புதிய முயற்சிகளுக்கு தயங்காதீர்கள்
|எத்தனையோ போராட்டங்கள், சவால்கள் இருந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார், 44 வயதான வெண்ணிலா.
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை புரட்டி போட்டு விடுகிறது. நோக்கம் ஒன்றாக இருந்தாலும் நாம் பயணிக்கும் திசையோ வேறாகி விடும். அந்த வகையில் எத்தனையோ போராட்டங்கள், சவால்கள் இருந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார், 44 வயதான வெண்ணிலா. அவர் அப்படி என்ன சாதித்தார் என்றால், ஆசிரியை படிப்பை முடித்த அவர் பன்றி வளர்த்து அதனை வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்கிறார். அதுவும் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் நமக்கெல்லாம் பிரமிப்பையும், வியப்பையும் உண்டாக்குகின்றன. அதனை அவரே கூறுகிறார்.
''என்னுடைய சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் இருதயபுரம். கணவர் ஐசக். மகன் ஹெவின் இன்பென்ட். நாங்கள் விவசாய குடும்பம். என்னுடைய கணவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். நான் 12-ம் வகுப்பு படித்து இருந்தேன். திருமணம் முடிந்த பிறகு கணவர் வீட்டில் இருந்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்தோம். சிறு வயதில் இருந்தே எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. திருமணத்துக்கு பிறகு என்னுடைய ஆசிரியை கனவை கணவரிடம் கூறினேன். அவரும், என்னை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் படிக்க வைத்தார். ஒருவழியாக ஆசிரியர் பயிற்சியை முடித்தபோது, கடுமையான வறட்சி ஏற்பட்டது. விவசாயமும் செய்ய முடியாத நிலை. குடும்பத்தை நடத்தவே கடும் சிரமமாக இருந்தது. வருமானத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் உறவினர் ஒருவர் மூலம் பன்றி வளர்க்கலாம். அதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்றார்.
ஆசிரியை கனவு ஒருபக்கம் இருந்தாலும் வாழ்க்கை நம்மை எந்த திசையை நோக்கி இழுக்கிறதோ, அதில் நீந்தி வெற்றிகரமாக பயணத்தை மேற்கொள்வது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். கணவர் விவசாயம் செய்தாலும், நானே பன்றிகளை வளர்க்கலாம் என முடிவு செய்தேன். அதற்கு என்னுடைய கணவர் பச்சை கொடி காட்டினார்'' என்கிறார், வெண்ணிலா.
இவர் திருவண்ணாமலை பகுதியில் இருந்து 4 பெண் பன்றிகளும், ஒரு ஆண் பன்றியும் வாங்கி வந்து, சிறியதாக பண்ணை ஆரம்பித்தார். அவை நன்றாக வளர்ந்தபோது, வாழ்க்கை மீண்டும் வேறு பக்கமாய் அவரை அழைத்து சென்றது.
''பன்றி வாங்கி வந்த பிறகு முதலில் 20 குட்டிகள் கிடைத்தன. பன்றி தொழில் தொடர்பான எந்தவொரு புரிதலும் இல்லாமல் பன்றிகளை வளர்த்தேன். கொஞ்சம் வருமானம் வர தொடங்கியது. என்னுடைய கணவரும் எனக்கு ஒத்தாசையாக இருந்தார். திடீரென ஒருநாள் பன்றி காய்ச்சல் நோய் வந்தது. பன்றிகள் ஒவ்வொன்றாக இறக்க தொடங்கியது. பார்த்து பார்த்து பிள்ளைகளை போல் வளர்த்து வந்த பச்சிளம் குட்டிகள் கூட செத்து மடிந்தன. கண் முன்னே 30-க்கும் மேற்பட்ட குட்டிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இறந்து கிடந்தன'' என்று கூறியபோது வெண்ணிலா கண்களில் கண்ணீர் ததும்பின.
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவர், தொடர்ந்து கூறும் போது, ''பன்றிகள் ஒவ்வொன்றாக இறந்ததை கண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்தோம். அப்போதுதான் தர்மபுரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை அணுகினோம். அங்கு இருந்த டாக்டர் கண்ணதாசன் மற்றும் மருத்துவ குழுவினர் எங்களது வீட்டுக்கு வந்தனர். இறந்த பன்றிகளை பார்வையிட்டனர். எதையும் காப்பாற்ற முடியாத நிலையில், ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம்.
