சிறுதானிய உணவுகளில் மாற்றத்தை புகுத்தும் பெண்மணி
|இன்றைய இளம்தலைமுறையினருக்கு சிறுதானிய உணவுகள் மிகவும் பிடித்திருக்கிறது.
சிறுதானியங்களில் தயாராகும் சத்து மாவு வகைகளில் தொடங்கி, பிஸ்கட் வரை எல்லாவற்றையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேபோல பெற்றோர்களும், பள்ளி செல்லும் தங்களுடைய குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளையே ஸ்நாக்ஸாக கொடுக்க பழகி இருக்கிறார்கள். இது ஆரோக்கியமான எதிர்காலத்தை கட்டமைக்கும்'' என்று உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார், ஆர்த்தி செல்வகுமார்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்தவரான இவர், சிறுதானியங்களால் ஈர்க்கப்பட்டு, அதுதொடர்பான ஆராய்ச்சிகளிலும், புதுப்புது சிறுதானிய உணவு வகை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சிறுதானியங்கள் மீதான இவரது கரிசனத்திற்கு ஒருசில காரணங்களும் இருக்கின்றன. அதுபற்றி ஆர்த்தி விளக்குகிறார்.
''எனது இரட்டை குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாடு பிரச்சினையால் இறக்க நேரிட்டன. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் சக்தி சிறுதானியங்களுக்கு இருப்பதை தாமதமாகத்தான் அறிந்தேன். மற்ற தாய்மார்களுக்கு என் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணினேன். குழந்தைகளை இழந்து உடலும், மனமும் சோர்ந்திருந்த சமயத்தில் என்னை தேற்றியது, சிறுதானியங்கள்தான். உடல் பலகீனத்தால் சோர்ந்திருந்தபோது பெற்றோரின் அறிவுரைப்படி சிறுதானிய உணவுகளை சாப்பிட ஆரம்பித்தேன். புத்துணர்ச்சியாக உணர்ந்ததுடன், உடல் ரீதியாக-மன ரீதியாக நிறைய மாற்றங்கள் எனக்குள் தெரிய ஆரம்பித்தன. ஆரம்பத்தில் என்னை தேற்றிக்கொள்ளவே, நிறைய சிறுதானிய உணவுகளை புதுமையாக தயாரித்து சாப்பிடத் தொடங்கினேன். உடலும் தெம்பானது, அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது'' என்பவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக, நட்பு வட்டாரத்தில் தான் தயாரித்து உண்ணும் சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்த தொடங்கினார்.
ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவிற்கு என்றுமே வரவேற்பு அதிகம் என்பதால், ஆர்த்தியின் முயற்சியை பலரும் பாராட்டியிருக்கிறார்கள். அதில் ஒருசிலர் தங்களுக்கும் சிறுதானிய உணவுகள் தேவையென கேட்டிருக்கிறார்கள். அப்படிதான், ஆர்த்தி புதுப்புது சிறுதானிய உணவுகளை தயாரிக்க தொடங்கி இருக்கிறார்.
''சிறுதானிய உணவு மீதான ஆர்வம் எனக்கு மட்டுமல்ல, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகமானது. அவர்களுக்காகவே, நான் புதுப்புது உணவுகளை தயாரித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அம்மா-அப்பாவிடம் கேட்டு சிறுதானிய ரெசிபிகளை உருவாக்கினேன். பிறகு, கிராமத்து பெண்களிடம் நிறைய சிறுதானிய ரெசிபிகளை கேட்டு தெரிந்து கொண்டேன். இப்படியே, சிறுதானிய ரெசிபி ஆர்வம், பலநூறாக பெருக தொடங்கியது. கிராமப்புறங்களில் மட்டுமே அறியப்பட்ட சிறுதானிய உணவு வகைகளை இன்றைய காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தி, அனைவரும் விரும்பும் உணவாக மாற்ற ஆசைப்பட்டேன். அதற்கு முன்பாக என்னென்ன சிறுதானிய வகைகள் உள்ளன, அவை எப்படி உணவாக பரிமாறப்படுகின்றன, அதில் எப்படி புதுமை செய்யலாம், இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறுதானியங்கள் பற்றிய புரிதல் உண்டா?, குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக எப்படி சிறுதானிய உணவுகளை மாற்றுவது போன்ற பல கள ஆய்வுகளை நடத்தி தகவல் திரட்டினேன். அதில் கிடைத்த பதில்களை கொண்டு, சிறுதானியங்களை புதுமை உணவாக மாற்றும் முயற்சியில் இறங்கினேன்'' என்பவர், தன்னை போன்று சிறுதானிய ஆர்வம் கொண்ட பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களை கொண்டே சிறுதானிய உணவுகளை தயாரிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் வீட்டில் தயாரிக்க தொடங்கி, இப்போது அதை சிறிய ஸ்டார்ட்-அப் முயற்சியாகவும் மாற்றியிருக்கிறார்கள்.
