< Back
ஞாயிறுமலர்
மனிதர்களை விட குதிரைகள் அதிகம் வாழும் நாடு
ஞாயிறுமலர்

மனிதர்களை விட குதிரைகள் அதிகம் வாழும் நாடு

தினத்தந்தி
|
21 Sept 2023 6:08 PM IST

மங்கோலியா நாட்டின் மக்கள் எண்ணிக்கையை விட குதிரைகளின் எண்ணிக்கை அதிகம். அதாவது அங்கு 40 லட்சம் குதிரைகள் இருக்கின்றன.

உலகில் மக்கள் அடர்த்தி குறைவாக கொண்ட நாடுகளுள் ஒன்றாக மங்கோலியா அறியப்படுகிறது. அங்கு 35 லட்சத்துக்கும் குறைவாகவே மக்கள் தொகை இருக்கிறது. ஆனால் அந்நாட்டின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 பேர் மட்டுமே வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் இந்த நாடு ரஷியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அமைந்திருக்கிறது. மக்கள் தொகை அதிகம் கொண்ட அந்த இரு நாடுகளுக்கு மத்தியில் மக்கள் நெருக்கம் இல்லாத வெறுமை நாடாக மங்கோலியா விளங்குவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் அந்நாட்டின் மக்கள் எண்ணிக்கையை விட குதிரைகளின் எண்ணிக்கை அதிகம். அதாவது அங்கு 40 லட்சம் குதிரைகள் இருக்கின்றன. அந்நாட்டுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கு குதிரைகள்தான் பயண சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மங்கோலிய தலைநகர் உலன்பாதரில்தான் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிபேர் வசிக்கிறார்கள் என்பதும் இன்னொரு சுவாரசியமான விஷயம். இத்தனைக்கும் இந்த நாடு இயற்கை அழகு சூழ்ந்த பிரதேசமாக திகழ்கிறது.

காடு, மலை, நீர்நிலைகள், பாலைவனம் என இயற்கையின் அத்தனை அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறது. அந்நாட்டின் சில பகுதிகளில் வயல்வெளிகள் இல்லை. காய்கறிகள் பயிரிடுவதற்கு சாத்தியமான சூழல் இல்லாததே அதற்கு காரணம். அதனால் அங்கு வசிப்பவர்கள் விலங்கினங்களின் இறைச்சி, பால் போன்றவற்றைதான் உணவாக உட்கொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்