தனிமையில் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்களா?
|கல்வி, பணி நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து வசிப்பவர்களுக்கு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவதில்லையே என்ற வருத்தம் எட்டிப்பார்க்கும். தனிமையில் வசித்தாலும் கூட பிறந்தநாளை மறக்கமுடியாத நாளாக மாற்றுவதற்கு சுவாரசியமான வழிகள் ஏராளம் உள்ளன.
ஒளி அலங்காரம்
பிறந்தநாள் என்றாலே கேக் மீது மெழுகுவர்த்தி ஏற்றி, அதனை ஊதி அணைத்து பின்பு கேக்கை வெட்டி கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. மெழுகுவர்த்தியை அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் அன்றைய தினம் இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு ஆங்காங்கே மெழுகுவர்த்திகளை ஏற்றி அதன் ஒளியில் அறையில் வெளிச்சத்தை பிரகாசிக்க செய்யுங்கள். மெழுகுவர்த்தி ஒளி அலங்காரம் மாறுபட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்கும். மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.
திரைப்படம்
பிறந்தநாள் அன்று வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் கவனம் முழுவதையும் குறிப்பிட்ட நேரம் வேறு ஏதாவது ஒன்றில் குவியுங்கள். அதற்கு திரைப்படம் சிறந்த தேர்வாக அமையும். பிடித்தமான படத்தை பார்த்தபடியே பாப்கார்ன் சாப்பிட்டு இனிமையாக பொழுதை போக்கலாம். நீண்ட காலமாக பார்க்காமல் தவறவிட்ட படத்தை தேர்ந்தெடுத்து பார்ப்பது ஆனந்தத்தை அளிக்கும்.
விருந்து
வழக்கமான சமையலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நீங்களே பிரத்யேகமாக ஏதாவது சமைத்து சாப்பிடலாம். உங்கள் விருப்பத்திற்குரியது மட்டுமின்றி மாறுபட்ட சுவையை ருசிக்க வைக்கும் சமையல் வீடியோக்கள் இணையதளத்தில் ஏராளம் உலவுகின்றன. அவற்றை பார்த்து சமைத்து சாப்பிடுவதும் உற்சாகத்தை கொடுக்கும்.
கற்றல்
பிறந்தநாள் அன்று ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வதற்கு முன்வாருங்கள். அது ஓவியம் வரைவதாகவோ, இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வதாகவோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாக பிறந்தநாளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அப்படி புதிய முயற்சிகளில் ஈடுபடுவது உற்சாகத்தையும், மன நிறைவையும் தரும்.
பயணம்
பிறந்தநாள் அன்று தனிமை பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிடுங்கள். அது சில மணி நேர குறுகிய பயணமாக அமைந்தாலே போதுமானது. இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்தால் மனதை இலகுவாக்கும். வாகனத்தை மெதுவாக ஓட்டியபடி இயற்கையை ரசிக்கலாம்.
சுயபரிசோதனை
உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருங்கள். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு முயற்சியுங்கள். நிறை, குறைகளை ஆராய்ந்து பிறந்தநாள் முதல் புது மனிதனாக மாறுவதற்கு முயற்சியுங்கள்.
கடந்த ஆண்டைப் பற்றி சிந்தித்து நன்மை, தீமைகளை பரிசீலித்து நேர்மறையாக செயல்படுவதற்கு முன் வாருங்கள். ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஒரு தீர்மானத்தை எடுத்து அதனை அடுத்த பிறந்தநாளுக்குள் நிறைவேற்றுவதற்கு சபதமிடுங்கள்.
உறவு
பிறந்தநாள் அன்று குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்கமுடியாவிட்டாலும் ``வீடியோ கால்" மூலம் அவர்களுடன் இணையுங்கள். அவர்களுடன் உரையாடுவதும், மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதும் பிறந்த நாளை இனிமையாக்கும். பள்ளி, கல்லூரி நண்பர்களுடனும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இணைந்து பேசி மகிழலாம்.