அடுத்த சில மாதங்கள், எந்தவொரு தொழிலும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் மிகுந்த சிரமங்களை சந்தித்தோம். பன்றி வளர்ப்பு தொழிலையே விட்டு விடலாம் என நினைத்தபோது, கால்நடை டாக்டர்கள் குழுவானது எங்களை ஊக்கப்படுத்தினர். முறையான வளர்ப்பு முறைகளை பின்பற்றி பன்றிகளை வளர்க்க ஆலோசனை வழங்கினர்.
3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பன்றி வளர்க்க முடிவு செய்தோம். 70 கிலோ எடையில் 12 தாய் பன்றிகள், 2 ஆண் பன்றிகளை வாங்கினோம். புதிதாக கூடாரம் அமைத்து நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி வளர்க்க முடிவு செய்தோம். அதாவது பன்றிகளுக்கு குட்டி பிறந்து 60 நாட்களில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை பன்றி காய்ச்சல் தடுப்பூசியும், தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கோமாரிநோய் தடுப்பூசியும் போட்டோம். தொழில் நல்ல முறையில் செயல்பட தொடங்கியது. அதன்பிறகு 100 குட்டிகளை எடுத்தோம். பன்றிகளை வளர்த்து கேரளாவுக்குதான் அதிகமாக ஏற்றுமதி செய்து வந்தோம். அப்போது பன்றி காய்ச்சலை காரணம் காட்டி தமிழ்நாட்டில் இருந்து பன்றிகளை இறக்குமதி செய்ய கேரள அரசு தடை செய்தது. இருப்பினும் பன்றி இறைச்சிகளுக்கான தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு பன்றிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
அசாம், நாகலாந்து உள்ளிட்ட வட மாநிலங்களில் பன்றி இறைச்சிக்கு கிராக்கி இருப்பதை அறிந்து அங்கும் பன்றிகளை அனுப்பினோம். அதாவது சேலம், திருச்சி ரெயில் நிலையங்களில் ரெயில் மூலம் பன்றிகளை அனுப்பி வைத்தோம். மேலும் இறைச்சிக்காக உள்ளூர் வியாபாரிகளும் பன்றிகளை வாங்கி செல்கின்றனர்'' என்றார்.
''ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தும், பன்றி வளர்க்கிறீர்களே'' என பலரும் வெண்ணிலாவின் காதுபட பேசினாலும், இவர் எதுபற்றியும் கவலைப்படுவதில்லை.
''கால்நடை வளர்ப்பு தொழிலில், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வித்தியாசம் பார்க்கக்கூடாது. படிக்காதவர்கள் கூட பன்றி வளர்ப்பில், பணக்காரர்களாக மாறிய கதை நிறைய இருக்கிறது. அதனால் எனக்கு அதுபோன்ற பேச்சுக்களில் உடன்பாடு இல்லை. நான் எனக்கு பிடித்த, என் மனதிற்கு சரியெனபட்ட விஷயங்களை செய்கிறேன்.
இது சுலபமான வேலைதான் என்றாலும், இதில் சில சிரமங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது பன்றிக்காய்ச்சல் தடுப்பூசியானது பெங்களூருவில் தான் கிடைக்கிறது. பன்றி வளர்ப்பில் இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டு பன்றி வளர்ப்பாளர்கள் தடுப்பூசி பெற பெங்களூரூவுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. மேலும் புதிதாக பரவி வரும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலுக்கு, வெளிநாடுகளில் மட்டுமே மருந்துகள் கிடைக்கின்றன'' என வருந்துபவர், பன்றி வளர்ப்பு சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்கிறார்.
''பசுந்தீவன உற்பத்தியான வேலி மசால், கோவை தீவன சோளம்-31 ஆகியவை பற்றிக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாப்பாடு கழிவு, இறைச்சி கழிவு (வேக வைத்தது) போன்றவையும் தீவனமாக பயன்படுவதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு அம்சமாகவும் இது அமைகிறது. நாங்கள் பன்றிகளை இனப்பெருக்க பன்றி, இறைச்சிக்கான பன்றி, பன்றி குட்டிகள் என பிரித்து வளர்த்து வருகிறோம். இன்றைக்கு பன்றி வளர்ப்பு குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சிலர் எங்களிடம் வளர்ப்பு முறை குறித்து கேட்கிறார்கள். இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் நாங்கள் பன்றி வளர்க்கும் முறைகள் குறித்து அறிந்து பன்றி தொழில் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்'' என்று சமுதாய அக்கறையுடன் விடைபெற்றார்.