சாலைகளில் குப்பைகளை அகற்றியபடியே ஒரு உடற்பயிற்சி
|‘பிளாக்கிங்’ என்பது ஓடும் பாதையில் கண்ணில் தென்படும் குப்பைகளை எடுத்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்வதாகும்.இதை நாகராஜ் என்பவர் தொடர்ந்து செய்து வருகிறார் .
தினமும் சில கிலோமீட்டர் ஓடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று உடற்பயிற்சி செய்பவர்களை கேட்டால், 'நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்' என்று கூறுவார்கள். இதே கேள்வியை நாகராஜிடம் கேட்டால் 'நகரத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்' என்று பதில் சொல்வார். ஆம்! 'ஜாக்கிங்' பயிற்சி செய்பவர் கூடவே 'பிளாக்கிங்' என்ற சமூக சேவையையும் மேற்கொண்டு வருகிறார்.
'பிளாக்கிங்' என்பது ஓடும் பாதையில் கண்ணில் தென்படும் குப்பைகளை எடுத்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்வதாகும். கடந்த ஆறு ஆண்டுகளாக கர்நாடக தலைநகர் பெங்களூரு மட்டுமில்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் தனது 'பிளாக்கிங்' சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். `பிளாக்கிங்' என்பதற்கு ஸ்வீடன் மொழியில் `எடுப்பது' என்று பொருள்.
ஸ்வீடனை சேர்ந்த எரிக் அஹ்ல்ஸ்ட்ரோம் என்பவர் இந்த முயற்சியை முன்னெடுத்தார். ஜாக்கிங் செய்தபோது சாலையில் தென்படும் குப்பைகளை தாமே அப்புறப்படுத்தலாமே என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. தன்னை போல் ஜாக்கிங் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுபவர்களை ஒன்றிணைத்து குப்பைகளை அகற்றத்தொடங்கினார். அது உலகெங்கும் உடற்பயிற்சி செய்யும் பலருடைய கவனத்தை ஈர்த்தது. அவர்களுள் ஒருவராக மாறிய நாகராஜ் மற்றவர்களையும் பிளாக்கிங் சேவையில் ஒன்றிணைத்து வருகிறார்.
''ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டக்கல் எனது பூர்வீகம். 15 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.ஏ. படிப்பதற்காக பெங்களூரு வந்தேன். படிப்பை முடித்ததும் அங்கேயே தங்கி வேலை பார்க்க தொடங்கினேன். 2012-ம் ஆண்டு சைக்கிள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியபோது சில இளைஞர்கள் குழுவாக சேர்ந்து குப்பைகளை சேகரித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன்.
அவர்களிடம் விசாரித்தபோது, 'ஒரு இடத்தில் குப்பை சேர்ந்திருந்தால் அந்த இடத்தில் மக்கள் குப்பைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த குப்பைகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை சுத்தமாக பராமரித்தால் அதில் மீண்டும் குப்பைகளை கொட்டமாட்டார்கள். அதனால்தான் குப்பைகள் ஓரிடத்தில் மொத்தமாக குவியாமல் அப்புறப்படுத்தும் பணியை செய்து வருகிறோம்' என்றார்கள். குப்பைகள் சேர்வதை தடுப்பதற்கு அவர்கள் சொன்ன விஷயமும், அவர்களின் சேவை பணியும் எனக்கு பிடித்து போனது. அன்று முதல் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க என்னால் முடிந்த உதவிகளை செய்ய தொடங்கினேன்'' என்பவர் குழுவாக இணைந்து குப்பைகளை அகற்றும் பணியை ஓட்டப்பந்தயங்கள் மூலம் தொடங்கி இருக்கிறார்.
''2016-ம் ஆண்டு பெங்களூரு நகரில் இருக்கும் கப்பன் பூங்காவில் தொடங்கிய மாரத்தான் போட்டியில் எனது முதல் பிளாக்கிங் சேவை ஆரம்பமானது. அந்த மாரத்தான் பந்தயத்தில் 500 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து ஓடும்போது சாலையோரம் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க ஆரம்பித்தேன். என் சேவையை நிறைய பேர் பாராட்டினார்கள். அதுவே என்னை ஊக்கப்படுத்தியது'' என்கிறார்.
நாகராஜின் சேவை இன்று 'இந்திய பிளாக்கர்ஸ் ஆர்மி' என்ற படையாக உருவெடுத்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி பிற நகரங்களிலும் `பிளாக்கிங்' சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
''பிளாக்கிங் செய்வதற்கு, நகரத்திலேயே பிரபலமான இடத்தை தேர்வு செய்கிறோம். ஏனெனில் அந்த இடங்களில் நிறைய குப்பைகள் காணப்படும். மேலும் நாங்கள் குப்பைகளை அகற்றுவதை அங்கு வசிக்கும் மக்கள் தெரிந்து கொள்வார்கள். எங்களுடன் சேர்ந்து பணியாற்றவும் செய்வார்கள். நகரங்களில் பிளாக்கிங் செய்யும்போது அதிக மக்களிடத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு முறை பிளாக்கிங் தொடங்கும்போதும் பிளாஸ்டிக் பயன்பாட்டு அளவை குறைப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம்'' என்றார்.
வழக்கமான `ஜாக்கிங்'கை விட `பிளாக்கிங்' அதிக ஆரோக்கிய நன்மைகளை தரும் என்பதும் நாகராஜின் கருத்தாக இருக்கிறது.