ரெயில் சேவை இல்லாத தேசங்கள்
|இன்னும் சில நாடுகளில் ரெயில்கள் ஓடாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். சில நாடுகளில் ரெயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அதை முழுமைப்படுத்த முடியவில்லை.
பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகும். அப்படி பயணம் செய்பவர்களில் பலரும் நாடும் பொது போக்குவரத்து துறைகளில் ரெயில்வே முதன்மையானது. எவ்வளவு அதிக தூரமாக இருந்தாலும் சவுகரியமாகவும், அதிக களைப்பில்லாமலும் பயணிப்பதற்கு ரெயில் பயணமே சிறந்தது.
இந்திய ரெயில்வே, 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, உலகின் நான்காவது பெரிய ரெயில்வே நெட்வொர்க்காக விளங்குகிறது. இதற்கிடையே புல்லட் ரெயில்களில் இருந்து பல அதிவேக ரயில்களை இயக்கும் நாடுகளும் இருக்கின்றன. மறுபுறம் இன்னும் சில நாடுகளில் ரெயில்கள் ஓடாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான். சில நாடுகளில் ரெயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், அதை முழுமைப்படுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட சில நாடுகளை பற்றி தெரிந்து கொள்வோமா?
பூட்டான்:
தெற்காசியாவின் மிகச் சிறிய நாடாகவும், இந்தியாவின் அண்டை நாடாகவும் அறியப்படும் பூட்டானில் ரெயில் சேவை இல்லை. ஆனால் இந்திய ரெயில்வேயுடன் இணைக்க திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. அது நேபாளத்தில் உள்ள டோரி பாரியை, மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாராவுடன் இணைக்கும் திட்டமாகும். இந்த பாதையானது பூட்டான் வழியாகவே செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
சைப்ரஸ்:
இந்த நாட்டில் 1905-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை ரெயில் சேவை இருந்தது. ஆனால் அந்நாட்டின் பொருளாதார நிலைமை ரெயில் சேவையை தொடர்ந்து நடத்த ஒத்துழைக்கவில்லை. ரெயில்வே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் 1974-ம் ஆண்டு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அங்கு ரெயில்கள் இயக்கப்பட்டதன் நினைவாக தற்போது ரெயில் நிலையம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
கிழக்கு திமோர்:
இன்று வரை இங்கு ரெயில் வசதிகள் உருவாக்கப்படவில்லை. இங்கு வசிப்பவர்களின் முதன்மையான போக்குவரத்து சாலைகள் மட்டுமே. பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலமே தங்கள் பயணத்தை தொடர்கின்றனர்.
லிபியா:
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாட்டில் ரெயில் சேவை இருந்தது. உள்நாட்டு போரின் காரணமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அங்கு 1965-ம் ஆண்டு முதல் ரெயில் இயங்கவில்லை. ஆனால் 2001-ம் ஆண்டு ராஸ் அஜ்திர் மற்றும் சிர்தேவை இணைக்கும் வகையில் ரெயில் பாதைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி பணியை முடிக்க முடியவிலை.
குவைத்:
பல எண்ணெய் வளங்களை கொண்டுள்ள குவைத்தில் ரெயில் சேவை இல்லாதது ஆச்சரியமானதுதான். தற்போது அங்கு சில ரெயில்வே திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளன. அந்த ரெயில் பாதைகளை ஓமனுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
அன்டோரா:
மக்கள் தொகை அடிப்படையில் அன்டோரா உலகின் 11-வது சிறிய நாடாகும். இங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால், ரெயில் பாதை அமைக்கப்படவில்லை. அங்கு ரெயிலில் பயணிக்க விரும்புவோர் அருகிலுள்ள பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டும். அதற்காகவே பிரத்யேகமாக பேருந்து சேவையும் இயக்கப்படுகிறது.