பெங்களூருவில் அமைக்கப்படும் பிரமாண்ட பார்வையாளர் கோபுரம்
|இந்தியாவின் சிலிக்கான் நகரம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உள்நாடு மற்றும் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூருவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் பிரமாண்ட டவர் அமைக்கப்பட உள்ளது. சுமார் 250 மீட்டர் உயரத்துக்கு இந்த வானுயர கோபுரத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இது கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் நாட்டிலேயே மிக உயரமான கோபுரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெங்களூரு நகரின் மத்தியில் 8 முதல் 10 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறும், திட்டத்திற்கான நிதியை மதிப்பிடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஸ்கை டெக் எனப்படும் இந்த வானுயர கோபுரத்தை நவீன முறையில் வடிவமைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அதற்கான திட்டப்பணிகள் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கூப் ஹிம்மெல்ப்லவ் என்ற ஆர்க்கிடெக்சர் நிறுவனம் மற்றும் வேர்ல்டு டிசைன் ஆர்கனைசேஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த பிரமாண்ட பார்வையாளர் கோபுரம் ஆலமரத்தை அடிப்படையாக கொண்டு நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட உள்ளது. அதன் கிளைகள் போல் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதிவரை பரவி இருக்குமாறு பின்னிப்பிணைந்த கட்டமைப்புகளை கொண்டதாக அமைகிறது. ஆலமரத்தை போல் அடிப்பகுதி, தண்டு, மலர் என மூன்று பிரிவுகளாக பிரித்து பிரமாண்ட கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் மலர் பகுதி உச்சி பகுதியில் அமைய உள்ளது. பூ ஒன்று மலர்வது போல் அது வடிமைக்கப்படுகிறது. அதில் பல்வேறு அடுக்குகள் இடம் பெறும். இந்த கோபுரத்தின் கீழ் பகுதியில் இருந்து மேல் பகுதி வரை பார்வையாளர்கள் சென்று வர முடியும்.
மேலும் ஒவ்வொரு பிரிவிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற உள்ளன. அதாவது உணவகம், ஷாப்பிங் சென்டர்கள், தியேட்டர், தோட்டம், ரோலர் கோஸ்டர் ஸ்டேஷன் உள்பட பல்வேறு வகையான பொழுதுபோக்கு மையங்கள் நிறுவப்படும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒளிரும் மலர் போல் மலர் போன்ற பகுதியை விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பார்வையாளர் கோபுரத்தின் மாதிரி கட்டமைப்பை கொண்ட வீடியோவை துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
''பெங்களூரு ஸ்கைடெக் திட்டம் பற்றி மதிப்பாய்வு செய்துள்ளோம். இது செயல்படுத்தப்பட்டால் நாட்டிலேயே மிக உயர்ந்த பார்வை கோபுரமாக இருக்கும்'' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.