இயற்கை கருத்தரிப்புக்கு வழிவகுக்கும் செயற்கை சிகிச்சை
|குழந்தைபேறு இல்லாமல் தவிப்புக்குள்ளாகும் இளம் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. திருமண வயதை கடந்து தாமதமாக இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைப்பதும், குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதும், வாழ்வியல் பழக்கங்களும் குழந்தையின்மைக்கான காரணங்களாக முன்வைக்கப்படுகிறது. இன்றைய மருத்துவ உலகில் குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான சிகிச்சை முறைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுள் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறை பிரபலமானதாக இருக்கிறது.
திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதியர் இந்த சிகிச்சை முறையை அதிகம் நாடுகிறார்கள். இந்த கருவுறுதல் சிகிச்சை முறை பலருக்கும் வெற்றிகரமாகவே அமைகிறது. சிலருக்கு ஒரே சமயத்தில் இரட்டை குழந்தைகளும் பிறக்கின்றன. ஒருமுறை செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டால் மீண்டும் குழந்தை பெற்றெடுப்பது அரிது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் ஐ.வி.எப் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு இயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கு 1980-2021 வரை சிகிச்சையில் இருந்த 5 ஆயிரம் பேரின் மருத்துவ ஆவணங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வில் ஐ.வி.எப் போன்ற கருவுறுதல் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு குழந்தை பெற்ற பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்குள் இயற்கையாகவே மீண்டும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், பெண்கள் ஐ.வி.எப் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கர்ப்பமடைவது அரிது என்ற கருத்தை ஆய்வாளர்கள் தகர்த்தெறிந்துள்ளனர். ஐ.வி.எப் சிகிச்சைக்கு பிறகு இயற்கை முறையில் கருத்தரித்து தாய்மையடையலாம் என்ற கருத்தை இந்த ஆய்வு மூலம் முன்னிலைப் படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.