186 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மரம்
|இயற்கையின் முக்கிய அம்சமாக விளங்கும் மரங்கள் நகரமயமாக்கல் காரணமாக மெல்ல மெல்ல அழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழையடி வாழையாக பூமியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் மரங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு பழமையான மரங்கள் பல அழிந்துவிட்டன.
அப்படி அழிந்து விட்டதாக கருதப்பட்ட ஒரு மரம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு பிரேசிலில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஹோலி மர இனத்தை சேர்ந்த அதன் பெயர் ஐலெக்ஸ் ஷப்பிபார்மிஸ். இதனை அந்நாட்டு மக்கள் பெர்னாம்புகோ ஹோலி என்று அழைக்கிறார்கள்.
இந்த மரத்தை மேற்கத்திய அறிவியல் பதிவுகளில் உயிரியலாளர் ஜார்ஜ் கார்ட்னர் ஆவணப்படுத்தி இருக்கிறார். 1838-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மரத்தைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த மரம் எங்கும் காணப்படவில்லை. அதனால் இந்த மர இனமே அழிந்துவிட்டது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.
இந்தநிலையில் அழிந்துபோன இனங்களை தேடும், அடையாளப்படுத்தும் நோக்கத்தில் 'ரீ வைல்டு' என்ற திட்டம் அந்நாட்டில் தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ டி காப்ரியோ இந்த திட்டத்தின் முன்னோடியாக விளங்குகிறார். இந்த திட்டக்குழுவினர் சமீபத்தில் பிரேசிலில் உள்ள ஐகராஸு நகரத்தையொட்டி செல்லும் ஆற்றங்கரை பகுதியில் ஆய்வை தொடர்ந்தனர்.
அப்போது அங்கு நான்கு அரிய வகை மரங்களை பார்வையிட்டனர். இதற்கு முன்பு எங்கும் இதனை பார்க்காததால் குழம்பி போனார்கள். நீண்ட ஆய்வுக்கு பிறகு இது அழிந்து போனதாக கருதப்பட்ட பெர்னாம்புகோ ஹோலி மரம் என்பதை கண்டுபிடித்தனர். சுமார் 186 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மர இனத்தை கண்டறிந்திருக்கிறார்கள். வெள்ளை நிறத்தில் சிறிய பூக்கள் இந்த மரத்தில் பூத்து குலுங்குகின்றன.
இந்த உறுப்பினர்களில் ஒருவரான ஜூலியானா அலென்கார், ''இயற்கை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக கேள்விப்படாத ஒரு இனத்தைக் கண்டுபிடித்தது வியப்பளிக்கிறது. இதனை எங்களால் நம்ப முடியவில்லை. இது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம்'' என்று மனம் பூரிக்கிறார்.
இந்த மர இனத்தை விருத்தி செய்து அதிக எண்ணிக்கையில் மரங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது இந்த திட்டக்குழுவினரின் அடுத்த நோக்கமாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள்.