< Back
ஞாயிறுமலர்
வெளிநாட்டவர்கள் வாழ விரும்பும் - வெறுக்கும் நாடுகள்
ஞாயிறுமலர்

வெளிநாட்டவர்கள் வாழ விரும்பும் - வெறுக்கும் நாடுகள்

தினத்தந்தி
|
27 Aug 2023 8:08 AM IST

விரும்பும் நாடுகள்:

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சில நாடுகள் வெளிநாட்டினர் மிகவும் நேசிக்கும் இடங்களாக மாறியுள்ளன. தங்கள் சொந்த நாட்டை விட்டுவிட்டு அந்த நாடுகளுக்கு சென்று வாழ விரும்பும் அளவுக்கு விருப்பமான சூழலை கொண்டிருக்கின்றன. அதே வேளையில் சில நாடுகள் வெளிநாட்டினர் விருப்பத்திற்கு மாறான கட்டுப்பாடுகள், காலநிலை மாறுபாடு போன்ற சூழலை கொண்டிருக்கின்றன. அத்தகைய சில நாடுகள் உங்கள் பார்வைக்கு....

இந்த தென் அமெரிக்க நாடு வெப்பமான காலநிலை சூழ்ந்தது என்றாலும் வெளிநாட்டினர் நேசிக்கும் கலாசாரம் மற்றும் குறைந்த வாழ்க்கைச் செலவுகளை கொண்டிருக்கிறது. மெக்சிகோ சிட்டி, பிளாயா டெல் கார்மென் போன்ற நகரங்கள் பாரம்பரிய-நவீன கலாசாரங்களை ஒருங்கே பிரதிபலிக்கும் கட்டமைப்புகளையும், வசீகரமான சூழலையும் கொண்டிருக்கின்றன. பணி ஓய்வுக்கு பிறகு வெளிநாட்டினர் வாழ விரும்பும் இடமாக விளங்குகின்றன.

ஸ்பெயின்:

இந்த ஐரோப்பிய நாடு வெளிநாட்டவர்களை ஈர்க்கும் கட்டமைப்புகளால் மிளிர்கிறது. ஓய்வெடுக்க சவுகரியமான கடற்கரைகள், வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள், உணவு வகைகள் என வெளிநாட்டினர் விரும்பும் அம்சங்களை கொண்டிருக்கிறது. வேலையையும், வாழ்க்கையையும் சமநிலையில் பாவிக்கும் தன்மை, வலுவான சுகாதார அமைப்பு, வெளிநாட்டினரை வரவேற்கும் தன்மை போன்ற அம்சங்கள் உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினருக்கு விரும்பத்தக்க இடமாக ஸ்பெயினை மாற்றுகின்றன.

பனாமா:

வெப்பமண்டல காலநிலை, பசுமையான நிலப்பரப்புகள், சாதகமான வரிக்கொள்கைகள் போன்றவை வெளிநாட்டினரின் விருப்ப பட்டியலில் பனாமாவை இடம்பெறச்செய்துள்ளது.

பனாமா நகரம், நவீன உள்கட்டமைப்பை கொண்டது. போக்வெட் போன்ற பகுதிகள் அமைதியான சூழலில் அமைந்திருக்கின்றன. அவை வெளிநாட்டவர்களை உள்ளூர் சமூகத்துடன் எளிதாக ஒருங்கிணைக்க உதவுகின்றன.

மலேசியா:

மாறுபட்ட கலாசாரம், பரபரப்பான வாழ்க்கை சூழல் கொண்ட நகரங்கள், செலவு குறைவு போன்றவை தென்கிழக்கு ஆசியாவிற்குள் வெளிநாட்டினர் வாழ விரும்பும் இடமாக மலேசியாவை தேர்ந்தெடுக்க வைக்கின்றன. தலைநகரான கோலாலம்பூர் பலதரப்பட்ட கலாசார சூழலை கொண்டிருக்கிறது. வெளிநாட்டினர் விரும்பும் வேலைவாய்ப்பு அம்சங்களையும் வழங்குகிறது. பரபரப்பு இல்லாமல் நிம்மதியான சூழலில் வாழ விரும்புவோருக்கு ஏற்ற இடமாக பினாங்கு விளங்குகிறது.

