மிகச்சிறிய நகரங்களும்.. மக்கள் தொகையும்..
|கிராமத்தை விட குறைவான பரப்பளவுடன், குறைவான மக்கள் தொகையுடன் நகரத்திற்குரிய அத்தனை அந்தஸ்துகளையும் பெற்று திகழும் இடங்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட மிகச்சிறிய நகரங்கள் சில உங்கள் பார்வைக்கு...
நகரங்கள் என்றாலே அனைத்துவிதமான கட்டமைப்புகளுடன், மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சகல வசதிகளுடன் பரந்து விரிந்திருக்கும். ஆனால் கிராமத்தை விட குறைவான பரப்பளவுடன், குறைவான மக்கள் தொகையுடன் நகரத்திற்குரிய அத்தனை அந்தஸ்துகளையும் பெற்று திகழும் இடங்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட மிகச்சிறிய நகரங்கள் சில உங்கள் பார்வைக்கு...
ஹாமில்டன், பெர்முடா
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரம் 1793-ல் நிறுவப்பட்டது. 1815-ம் ஆண்டு பெர்முடாவின் தலைநகராக மாறியது. ஹாமில்டன் நகரின் மக்கள் தொகை ஆயிரத்திற்கும் குறைவுதான்.
ஆடம்ஸ்டவுன், பிட்கேர்ன் தீவுகள்
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிட்கேர்ன் தீவுகளில் அமைந்திருக்கும் சிறிய நகரம் ஆடம்ஸ்டவுன். இதுதான் பிட்கேர்ன் தீவுகளுக்கு தலைநகரமாக விளங்குகிறது. அதனால் உலகின் குறைந்த மக்கள் தொகை கொண்ட தலைநகரமாக அறியப்படுகிறது. இங்கு சுமார் 50 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். சுற்றுலா பயணிகளின் வருகை இந்த நகரத்தை மக்கள் நடமாட்டம் கொண்ட உயிர்ப்பான பகுதியாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.
ஹம், குரோஷியா
உலகின் மிகச்சிறிய நகரம் என்ற சிறப்பை பெற்றது, ஹம். இங்கு இரண்டு தெருக்கள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் மக்கள் தொகை எவ்வளவு இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? சுமார் 30 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். அதனால் உலகின் அழகான, அமைதியான இடங்களில் ஒன்றாக ஹம் அறியப்படுகிறது.
வாடிகன்
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாக விளங்கும் இது சிறிய நகரம் மட்டுமல்ல, உலகின் மிகச்சிறிய நாடு என்ற சிறப்பையும் பெற்றது. இதன் மொத்த பரப்பளவே 0.44 சதுர கிலோ மீட்டர்தான். இங்கு சுமார் 800 பேர் வசிக்கிறார்கள்.
டர்புய், பெல்ஜியம்
இந்த இடத்துக்கு 1331-ம் ஆண்டில் போஹேமியாவின் ஜான் மன்னரால் நகர அந்தஸ்து வழங்கப்பட்டது. இங்கு 400 பேர் நிரந்தரமாக குடியிருக்கிறார்கள். எனினும் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். அதனால் பிசியான நகரமாக இயங்கிக்கொண்டிருக்கும்.
லண்டன், இங்கிலாந்து
உலகின் சிறிய நகரங்களின் பட்டியலில் லண்டனும் இடம் பெற்றுள்ளது என்றால் நம்புகிறீர்களா? அங்கு லட்சக்கணக்கானவர்கள் வசிக்கலாம். ஆனால் லண்டன் நகர எல்லைகள் பழங்காலம் முதலே அப்படியே இருக்கின்றன. அதிகாரப்பூர்வமாக எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதனால் லண்டனின் பரப்பளவு 2.9 சதுர கிலோமீட்டர்தான்.
ப்ரோன்கோர்ஸ்ட், நெதர்லாந்து
200-க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரம் இது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக நகர அந்தஸ்துக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறது. 7-ம் நூற்றாண்டில் இங்கு மக்கள் குடியேறி இருக்கிறார்கள். சில நிமிடங்கள் நடை பயணம் செய்தால் போதும். இந்த நகரத்தை சுற்றிப்பார்த்து விடலாம்.