< Back
ஞாயிறுமலர்
22 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் கடார்-2
ஞாயிறுமலர்

22 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி வசூல் வேட்டை நடத்தும் 'கடார்-2'

தினத்தந்தி
|
27 Aug 2023 6:41 AM IST

பாலிவுட்டில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, சக்கை போடு போட்ட திரைப்படம் ‘கடார்’. தமிழில் ‘கலகம்’ என்று பொருள் கொள்ளக்கூடிய இந்தத் திரைப்படத்தில் சன்னி தியோல், அமீஷா படேல், அம்ரிஷ் பூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் முஸ்லிம்களும், பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களும் தாக்குதலுக்குள்ளான காலகட்டத்தில் கதை நடப்பது போல் 'கடார்' திரைப்படம் உருவாகியிருந்தது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் இஸ்லாம் மதத்தைத் சேர்ந்த கதாநாயகியை காப்பாற்றுவதற்காக சீக்கிய கதாநாயகர் திருமணம் செய்து கொள்கிறான்.

பல ஆண்டுகள் கழித்து அந்த பெண்ணுக்கு தன் தந்தை பாகிஸ்தானில் இருப்பது தெரிய வர, அவர்களைப் பார்ப்பதற்காக செல்கிறாள். ஆனால் அவள் திரும்பி வரவில்லை. பாகிஸ்தானிலேயே சிறைவைக்கப்படுகிறாள். தன் மனைவியை பார்த்துவர கதாநாயகன் புறப்படுகையில் அவனுக்கு பாகிஸ்தான் செல்ல முறையான அனுமதி கிடைக்கவில்லை. எனவே சட்டவிரோதமாக இந்திய-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து, தன் மனைவியை மீட்டு வருவதுதான் கதை.

அனில் ஷர்மா இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ரூ.18 கோடியில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் மென்மையாக இழையோடிய காதலும், கதாநாயகன் தீரத்துடன் தன் காதல் மனைவியை மீட்க போராடும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே சக்கை போடு போட்ட 'கடார்' திரைப்படம், அந்த நேரத்திலேயே ரூ.133 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 'கடார்-2' திரைப்படம் உருவாக்கப்பட்டு, கடந்த 11-ந் தேதி வெளியானது. முதல் படத்தை இயக்கியிருந்த அனில் ஷர்மா தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். மனைவி, மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் கதாநாயகன் சன்னி தியோல், இந்திய ராணுவத்தின் வேண்டுகோள்படி சிறு பணிக்காக அனுப்பிவைக்கப்படுகிறார். கடந்த காலத்தில் தன் மனைவியை பாகிஸ்தானில் இருந்து மீட்டு வரும் வழியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் சிலரை கதாநாயகன் கொல்லும் நிலை ஏற்படுகிறது. அதற்கு பழிவாங்கும் நிகழ்வாக தற்போது பாகிஸ்தான் சென்ற கதாநாயகனை, ராணுவ அதிகாரிகள் பிடித்து சிறைவைத்து சித்ரவதை செய்கின்றனா். அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாத நிலையில், அவரது மகன் உத்கர்ஷ் ஷர்மா, தந்தையைத் தேடி பாகிஸ்தான் செல்கிறார். அங்கு அவரது உயிருக்கு ஆபத்து வருகிறது. இதனால் வெகுண்டெழும் கதாநாயகன், தன் மகனை மீட்டுக் கொண்டு இந்தியா வருவதுபோல் 'கடார் 2' கதை உருவாக்கப்பட்டுள்ளது.

தந்தை, மகன் பாசம், தேசப்பற்று என்று பல்வேறு களத்தில் படம் பயணித்தாலும், 'கடார்' படத்தின் முதல் பாகத்தில் துளிர்த்த காதல் இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் முதல் படத்தில் இருந்த வீரியம் மிக்க வசனம், சன்னிதியோலின் வீரமான சண்டை காட்சிகள், இந்தப் படத்திலும் தொடர்ந்திருப்பது பலரையும் திருப்திப்படுத்தியிருப்பதாக சொல்கின்றனர். அதே நேரம் வசூலிலும் இந்தப் படம் சாதனையை நிகழ்த்திருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரூ.60 முதல் ரூ.80 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த 'கடார் 2' திரைப்படம், கடந்த 15 நாட்களில் ரூ.550 கோடியை வசூலித்திருக்கிறது.

'கடார் 2' வெளியான அதே நாளில்தான், அக்ஷய்குமார் நடிப்பில் உருவான 'ஓ.எம்.ஜி. 2' (ஓ மை கடவுளே 2) திரைப்படமும் வெளியாகி இருந்தது. இந்தப் படத்திற்கு நல்லவிதமாக விமர்சனங்கள் வந்த நிலையிலும், வசூல் மந்தமாகவே இருந்து வருகிறது. ரூ.50 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை ரூ.175 கோடியை வசூலித்திருக்கிறது. அந்த வகையில் சன்னி தியோல் நடிப்பில் உருவான 'கடார் 2' திரைப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தி இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமீஷா படேல் மகிழ்ச்சி

பாலிவுட் முன்னணி நடிகையான அமீஷா படேல் 2000-ம் ஆண்டில், 'கஹோ நா.. பியார் ஹை' என்ற படத்தில் அறிமுகமானார். இதில் நாயகனாக நடித்த ஹிருத்திக் ரோஷனுக்கும் இதுதான் முதல் படம். அடுத்த ஆண்டு அமீஷா படேல் நடிப்பில் வெளியான படம்தான் 'கடார்'. இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. இதனால் அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் அதிகரித்தது.

இடையில் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்தார். தமிழில் இவர் விஜய் நடிப்பில் உருவான 'புதிய கீதை' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2018-ம் ஆண்டுக்குப்பின் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த அமீஷா படேலுக்கு, 'கடார் 2' திரைப்படம் மீண்டும் புத்துணர்ச்சியை வழங்கியிருக்கிறது. கடார் இரண்டாம் பாகத்திலும் அவரது நடிப்பு சிறப்பான முறையில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி, அமீஷா படேலிடம் "நீ இந்தப் படத்துடன் (கடார் 2), திரைத் துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிடு. இங்கே பல நடிகைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நடித்து பெற முடியாத பெயரையும், பெருமையையும், நீ வெறும் இரண்டு படங்களிலேயே பெற்றுவிட்டாய். இனி நீ சாதிக்க வேண்டியது என்ன இருக்கிறது" என்று வெகுவாக பாராட்டியிருக்கிறாராம்.

இந்தப் பாராட்டு பல விருதுகளை வென்றது போன்ற மகிழ்ச்சியைத் தருவதாக, அமீஷா படேல் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்