வேதனையில் முடிந்த சாதனை
|கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் பலரும் புதுவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை தனித்துவமானவர்களாக வெளிக்காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறார்கள்.
மற்றவர்கள் படைத்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் அவை அமைந்து சாதனையாளராக மாற்றிவிடுவதால் அந்த ஆர்வம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.அப்படி சாதனை முயற்சியில் ஈடுபட முயன்ற ஒருவர் பார்வை இழப்பு பிரச்சினையை எதிர்கொண்ட சோகம் நடந்திருக்கிறது. நைஜீரியாவை சேர்ந்த டெம்பு எபெரே என்பவர் ஒரு வாரம் முழுவதும் கண்ணீர் சிந்தி கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க முடிவு செய்தார். இதற்காக இடைவிடாமல் அழுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
அப்படி தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆரம்பத்தில் தலைவலி எட்டிப்பார்த்திருக்கிறது. அதனை சமாளித்தபடியே அழுகையை தொடர்ந்திருக்கிறார். அடுத்து கண்களும், முகமும் வீங்க தொடங்கி இருக்கிறது. ஆனாலும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. கண்களில் இருந்து தொடர்ந்து கண்ணீர் வெளிவந்து கொண்டே இருந்ததால் கண்கள் பாதிப்புக்குள்ளானது.
இறுதியில் அவரது பார்வை மங்க தொடங்கிவிட்டது. அப்போதும் அவர் அழுகையை நிறுத்தாததால் இரு கண்களிலும் பார்வை பறிபோயுள்ளது. நல்ல வேளையாக 45 நிமிடங்களில் மீண்டும் பார்வை திரும்பி இருக்கிறது.
ஆனாலும் கண்ணீர் சிந்தி அழும் முயற்சியை கைவிடப்போவதில்லை என்கிறார், டெம்பு எபெரே. ஒரு நாள் நிச்சயம் சாதனை படைப்பேன் என்று உறுதியாக சொல்கிறார். ஆனால் இவரது முயற்சியை கின்னஸ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை.
டெம்பு எபெரே மட்டுமல்ல நைஜீரியர்கள் பலரும் சாதனைகளை முறியடித்து கின்னசில் இடம் பிடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த மே மாதம் ஹில்டா பாசி என்ற சமையல்காரர் நைஜீரிய உணவு வகைகளை 100 மணி நேரம் தொடர்ந்து சமைக்க முயன்றார். அந்நாட்டின் பிரபலங்களும் அவரை உற்சாகப்படுத்தினர். ஆனாலும் அவரால் 93 மணி நேரம் 11 நிமிடங்கள் மட்டுமே சமைக்க முடிந்தது. எனினும் 2019-ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சமையல் சாதனையை முறியடித்துவிட்டார்.
மற்றொரு பள்ளி ஆசிரியரான ஜான் ஓபோட் இலக்கியங்களை உரத்த குரலில் படிக்க 140 மணிநேரம் செலவிட முயற்சிப்பதாக கூறினார். நைஜீரியாவில் வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.