< Back
ஞாயிறுமலர்
அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்
ஞாயிறுமலர்

அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்

தினத்தந்தி
|
30 April 2023 9:00 PM IST

சீனாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது.

தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியே 86 லட்சம். ஒரு பெண்ணின் சராசரி கருவுறுதல் விகிதம் 2 ஆகும். ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகள், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். 7 சதவீதம் பேர் 65 வயதை எட்டியவர்களாக உள்ளனர்.

நைஜீரியா:

நைஜீரியாவின் மக்கள் தொகை 22 கோடியே 38 லட்சம். அங்கு கருவுறுதல் விகிதம் 5.1 என்ற அளவில் உள்ளது. இருப்பினும் ஆண் மற்றும் பெண் இருபாலரின் ஆயுட்காலம் குறைவாகவே உள்ளது. அங்கு சராசரி ஆயுட்காலம் 54 ஆண்டுகளாகவே உள்ளது. அந்நாட்டு மக்கள் தொகையில் 54 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். 3 சதவீதத்தினர் மட்டுமே 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

பிரேசில்:

பிரேசிலின் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. ஆண் மற்றும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் முறையே 73 மற்றும் 79 ஆண்டுகள். மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். அதே சமயம் 10 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அந்நாட்டின் மக்கள் தொகை 21 கோடியே 64 லட்சம்.

இந்தோனேசியா:

இந்நாட்டின் மக்கள் தொகை 27 கோடியே 75 லட்சம். கருவுறுதல் விகிதம் 2.1. இது இந்தோனேஷியாவின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. ஆண்களின் ஆயுட்காலம் 69 ஆண்டுகள். பெண்களின் ஆயுட்காலம் 73 ஆண்டுகள். மக்கள்தொகையில் 68 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுடையவர்களாகவும், 7 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

வங்காள தேசம்:

இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தின் மக்கள் தொகை 17 கோடியே 30 லட்சம். கருவுறுதல் விகிதம் 1.9 ஆக உள்ளது. அந்நாட்டில் 68 சதவீத மக்கள் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகள். பெண்களுக்கு 76 ஆண்டுகள்.

சீனா:

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாதான் நீண்ட காலமாக இருந்தது. இப்போது அந்நாட்டின் மக்கள் தொகை 142 கோடியே 57 லட்சம். இந்தியாவை ஒப்பிடும்போது சீனாவில் கருவுறுதல் விகிதம் 1.2 ஆக உள்ளது. இது மக்கள் தொகை குறைந்து வருவதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. அங்கு வசிக்கும் ஆண்களின் ஆயுட்காலம் 76 ஆண்டுகள். பெண்களின் ஆயுட்காலம் 82 ஆண்டுகள். சீனாவின் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

அமெரிக்கா:

3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகை 34 கோடி. அங்கு கருவுறுதல் விகிதம் 1.7. ஆண்களின் ஆயுட்காலம் 77 ஆண்டுகள். பெண்களின் ஆயுட்காலம் 82 ஆண்டுகள். மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 சதவீதம் பேர் உள்ளனர்.

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் அதிக கருவுறுதல் விகிதம் கொண்டுள்ளது. அங்கு கருவுறுதல் விகிதம் 3.3 ஆக உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை 24 கோடியே 5 லட்சம். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆகவும், பெண்களின் ஆயுட்காலம் 70 ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் 15 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். பாகிஸ்தானில் 65 வயதுக்குட்பட்டவர்கள் 4 சதவீதம் பேர் மட்டுமே.

ரஷியா:

அதிக மக்கள்தொகை கொண்ட முதல் பத்து நாடுகளில் 1.5 என்ற மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தை ரஷியா கொண்டுள்ளது. அந்நாட்டு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள். பெண்களின் ஆயுட்காலம் 79. இதில் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் 66 சதவீதம் பேர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 16 சதவீதம் பேர். ரஷியாவின் மக்கள் தொகை 14 கோடியே 44 லட்சம்.

மெக்சிகோ:

மெக்சிகோவின் கருவுறுதல் விகிதம் 1.8. ஆண் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் முறையே 72, 78 ஆண்டுகள். மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் 15-64 வயதுக்குட்பட்டவர்கள். 9 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அந்நாட்டின் மக்கள் தொகை 12 கோடியே 85 லட்சம்.

மேலும் செய்திகள்