''என்னுடைய குழுவில் நிறைய அன்னையர் அங்கம் வகிக்கின்றனர். எல்லோருமே, பாக்கெட் உணவுகளுக்கு எதிரானவர்கள். சிறுதானிய உணவுகளை விரும்பக்கூடியவர்கள். நாங்கள் எங்களுடைய குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவு கொடுக்க ஆசைப்படுவோமோ, அத்தகைய உணவுகளைதான் ஆராய்கிறோம். அதை புதுமையாக தயாரிக்க திட்டமிடுகிறோம்.
சத்தானதாகவும், கெமிக்கல் இல்லாத உணவாகவும் இருக்கவேண்டும் என்பதில் எங்களுடைய கவனம் அதிகமாகவே இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் புதுப்புது சிறுதானிய உணவுகளை, அவர்கள் விரும்பும் வகையில் உருவாக்க முடியும் என்பதிலும் கவனம் செலுத்தி, திட்டமிடுகிறோம்'' என்பவர், சிறுதானிய உணவு தயாரிப்பு மூலமாக பெண்களுக்கு கணிசமான வருமானத்தை உருவாக்க முடியும் என்று நம்பிக்கை கொடுக்கிறார். அதற்கான சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர்கள், பெண் விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களை வாங்கி, அதிலிருந்து சிறுதானிய உணவுகளை தயாரித்து வருகிறார்கள்.
''ராகி, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை... இப்படி வரிசைக்கட்டி நிற்கும் எல்லா சிறுதானியங்களிலும் பிரத்யேக மருத்துவகுணம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும் கெட்டக்கொழுப்புகளை அகற்றும் பணிகளை இவை செய்கின்றன. ஆரோக்கியம், உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக இந்தக் காலத்து குழந்தைகளுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கும் உடல் பருமன், பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு சிறுதானியங்களே மருந்தாகி இருக்கின்றன. ஒருசில சிறுதானியங்கள், உயிர்க்கொல்லி நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியதாக அமைந்திருக்கின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிறுதானியங்களை, குட்டி-சுட்டிகளுக்கு பிடித்தமான வகையான உணவாக கொண்டு சேர்ப்பதே, எங்களுடைய லட்சியம். அதை முன்னிறுத்தியே தீவிரமாக உழைத்து வருகிறோம்'' என்பவர், சிறுதானிய உணவுகள் மட்டுமின்றி முருங்கைக்கீரை, கேரட், பீட்ரூட் உள்பட 50 வகையான காய்கறிகளில் புதுமையான உணவு தயாரிப்பு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். மூலிகை சோப் தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். இவரது முயற்சிகளுக்கு, பெற்றோரும் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆர்த்தி இறுதியாக ஒரு கருத்தை முன்வைக்கிறார்.
''சிறுதானிய உணவுகளை இன்னும் எளிமை உணவாக மாற்றி, தினந்தோறும் சாப்பிடக்கூடிய ஒன்றாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். அதற்கான ஆராய்ச்சிகளில்தான் ஈடுபட்டிருக்கிறேன். அதை வெகுவிரைவிலேயே செய்து காட்டுவேன்'' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.