றாவது பெற்றோரிடம் மந்திரங்களை உச்சரித்து காண்பித்தது உண்டா?

ஆம்! சொல்லி காண்பித்துள்ளேன். அவர்களும் கேட்டு பாராட்டி இருக்கிறார்கள். அர்ச்சகர்கள் பயற்சி பள்ளியில் யாகங்கள் நடைபெறும் போது, எனது பெற்றோரை அழைத்து சென்றுள்ளேன். அப்போது நான் மந்திரங்கள் முழங்க யாகம் வளர்ப்பதை அவர்கள் பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்கள்.

* அர்ச்சகர் படிப்பு முடிந்துவிட்டது, அடுத்த இலக்கு?

அடுத்தது, ஏதாவது ஒரு கோவிலுக்கு அறநிலையத்துறையில் இருந்து பயிற்சிக்கு அழைத்து செல்வார்கள். நான் வசிக்கும் இடத்துக்கு அருகே உள்ள கோவிலில் பயிற்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். இந்த பயிற்சி முடித்த பின்னர் தான் கோவிலில் பூஜை செய்ய முடியும்.

ரம்யாவை தொடர்ந்து அவரது மாமாவின் மகளான கிருஷ்ணவேணி பேச்சை தொடர்ந்தார். ''கல்லூரி படிப்பை முடித்தவுடன் கோவையில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்தேன். இந்த சூழலில் அர்ச்சகர் ஆகும் சட்டத்தில் சேர்க்கை நடைபெறுவதை அறிந்தேன். ஏற்கனவே எனது தந்தை, தாத்தா ஆகியோர் கிராமத்தில் உள்ள கோவிலில் பூஜை செய்து வருகிறார்கள். நாமும் ஏன் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று எண்ணிதான், கோவையில் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு, அர்ச்சகருக்கான படிப்பை தொடர்ந்தேன்.

முதலில் கொஞ்சம் கடினமாக இருந்தது. அதன் பின்னர் படிக்க படிக்க எளிதாக தெரிந்தது. கண்டிப்பாக அனைவரும் படிக்கலாம். நாங்கள் படிக்கும் போது 3 பேர் மட்டுமே பெண்கள் இருந்தோம். ஆனால், இந்த எண்ணிக்கை 10 ஆக தற்போது அதிகரித்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு இன்னும் பெண்களின் எண்ணிக்கை அதிகாிக்கும்'' என்றார்.

மேலும் செய்திகள்