< Back
ஞாயிறுமலர்
அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட நதி
ஞாயிறுமலர்

அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட நதி

தினத்தந்தி
|
3 Sept 2023 8:26 AM IST

உலகில் உள்ள 7 கண்டங்களில் மக்கள் எளிதில் அணுக முடியாத, பனி சூழ்ந்த கண்டமாக அண்டார்டிகா விளங்குகிறது.

அண்டார்டிகாவில் நிலவும் காலநிலையும், அடர் பனியும் ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக உள்ளது. அதனால் புதிரான நிலப்பகுதி கொண்ட அந்த கண்டத்தை பற்றி தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த கண்டத்தின் சராசரி வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 60 டிகிரி செல்சியல் நிலையிலேயே ஊசலாடுகிறது. அதனால்தான் அண்டார்டிகாவின் பெரும்பகுதி ஆண்டு முழுவதும் உறைந்து கிடக்கிறது. எனினும் 70 சதவீதம் நன்னீரை கொண்ட இங்கு நீளமான நதி ஒன்று பாய்ந்தோடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அது பற்றிய சுவாரசிய தகவல்கள்:-

இம்பீரியல் காலேஜ் லண்டன், வாட்டர்லூ பல்கலைக்கழகம் (கனடா), மலேசியாவின் தெரெங்கானு பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த நதியை கண்டுபிடித்துள்ளனர். அது பற்றிய தகவல் `நேச்சர் ஜியோசயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நதி அண்டார்டிகாவின் பனிக்கட்டி பிரதேசத்தின் அடிப்பகுதிக்குள் மறைந்திருக்கிறது.

இந்த நதி 460 கிலோமீட்டர் (285.8 மைல்கள்) நீளம் கொண்டது. அதாவது தேம்ஸ் நதியின் நீளத்தை விட (346 கி.மீ./215 மைல்கள்) பெரியது.

இந்த நதி இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்படாததற்கு காரணம், யாரும் எளிதில் அணுகமுடியாத கடினமான பகுதியில் அமைந்துள்ளது.

பனிக்கட்டிகளுக்கு அடியில் ஓடும் இந்த நதி இரண்டு வழித்தடங்களில் உற்பத்தி ஆகிறது.

* புவிவெப்பம் மற்றும் உராய்வு மூலம் பனிப்பாறையின் அடியில் உள்ள பனியை உருகச் செய்து ஆறாக உருமாறுகிறது.

இந்த நதி கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் பனிக்கட்டிகளைக் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது. இது வெட்டல் கடல் வரை சென்றடைகிறது.

வான்வழி ரேடார் கருவிகளை பயன்படுத்தித்தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த நதியை கண்டுபிடித்துள்ளனர். பனிக்கட்டி வழியாக உற்றுப் பார்க்க அனுமதிக்கும் பிரத்யேக தொழில்நுட்பம் கொண்ட சாதனத்தை கொண்டு ஆய்வு செய்தபோது எதிர்பாராதவிதமாக இந்த நதியை கண்டறிந்திருக்கிறார்கள்.

பனிக்கட்டிக்கு அடியில் தொடங்கும் நதி, ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் நினைத்ததை விட வேகமான நீர் ஓட்டத்தை கொண்டுள்ளது.

நதியில் குவியும் பனியின் அளவு மற்றும் அது உருகுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பொறுத்து அதன் நீர் ஓட்டம் அமையும் என்று கருதுகிறார்கள்.

ஆய்வில் கிடைத்த சுவாரசியமான தகவல் என்னவென்றால், இந்த நதி அண்டார்டிக் பனிக்கட்டியின் அடிப்பகுதியில் தண்ணீரை சேகரிக்கிறது. இதன் அளவு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை ஒத்திருக்கிறது.

இந்த நதி கண்டுபிடிப்பு அண்டார்டிகாவை மையப்படுத்தி நடக்கும் ஆய்வில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. ஏனெனில் பனிக்கட்டிகளின் அடிப்பகுதியில் இருந்து ஆறுகளை உருவாக்குவதற்கு போதுமான நீர் உருகுகிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. பனி உருகுவதை மேலும் துரிதப்படுத்தலாம்.

அண்டார்டிக் பனிக்கு அடியில் பாயும் மற்ற ஆறுகளைக் கண்டறிந்து சுற்றுச்சூழலுக்கும், முழு கிரகத்திற்கும் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டறியும் முயற்சியை ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்