< Back
ஞாயிறுமலர்
பழமையான தங்கங்கள்
ஞாயிறுமலர்

பழமையான தங்கங்கள்

தினத்தந்தி
|
28 May 2023 6:58 PM IST

பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் உலகமெங்கும் அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. சில இடங்களில் அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

பல்கேரியாவில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில், கி.மு 4,500-ம் ஆண்டுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவிலும் அநேகமாக உலகெங்கிலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்கங்களுள் மிகவும் பழமையான பதப்படுத்தப்பட்ட தங்கமாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்கங்களுள் பல்கேரியாவில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நகரமான வர்ணாவில் கண்டுபிடிக்கப்பட்டதுதான் பழமையான தங்கமாக கருதப்பட்டது. அந்த தங்கம் 1972 மற்றும் 1991-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 5.8 கிலோ கிராம் எடை கொண்டிருந்தது.

தற்போது பல்கேரியாவில் மற்றொரு பழமையான தங்க மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை வர்ணாவை விட பழமையானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,500 ஆண்டுகள் பழமையானதாகவும் கருதப்படுகிறது. இதுபற்றி பல்கேரிய அறிவியல் அகாடமியின் பேராசிரியரும், அகழ்வாராய்ச்சியின் பொறுப்பாளருமான யாவோர் போயோட்ஜீவ் கூறுகையில், ''இது வர்ணா தங்கத்தை விட பழமையானது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அகழ்வாராய்ச்சியில் இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. ஒரு சிறிய தங்கத் துண்டு போல் தோற்றமளித்தாலும் வரலாற்றில் முக்கியமான இடத்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு பெரியது'' என்கிறார்.

அகழ்வாராய்ச்சிகளை தொடர்ந்து செய்வதற்கு வர்ணாவை விட பசார்ட்ஜிக்கிற்கு அருகில் உள்ள டெல் யுனாட்சைட் நகரம் சிறந்த தேர்வாக அமையும் என்றும் அவர் சொல்கிறார். இங்குதான் ஐரோப்பாவின் முதல் நகர்புற குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்.

அந்த இடத்தில் தயாரிக்கப்பட்ட தங்கம் ஒருவித மத வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதும் யோவார் போயோட்ஜீவின் கருத்தாக இருக்கிறது.

மேலும் செய்திகள்