< Back
ஞாயிறுமலர்
சுற்றுச்சூழலுக்கு காகிதப்பைகள் அளிக்கும் நன்மைகள்
ஞாயிறுமலர்

சுற்றுச்சூழலுக்கு காகிதப்பைகள் அளிக்கும் நன்மைகள்

தினத்தந்தி
|
16 July 2023 11:24 AM IST

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காகித பைகளை பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காகிதப்பை தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. காகிதப் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். சமீபத்தில் காகிதப்பை தினம் (ஜூலை 12) கொண்டாடப்பட்ட நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் பசுமையான எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு பிளாஸ்டிக் பைகளை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

புதுப்பிக்கத்தக்க வளங்கள்: ஒரு பொருளை தொடர்ச்சியாக பயன்படுத்தினாலும் கூட குறிப்பிட்ட காலத்திற்குள் அவை தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவை, புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதப்படுகின்றன. சூரியன், காற்று, நீர் போன்றவை அதற்கு சிறந்த உதாரணங்கள். காகிதப்பை தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்கள் நடப்பட்டு, பின்பு அந்த மரங்களில் இருந்து காகிதப்பை தயாரிப்பதற்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த வனவியல் நடைமுறைகள் மரங்கள் சீராக வெட்டப்படுவதை உறுதி செய்கின்றன. காகித உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் தொடர்ச்சியாக கிடைப்பதற்கும் வழிவகுக்கின்றன.

மட்கும் தன்மை: பிளாஸ்டிக் பைகளை ஒப்பிடும்போது காகித பைகள் எளிதில் மட்கும் தன்மை கொண்டவை. குப்பைகளில் குவிந்து கிடந்தாலும் கூட இயற்கையாகவே சிதைந்துவிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் விளைவிக்காது. பிளாஸ்டிக்கை போல் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

குறைந்த ஆற்றல்: பிளாஸ்டிக் பை களுடன் ஒப்பிடும்போது காகிதப் பைகள் தயாரிப்பதற்கு குறைவான ஆற்றல் தேவைப்படும். அதாவது காகிதப் பை உற்பத்தி செயல்முறையானது பெட்ரோ கெமிக்கல்களை சுத்திகரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற குறைவான ஆற்றல் படிநிலைகளை உள்ளடக்கியது. இது குறைவான கார்பன் உமிழ்வுக்கு வழிவகுக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் உதவும். ஆனால் பிளாஸ்டிக் தயாரிப்புக்கு அதிக ஆற்றல் மூலங்கள் தேவைப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்திவிடும்.

காலநிலை மாற்றம்: காகிதப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படும் மரங்கள் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன. புவி வெப்பமடைதலுக்கு காரணமான கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றான கார்பன்டை ஆக்சைடை கட்டுப்படுத்து வதன் மூலம் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கும் உதவுகிறது. நாம் எவ்வளவு காகிதப் பைகளைப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு மரங்கள் நடுவதும் முக்கியமானது.

மேலும் செய்திகள்