< Back
ஞாயிறுமலர்
கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்..
ஞாயிறுமலர்

கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்..

தினத்தந்தி
|
11 April 2023 11:21 PM IST

இன்றைய தலைமுறையினர் தங்கள் திருமண நாள் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணங்கள் நிறைந்ததாக அமைந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்கள் திருமணத்திற்கு வருகை தருபவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வித்தியாசமான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அப்படி வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுவது சில சமயங்களில் விபரீதத்தில் கொண்டு போய் முடித்துவிடுகிறது. மகாராஷ்டிராவில் புதுமண ஜோடி ஒன்று வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து திருமண வீடியோ எடுத்தபோது மணமகள் தீக்காயத்திற்குள்ளான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள ஜுன்னாரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண மேடையில் மணமக்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இருவரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருக்கிறது. அதனை ஸ்டைலாக பிடித்தபடி இன்முகத்துடன் போஸ் கொடுக்கிறார்கள். பின்பு அந்த துப்பாக்கிகளை இயக்குகிறார்கள். அவற்றின் முனைப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் முன்னோக்கி கிளம்புகின்றன.

ஆனால் ஒருசில நொடிகளில் மணமகள் கையில் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து பின்னோக்கி வெடிச்சத்தத்துடன் தீப்பொறி வெளிப்பட்டு அவரது முகத்தில் படுகிறது. அவர் சட்டென்று துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு மணமகனை பிடித்து தள்ளியபடி ஓடுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி இருக்கிறது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். ''திருமணம் அதிக ஆடம்பரமாக மாறும்போது இதுதான் நடக்கும்'' என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

''திருமண நாளை விருந்துகளை போலவே நடத்துகிறார்கள். இனிமையாக அமைந்திருக்க வேண்டிய அந்த நாளை கெடுத்துக்கொள்கிறார்கள்" என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

மேலும் செய்திகள்