சமையல் டிப்ஸ்
|* தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயை தயிரில் போட்டு வைத்தால் போதும். ஒரு நாள் முழுக்க தயிர் புளிக்காது.
* சமையலுக்கு தூள் உப்பு வாங்காமல் கல் உப்பையே சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து பயன்படுத்தலாம்.
* இடியாப்ப மாவு பிசையும்போது காய்ச்சிய பால் சிறிது சேர்த்து பிசைந்தால் இடியாப்பம் மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
* வெள்ளை பட்டாணியை சுண்டல் செய்வதற்கு ஒரு ஸ்பூன் தனியா, சிறிது வெந்தயம், நன்றாக காய்ந்த 2 மிளகாய் இவைகளை வறுத்து ஆற வைத்து பொடிக்கவும். பின்பு வழக்கம்போல் தாளித்து துருவிய தேங்காயுடன் இந்த பொடியையும் வேகவைத்த பட்டாணியுடன் சேர்த்து கிளறி பரிமாறுங்கள், சுவை அதிகமாக இருக்கும்.
* மிளகு ரசம் செய்யும் பொழுது வறுத்து பொடித்த மல்லி, கடலைப்பருப்பு பொடியையும் சேர்த்து ரசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* பூரி செய்வதற்கு மாவு பிசையும்பொழுது மாவுடன் சிறிது சர்க்கரை, ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பிசைந்தால் பூரி நீண்ட நேரம் உப்பலாகவே இருக்கும். மீதமான பூரி அல்லது சப்பாத்தி மாவை ப்ரிட்ஜில் வைக்கும் போது மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி இறுக்கமாக மூடி வைத்தால் மாவு நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.
* புளிப்பாக எலுமிச்சை ஊறுகாய் செய்வதற்குப் பதிலாக எலுமிச்சை துண்டுகளை ஊறுகாயாக செய்து, தேவைக்கேற்ப வெல்லத்தை பாகாகக் காய்ச்சி ஊறுகாயுடன் சேர்த்து கிளறி பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தலாம். இது வட இந்தியாவில் பிரபலம், இது போன்று துருவிய மாங்காய், துருவிய நெல்லிக்காய் போன்றவற்றிலும் இனிப்பு ஊறுகாய் செய்யலாம்.
* நெய் ஊற்றித் தாளித்தால் சாம்பார், ரசம் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* புளிக்குழம்பு, காரக் குழம்பு செய்யும் பொழுது புளி எவ்வளவு சேர்த்தோமோ அதே அளவு வெல்லமும் குழம்பில் சேர்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.
* வாழைப்பூவை சுத்தம் செய்யும் பொழுது கையில் சிறிதளவு தூள் உப்பை தடவிக் கொண்டால் கையில் கறை படியாது.
* கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா தழைகளை வாங்கி வந்த உடனே சுத்தம் செய்து, தனித்தனி பைகளில் வைத்துக்கொண்டால், காலை நேரத்தில் சமையல் செய்யும்பொழுது தேவைக்கேற்ப எடுத்து அலசி பயன்படுத்திக் கொள்ளலாம், நேரமும் விரயம் ஆகாது. வாடாமலும் இருக்கும்.
* கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு வாங்கும்பொழுது நன்றாகத் தோல் பகுதி காய்ந்து, பழைய கிழங்காகப் பார்த்து வாங்குங்கள், அது அதிகம் அரிக்காது.
-ஆர்.நிலா, வி.எம்.நகர், பெங்களூரு.