< Back
ஞாயிறுமலர்
சாதனை படைத்த துலிப் தோட்டம்
ஞாயிறுமலர்

சாதனை படைத்த துலிப் தோட்டம்

தினத்தந்தி
|
27 Aug 2023 6:47 AM IST

காஷ்மீரின் ஸ்ரீநகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம், ஆசியாவின் மிகப்பெரிய பூங்காவாக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

தால் ஏரிக்கும், ஜபர்வான் மலைகளுக்கும் இடையே 30 ஹெக்டேர் பரப்பளவில் இந்த துலிப் தோட்டம் பரந்து விரிந்து காணப்படுகிறது.

சுமார் 15 லட்சம் துலிப் மலர்கள் அழகுற பூத்துக்குலுங்குகின்றன. அவை 68 வகைகளை கொண்ட விதவிதமான துலிப் மலர்களால் அழகுற மிளிர்கின்றன. வண்ண வண்ண நிறங்களில் துலிப் மலர்கள் ஒருசேர பூத்துக்குலுங்குவதால் அந்த பகுதி முழுவதும் ரம்மியமான சூழல் நிலவுகிறது. அதனால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் துலிப் மலர் தோட்டத்தை பார்வையிட்டுள்ளனர். இதனை மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

''ஸ்ரீநகரில் உள்ள துலிப் மலர்களின் அழகிய சொர்க்கம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 15 லட்சம் துலிப் மலர்கள் 68 தனித்துவமான வகைகளில் வியக்கத்தக்க தொகுப்பை காட்சிப்படுத்துகின்றன. இந்த அழகிய தோட்டம் ஒரு லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது'' என்றும் டுவீட் செய்துள்ளார்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த துலிப் மலர் பூங்கா 2007-ல் திறக்கப்பட்டது. இது ஏழு அடுக்குகளை கொண்ட சாய்வான தரையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகம் ஆண்டுதோறும் துலிப் திருவிழாவை நடத்துகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக தோட்டத்தில் உள்ள துலிப் மலர்கள் கண்கவர் அலங்காரத்துடன் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மேலும் செய்திகள்