தைவான்:

மேம்பட்ட சுகாதார அமைப்பு, சிறப்பான பொதுப் போக்குவரத்து, பிற நாட்டினரை வரவேற்கும் தன்மை காரணமாக வெளிநாட்டினர் மத்தியில் தைவான் பிரபலமடைந்துள்ளது. தைபே போன்ற நகரங்களில் காணப்படும் நவீனத்துவமும், பாரம்பரிய கலாசாரமும் சமநிலையான வாழ்க்கை முறையை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக விளங்குகின்றன.

வெறுக்கும் நாடுகள்:

குவைத்:

அதிக வருமானம் கொண்ட பொருளாதாரம் கொண்ட நாடாக குவைத் விளங்குகிறது. அதனால் பொருளாதார ரீதியாக தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்காக வேலைதேடி பலரும் குவைத் செல்கிறார்கள். ஆனால் குவைத், பாரம்பரிய கலாசாரத்தை அதன் தன்மை மாறாமல் கடைப்பிடிக்கும் நாடாக விளங்குகிறது. அதனால் கலாசாரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் அம்சங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை வெளிநாட்டினருக்கு சாதகமாக இல்லாததால் குவைத்தை வாழும் இடமாக கொண்டிருக்க வெளிநாட்டினர் பலரும் விரும்புவதில்லை. தனிப்பட்ட சுதந்திரம் இன்மையையும், தனிமை சூழலையும் உணர்வதாக குறிப்பிடுகிறார்கள்.

நார்வே:

உயர்தர வாழ்க்கை மற்றும் வலுவான பொருளாதாரம் நார்வேக்கு நற்பெயரை தேடிக்கொடுக்கின்றன. ஆனாலும் அதிக வாழ்க்கைச் செலவு, நீண்டு கொண்டே செல்லும் குளிர்காலம் மற்றும் உள்ளூர் சமூகத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமம் ஆகியவை வெளிநாட்டினரின் விருப்பத்திற்கு மாறான நாடாக நார்வேயை மாற்றுகின்றன.

துருக்கி:

அரசியல் ஸ்திரமின்மை, பாதுகாப்பு கவலைகள் போன்றவை துருக்கியை வெளிநாட்டவர்கள் விரும்பாத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளன. இஸ்தான்புல் போன்ற நகரங்கள் கலாசார பின்னணியை கொண்டிருந்தாலும் அங்கு நிலவும் ஒட்டுமொத்த சூழல் பல வெளிநாட்டவர்களின் விருப்பங்களுடன் ஒத்துப்போகாது.

தென் கொரியா:

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாரம்பரிய வரலாறு, வலுவான கட்டமைப்புகள் இருந்தபோதிலும், தென் கொரியா வெளிநாட்டவர்களுக்கு பல சவால்களை முன்வைக்கிறது. பணிச்சூழல், பிற மொழி பேசுவதில் கட்டுப்பாடு, உள்ளூர் மக்களுடன் சமூக தொடர்புகளை உருவாக்குவதில் உள்ள சிரமம் ஆகியவை சாதகம் இல்லாத இடமாக தென்கொரியாவை மாற்றுகின்றன.

ஜெர்மனி:

வியக்கத்தக்க வகையில், வலுவான பொருளாதாரம் மற்றும் உயர் வாழ்க்கை தரங்களைக் கொண்ட நாடாக ஜெர்மனி விளங்குகிறது. எனினும் வெளிநாட்டவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத நிலை அங்கு நிலவுகிறது. அதிகாரத்துவ தடைகள், சமூக தொடர்புகள், அதிக வாழ்க்கைச் செலவு ஆகியவை வசதியான மற்றும் நிறைவான வாழ்க்கை சூழலை தேடும் வெளிநாட்டவர்களுக்கு தடைக்கல்லாக அமைந்திருக்கின்றன.

மேலும் செய்திகள்