எரிமலை தீவுக்குள் ஒரு அதிசய கிராமம்
|ஜப்பானில் நம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் 'அகாஷிமா'. இது ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட, மக்கள் வசிக்கும் ஒரு எரிமலை தீவாகும். அதாவது எரிமலையை சுற்றிலும் உள்ள சிறிய தீவு பரப்பில் மக்கள் வசிக்கின்றனர். 3.5 கீ.மீ நீளத்தையும், 2.5 கி.மீ அகல அமைப்பையும் கொண்டுள்ள இந்த தீவை டோக்கியோவின் துணை மாகாணமான ஹசிஜோ, நிர்வகிக்கிறது.
இந்த தீவின் வடகிழக்கு பகுதி, பிலிப்பைன்ஸை கடல் எல்லையாக கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 432 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது. எரிமலையிலிருந்து உருவாகும் எரிமலை குழம்புகளின் காரணமாக இந்த தீவின் வெளிப்புறம் செங்குத்தான பாறைகளால் சூழப்பட்டுள்ளது.
பெரும்பகுதி எரிமலையை கொண்டிருப்பதால் அதிக முறை எரிமலை வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 1781-ம் ஆண்டு நடைபெற்ற எரிமலை வெடிப்பின்போது, இங்கு வசித்த 300-க்கும் மேற்பட்ட மக்களில் பாதி பேர் இறந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
2014-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்படி தற்போது அங்கு வாழும் மக்களின் தொகை 170 என்ற அளவிலேயே உள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இங்கு ஒரு பள்ளிக்கூடமும், தபால் நிலையமும் அமைந்துள்ளது. ஆனால் பள்ளி படிப்பை முடித்தவுடன், உயர் கல்வி படிக்க வேண்டுமென்றால் மக்கள் தீவை விட்டு வெளியே செல்ல வேண்டும்.
இங்குள்ள மக்கள் இயற்கையாக உருவாகும் எரிமலையின் தாக்கமாக வெளிப்படும் புவிவெப்ப நீராவி துவாரங்களை பயன்படுத்தி சமைக்கவும், காய்கறிகளை வேக வைக்கவும் செய்கின்றனர். இங்கு வசிப்பவர்களின் முக்கிய தொழிலாக மீன்பிடித்தல், விவசாயம், உப்பு உற்பத்தி ஆகியவை உள்ளன. தனிமையை விரும்புபவர்கள், சாகச விரும்பிகளுக்கு இது ஏற்ற இடமாக விளங்குகிறது.